Published:Updated:

ஆர்.கே.நகர் அஸ்திரங்கள் !

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப் கான்

ஆர்.கே.நகர் அஸ்திரங்கள் !

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப் கான்

Published:Updated:

டைத்தேர்தல் முடிவை கணிக்க, எந்த ஜோசியரும் தேவை இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல், ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளையும் அம்பலப்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை! 

எப்படி இருக்கிறது தொகுதி?

234 தொகுதிகளுக்கு, ஆர்.கே.நகர் ஒரு பதம். நான்கு ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியும், 40 ஆண்டுகளுக்கும் மேலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் ஒரு தொகுதியை எந்த லட்சணத்தில் வைத்திருக்கின்றன என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது இந்தத் தொகுதி.

ஆர்.கே.நகர் அஸ்திரங்கள் !

காசிமேடு, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை என எங்குமே நல்ல சாலைகள் இல்லை. கொருக்குப்பேட்டை ரயில்வே கேட்டுக்கு,             15 ஆண்டுகளாக எந்தத் தீர்வும் இல்லை. தண்டையார்பேட்டை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் கிடையாது. சத்யா நகரில் தண்ணீர் இல்லை. வருவதும் குடிநீரா, கழிவுநீரா எனத் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் குப்பை. அரசுக் கல்லூரி இல்லை. நூலகம் திறப்பதே இல்லை. ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுத்து நிற்கும் தொகுதியே, இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது!

தேர்தல் கமிஷன் எங்கே?

தேர்தல் தேதி அறிவிப்பதும், வெற்றி பெற்றவர் பெயர் அறிவிப்பதும்தான் தேர்தல் கமிஷனின் வேலையா? இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சம்பவங்களை, 'பார்க்க மாட்டோம்... கேட்க மாட்டோம்... பேச மாட்டோம்’ என இருப்பதுதான் அவர்கள் கொள்கையா?

ராயபுரம் முதல் சிமெட்ரி ரோடு வரை, தண்டையார்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரை, காசிமேடு முதல் புதுவண்ணை வரை என, மொத்த சாலைகளும் பளிச் ஆகியுள்ளன. உடைந்து இருந்த நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குப்பைத் தொட்டிகளைக்கூட புதிதாக வைத்துவிட்டார்கள். சாலைகளின் நடுவே இருக்கும் தடுப்புகள், புதுவண்ணம் பூசி நிற்கின்றன. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் இப்போதுதான் களைகட்டுகின்றன. இவை போதாது என மக்களை வாக்களிக்கத் தூண்ட, மாநகராட்சிப் பள்ளி பிள்ளைகளை வைத்து விழிப்புஉணர்வுப் பிரசாரம் வேறு. இந்த விழிப்புஉணர்வு, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இருந்திருக்க வேண்டாமா?

'இதுபோன்ற புகார்கள் வந்தன. அவை புதிதாகப் போடப்படாமல் பராமரிப்புப் பணிகளுக்காகவும், மக்கள் பாதுகாப்புக்காகவும் செய்யப்படுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது. என்றாலும் அங்கு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டப் பணிகள் குறித்த விபரங்களைக் கேட்டிருக்கிறேன். அதைத் தெரிந்துகொண்ட பிறகு, தேவையான அறிவுரைகளை வழங்குவேன்’ என, தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சொல்கிறார்.

மக்கள் பாதுகாப்புக்காகவே சாலைகள் போடப்படுகின்றன என்பது உண்மையானால், பக்கத்துத் தொகுதியான ராயபுரத்தின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. அங்கும் மக்கள் மிகவும் பயந்துபோய்தான் கிடக்கிறார்கள். அங்கே ஏன் சாலைகள் போடவில்லை என்பதை சந்தீப் சக்சேனாதான் 'ஆய்வு’ செய்யவேண்டும்!

நேர்த்திக்கடன் அமைச்சர்கள்!

ஏழு மாத காலம் எதிர்ப்படும் கோயில்களில் எல்லாம் விழுந்து, உருண்டு, புரண்ட அமைச்சர்களுக்கு இதோ அடுத்த சவால்... ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முழுவதும் தெருத்தெருவாக அலைந்து திரிகிறார்கள்!

ஆர்.கே.நகர் அஸ்திரங்கள் !

கோட்டைக்குப் போவது, கோப்புகளைப் பார்ப்பது, அதிகாரிகளுடன் ஆலோசிப்பது, விதிமுறைகளைக் கண்காணிப்பது, பணிகளை விறுவிறுப்பாக முடுக்கிவிடுவது... ம்ஹூம்... இதெல்லாம் பல அமைச்சர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. முளைப்பாரி தூக்குவது, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது, அக்னிச்சட்டி ஏந்துவது, யாகத்தில் உட்காருவது, பாதயாத்திரை போவது, பால்குடம் தூக்குவது, மண் சோறு உண்பது... இவற்றில்தான் பல அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி. இவர்களை மொத்தமாக அ.தி.மு.க-வின் 'பி.ஆர்.ஓ’-க்களாக நியமித்துவிட்டு, வேறு நல்ல 30 பேரை (தேறினால்?) அமைச்சராகப் போடலாம். வரும் ஒரு வருடமாவது உருப்படியாக இருக்கும்!

