Published:Updated:

'இந்தியக் கடலோரக் காவல் படையினர்மீது  கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்'- மத்திய அரசைச் சாடும் வைகோ

'இந்தியக் கடலோரக் காவல் படையினர்மீது  கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்'- மத்திய அரசைச் சாடும் வைகோ
'இந்தியக் கடலோரக் காவல் படையினர்மீது  கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்'- மத்திய அரசைச் சாடும் வைகோ

''தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர்மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து, அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்'' என்று  மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

'இந்தியக் கடலோரக் காவல் படையினர்மீது  கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்'- மத்திய அரசைச் சாடும் வைகோ

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்டுள்ள அறிகையில், ''நவம்பர் 13-ம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களைக் கடலோரக் காவல் படையினர்  லத்திக் கம்பால் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை அடித்துள்ளனர். இன்று 14.11.2017 காலை  8.30 மணி அளவில், மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் அவர்களிடம் நான் அலைபேசியில் தொடர்புகொண்டபோது, இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படகுகளின்மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டாக்களின் சிதறல்களைப் படகுகளில் இருந்து மீனவர்கள் எடுத்து வைத்துள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தும் காயப்பட்ட மீனவர்களை நள்ளிரவுக்கு மேல் இரண்டு மணிக்குத்தான் கடலோர காவல்படையினர் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர். ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையினர் இந்தச் சம்பவத்தை ஒரேயடியாக மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், மீனவர்களைத் தாக்கவில்லை என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பகுதியில் தாக்குவதும் சுட்டுக் கொல்வதும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெறும் அக்கிரமம் ஆகும். ஒருமுறைகூட இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எள்ளளவு நடவடிக்கையும் மேற்கொண்டது கிடையாது. இலங்கைக் கடற்படையினரை எச்சரித்ததும் கிடையாது.

தற்போது, வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குத் துணிந்ததற்கு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் இந்திய அரசின் அலட்சியமும், இந்திய நாட்டுக் குடிமக்களான மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு இந்திய அரசுக்குத் துளியும் இல்லாததுதான் முக்கியக் காரணமாகும். இதுவரை, இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை தடுக்க முயன்றது இல்லை, வேடிக்கைபார்த்தது. தற்போது, இந்தியக் கடலோரக் காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து, அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை, குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்துகின்றேன்'' என்று கூறியுள்ளார்.