Published:Updated:

இந்தியாவில் அதிகரிக்கும் போர்வெல் மரணங்கள்! அதிர்ச்சியளிக்கும் ‘அறம்’ டேட்டா #VikatanExclusive

இந்தியாவில் அதிகரிக்கும் போர்வெல் மரணங்கள்! அதிர்ச்சியளிக்கும் ‘அறம்’ டேட்டா #VikatanExclusive
இந்தியாவில் அதிகரிக்கும் போர்வெல் மரணங்கள்! அதிர்ச்சியளிக்கும் ‘அறம்’ டேட்டா #VikatanExclusive

மதுமிதா - விழுப்புரம், கிர்டான் ப்ரனாமி - குஜராத், தரவத் மகேஷ் - ஆந்திரா, அன்கிட் - ராஜஸ்தான்... நீளும் இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை எல்லாம் நீங்கள் அறிந்திராமல் இருக்கலாம். ஆனால், இப்போது கூறப்போகும் பெயர் இவர்களை உங்களுக்கு அடையாளப்படுத்தலாம். ஆம்... 'அறம்' திரைப்படத்தில் வரும் 'தன்ஷிகா' என்ற கதாபாத்திரத்தை ஒட்டிய வயதுடையவர்கள்தான் இவர்கள். கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியா தொழில்நுட்பத்தில் மேலோங்கி வருகிறது, 'உலகை ஆளும் டெக்னாலஜி நபர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்தான்' என மார்தட்டிக் கொள்ளும் நமக்கு போர்வெல் குழாயில் விழுபவர்களை மீட்க இருப்பது இரண்டே முறைதான். ஒன்று கயிறு கட்டிக் குழந்தையை இழுப்பது, இன்னொன்று அதனருகில் அதே போன்றதோர் ஆழ்துளை கிணறு தோண்டி ஆட்களை அனுப்பி மீட்பது.  

வளர்ந்து வரும் நாடுகள் இதுபோன்ற பல்வேறு விஷயங்களுக்கான ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கிக் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது. ஆனால், நம் நாட்டிலோ இன்னமும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்குபவர்களுக்கும், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுபவர்களை மீட்கவும் பழைய முறையையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறுசிறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட அவை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதில்லை. எனவே, இந்தியாவின் ஆழ்துளை கிணறு மரணங்களையும் தடுக்க முடியவில்லை.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 122 என்கிறது அரசு. அதிகப்பட்சமாக உத்திரப் பிரதேசத்தில் 41 பேர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கைதான் மிக அதிகம். அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், 63 குழந்தைகள் பலியானதும் இந்த மாநிலத்தில்தான். 

பல இடங்களில், ஆழ்துளை கிணறுகள் பராமரிக்கப்படாமல் மூடி வைக்கப்படுகின்றன. இந்தியாவில், நிலத்தடி நீர்மட்டமானது ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. இப்படியான சூழலில், நீரில்லாமல் வற்றிப்போகும் ஆழ்துளை கிணறுகளைப் பாதுகாப்பான முறையில், மூடி வைக்காமல், அப்படியே விட்டு விடுவதும் இதுபோன்ற விபத்துகளுக்கான அடிப்படையாக இருக்கிறது.

'ஆழ்துளைக் கிணறுகளை மூடிவைக்க வேண்டும்' என்பதுதான் சட்டம். ஆனால், அலட்சியமாக அப்படியே விடுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2 வருடங்களில் மட்டும் 14 வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து இறந்துள்ளனர். இப்படித் தவறி விழுபவர்களில் 3 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே வெற்றிகரமாக மீட்கப்படுகின்றனர். 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டில் ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கையானது 48 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஆழ்துளை கிணறுகளில் விழுந்தவர்களைக் காப்பாற்ற சராசரியாக 36 மணி நேரம் செலவிடப்படுகிறதாம். இந்தக் காலதாமதமானது, குழியினுள் விழுந்தவரை உயிரோடு மீட்பதற்கான வாய்ப்பைப் பெருமளவில் குறைத்துவிடுகிறது. ஆழ்துளையினுள் தவறி விழுபவர்கள் 50 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கிக்கொண்டால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக் குறைவு ஏற்படும். இம்மாதிரியான சூழல்களில், தேவையான ஆக்ஸிஜனை உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், சமீபத்திய ஆபரேஷன்களில் உரிய நேரத்தில், ஆக்ஸிஜன் வழங்கத் தவறியதும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. உயிர்காக்கும் மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜன் இருப்பைக் கவனிக்காதவர்கள், ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களுக்கா உடனடியாக ஆக்ஸிஜன் அளித்துவிடப் போகிறார்கள்?

மதுரை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான சிறிய அளவிலான கருவிகளை வடிவமைத்துள்ளனர். ஆனால், இவற்றை ஆழம் அதிகமுள்ள இடங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ''இதுபோன்ற கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளித்து உதவினால், கண்டுபிடிப்பில் உள்ள சிறு குறைகளும் களையப்பட்டு முழுமையானதொரு கருவியைக் கண்டுபிடிக்கமுடியும்; பல உயிர்களையும் காப்பாற்ற முடியும்'' என்கிறார்கள் இந்த இளம் விஞ்ஞானிகள்.

'பொருளாதாரம், வாழ்வாதாரம், தொழில் வசதி எனப் பல்வேறு விஷயங்களிலும் தன்னிறைவு கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா' என்று பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால், அதே இந்தியா அடிப்படையான விஷயங்களில் படுமோசமாக பின்தங்கியுள்ளது என்பதை எல்லோருமே கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அலட்சியங்களே 'ஆழ்துளைக் கிணறு விபத்து'களில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. அடுத்த ஆழ்துளை விபத்து நடைபெறுவதற்குள் இவ்விஷயத்தில், நல்லதொரு தீர்வைக் கண்டுபிடிக்கும் செயலில் இறங்கவேண்டும் இந்திய அரசு!