கடமை தவறிய கருணாநிதி!

'மரண அடி கிடைக்கும்’ என எதிர்பார்க்கும் தேர்தல்களில்கூட மகிழ்ச்சியோடு களம் கண்ட கருணாநிதி, இந்த இடைத்தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறிவிட்டார். ஆண்ட கட்சி, ஆளத் தவிக்கும் கட்சி, ஓர் இடைத்தேர்தலைப் பார்த்துப் பதுங்குவதே அவமானம். ஆளும் கட்சியின் முறைகேடுகளைப் பட்டியலிட்டு, 'இதனால்தான் நாங்கள் தேர்தலைப் புறக்கணித்தோம்’ என, தனது முடிவுக்கு வலுசேர்ப்பதில் குறியாக இருக்கிறாரே தவிர, முறைகேடுகளைத் தடுக்க, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த அவர் தயாராக இல்லை. அவர் என்பது அவர் மட்டும் அல்ல, அடுத்த தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினையும் சேர்த்துதான்!

முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதா, களம் காணும் இடைத்தேர்தல் நேரத்தில் - முதலமைச்சர் கனவில் இருக்கும் மு.க.ஸ்டாலின் ஹாங்காங் போய்விட்டது என்ன வகையான அரசியல்? 'எஸ்கேப் அரசியல்’ எனச் சொல்லலாமா? ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க தைரியமான வேட்பாளர் தி.மு.க-வில் இல்லையா? ஆர்.கே.நகரில் நாம் போட்டியிட்டே ஆகவேண்டும் என, தலைமைக்குச் சொல்லும் முதுகெலும்பு எந்த மாவட்டச் செயலாளருக்கும் இல்லையா? தேர்தல் வேலை பார்க்க பயமா? எது தடுத்தது? இந்த ஒருமாத காலத்தை, ஜெயலலிதாவை அம்பலப்படுத்தப் பயன்படுத்தியிருக்க வேண்டாமா? அட, குறைந்தபட்சம் ஏன் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்பதையேனும் ஆர்.கே.நகர் மக்களுக்குச் சொல்ல வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள் பார்வை மொத்தமும் ராதாகிருஷ்ணன் நகரை நோக்கி இருக்கும்போது, மௌனம் சாதித்துவிட்டு மதுரையிலும் கடலூரில் கூட்டம் கூட்டிக் காட்டுவதால் என்ன பயன்?

தேங்கிய தே.மு.தி.க  பின்வாங்கிய பா.ஜ.க!

ஜோடிப் புறாக்கள்போல இருந்த பா.ஜ.க-வும் தே.மு.தி.க-வும் ஒருவர் காலை ஒருவர் இழுத்து கீழே கிடக்கிறார்கள்.

ஏக இந்தியாவை ஆளும் பா.ஜ.க-வும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க-வும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. பா.ஜ.க-வேனும், 'நாங்கள் பொதுத்தேர்தல் வேலைகளில் இருப்பதால் போட்டியிடவில்லை’ என்றார்கள். விஜயகாந்த் அதுவும் சொல்லவில்லை. அவருக்கு தேர்தல் நடப்பதே தெரியுமோ என்னவோ? அரசியல் நடத்தும் ஆர்வம் இருப்பதாகவும் தெரியவில்லை.

'ஸ்ரீரங்கத்தில் எங்களை ஆதரித்தீர்கள், இந்த இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள். உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என அனைத்து ஸ்வரங்களிலும் பாடிக் காட்டினார் தமிழிசை. ஆனால், அது விஜயகாந்துக்குக் கேட்கவே இல்லைபோலும். அவர் முடிவு தெரியாததால், பா.ஜ.க பின்வாங்கியது. பா.ஜ.க-வை ஆதரிக்க விருப்பம் இல்லை என்றால், தே.மு.தி.க-வேனும் போட்டியிட்டிருக்க வேண்டும். அதுவும் இல்லை. முதலமைச்சராகத் துடிக்கிற விஜயகாந்துக்கு, ஓர் இடைத்தேர்தலில் என்ன முடிவெடுப்பது, அதில் எத்தகைய கவனத்தை, தன்னை நோக்கி ஈர்ப்பது என்பதே தெரியவில்லை. 'தே.மு.தி.க போட்டியிடுகிறது. அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்’ எனக் கேட்டிருந்தால், இன்றைய நிலவரப்படி பா.ம.க தவிர எதிர்க்கட்சிகள் அனைத்துமே அவரை வழிமொழிந்திருக்கும். ம்கூம்... விஜயகாந்த் செயல்படவே இல்லை. பாவம் தே.மு.தி.க நிர்வாகிகளும் தொண்டர்களும்!

பதுங்கிய எதிர்க்கட்சிகள்!

