Published:Updated:

காங்கிரஸ் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது: புதுவை முதல்வர் நாராயணசாமி

ஜெ.முருகன்
காங்கிரஸ் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது: புதுவை முதல்வர் நாராயணசாமி
காங்கிரஸ் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது: புதுவை முதல்வர் நாராயணசாமி

காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாகவே 203 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி, “கவுஹாத்தியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 203 பொருள்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தத்தினால்தான். இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஆனால், பா.ஜ.க குஜராத் தேர்தலில் இதைவைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறது. மக்களிடம் அது இனி எடுபடாது. மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளால்தான் புதுச்சேரியில் மழையினால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த கோடை காலத்தின்போது புதுச்சேரியில் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் அளவுக்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே புதுச்சேரி அரசு 1.64 கோடி ரூபாயை செலுத்தியிருந்தது. அந்தத் தொகை 2 ஆண்டுகளில் 7.53 கோடி ரூபாயாக நமக்கு திரும்பக் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், காப்பீட்டு நிறுவனம் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு 7.53 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இந்தத் தொகை அடுத்த வாரம் முதல் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைய இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை விரைவில் ராகுல்காந்தி ஏற்பார். 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அவர் பிரதமராவது உறுதி’ என்றார்.