ஜெயலலிதாவைத் திட்டித்தீர்க்கும் ராமதாஸ், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதல் ஜெயலலிதாவைத் திட்டலாமா... வேண்டாமா என யோசிக்கும் ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவன் வரை அனைவருமே ஆர்.கே.நகர் களத்தில் இல்லை. 'இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என அறிக்கை வெளியிட்டுவிட்டு, அப்படியென்ன அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள்? இவர்களது புறக்கணிப்புக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தேர்தலில் தனியாக நிற்க இந்தக் கட்சிகள் தயாராக இல்லை. வெற்றி பெற முடியாது என்பது வேறு. மரியாதைக்குரிய வாக்குகளைக்கூட வாங்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். கேவலமான வாக்குகளை வாங்கினால், சட்டமன்றத் தேர்தல் பேரத்தின் வலிமை குறைந்துவிடும் என்பதால், இந்த இடைத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். யாரையாவது ஆதரிக்கலாம் என்றால்..? பொதுத் தேர்தலில் யாரோடு கூட்டணி என்ற குழப்பமும் இவர்களுக்கு இன்னமும் தீரவில்லை. இந்த இரண்டு பூச்சாண்டிகள்தான் அவர்களின் புறக்கணிப்புக்குக் காரணம். தி.மு.க-வைப் போலவே ஜெயலலிதா மீது அழுத்தமாக தங்கள் விமர்சனத்தைப் பதிவுசெய்யும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவறவிட்டுவிட்டன!

ஆறுதல் அளிக்கும் இடதுசாரிகள்!

'நாங்கள் வெற்றி பெறுவதற்காக நிற்கவில்லை’ என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் சொல்லியிருக்கிறார். எந்தத் தேர்தலும் ஒருவரின் வெற்றி, ஒருவரின் தோல்வியோடு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. சகலவிதமான நல்லது கெட்டதுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதே தேர்தல். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கிளைக்கழகம்போல செயல்பட்டுவந்த விமர்சன அழுக்கைத் துடைப்பதற்கு அந்தக் கட்சிக்கு இந்தத் தேர்தல் பயன்பட்டுள்ளது. ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான முன்னோட்டம் என இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் அறிவித்துள்ளார். ஒரே ஓர் இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க தயவு இல்லாமல் நின்றுவிடுவதால் மட்டுமே அத்தகைய அணியை உருவாக்கிவிட முடியாது. கம்யூனிஸ்ட்டுகள் மிகத் தொடர்ச்சியாக இப்படியான கசப்பு மருந்தை உட்கொண்டால் மட்டுமே, இறுதியில் இனிப்பை ருசிக்க முடியும்!

சபாஷ் டிராஃபிக் ராமசாமி!

ஆர்.கே.நகர் அஸ்திரங்கள் !

'அவர் இயல்பானவரா... வறட்டுப் பிடிவாதக்காரரா?’ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். தி.மு.க., அ.தி.மு.க என எந்த ஆட்சியாக இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதுடன், தனது பொதுநல சேவைகளைத் தொடர்ந்து செய்பவர் டிராஃபிக் ராமசாமி. இன்று அவர் தி.மு.க-வின் ஆதரவைக் கேட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெயலலிதாவோ, கருணாநிதியோகூட கூட்டணி இல்லாமல் போட்டியிடத் தயாராக இல்லாதபோது சாதாரண ராமசாமி என்ன செய்வார்? இப்படி ஒருவர் இந்தத் தேர்தலில் நிற்காமல்போயிருந்தால், தேர்தல் நடப்பதே தெரிந்திருக்காது.

பிளாக்மெயில் ராமசாமி, வசூல் ராமசாமி, ஓசி சோறு ராமசாமி, ஆபாச சாமி என, அவரை 'நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தன் வறுத்தெடுப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவர் ஆளும் கட்சிக்கு எத்தகைய 'எரிச்சல்’ ராமசாமியாக இருக்கிறார் என!

நியாயமா மக்களே?

ஆர்.கே.நகர் அஸ்திரங்கள் !

எல்லா தேர்தலிலும் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்துதான் ஜோக் உற்பத்தியாகும். முதன்முதலாக மக்களைக் கிண்டல் செய்யும் ஜோக்குகளையும் உருவாக்கிவிட்டார்கள். 'எப்ப வருவீங்க... எப்படி வருவீங்க... எப்ப தருவீங்க... எப்படித் தருவீங்க..?’ என 'கவுண்டமணி’ குரலில் மக்கள் கேட்பதுபோல ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வாக்களிக்க பணம் கொடுக்கத் தொடங்கியது முதல் குற்றம் என்றால், அதை வாங்கத் தொடங்கியது அடுத்த குற்றம். எதிர்பார்க்கத் தொடங்கியது உச்சகட்ட அவமானம். காசு வாங்கி வாக்களிப்பது ஜனநாயகத்தை விற்பது என்ற பெரிய வார்த்தைக்குள் போகத் தேவை இல்லை. காசு வாங்கி வாக்களிப்பது என்பது, காசு கொடுத்தவர் செய்த எல்லா தவறுகளுக்கும் உடன்பட்ட பங்காளிகள் என அர்த்தம்.

இதற்கு உடன்படுகிறீர்களா மக்களே?