Published:Updated:

“மழைநீர் வடிகால் வாய்களின் நீளம் எவ்வளவு?” பதில் தெரியாமல் திணறிய உள்ளாட்சித்துறை அமைச்சர்

“மழைநீர் வடிகால் வாய்களின் நீளம் எவ்வளவு?” பதில் தெரியாமல் திணறிய உள்ளாட்சித்துறை அமைச்சர்
“மழைநீர் வடிகால் வாய்களின் நீளம் எவ்வளவு?” பதில் தெரியாமல் திணறிய உள்ளாட்சித்துறை அமைச்சர்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 27-ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இரு வாரங்களுக்குள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வெளியேற வழியில்லாமல், தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாகப் பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிக் காணப்படும் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

2015-ம் ஆண்டு பெய்த மழை அளவுக்குப் பெய்யாத நிலையில், சில நாள்கள் பெய்த மழைக்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், மழைநீர் வடிகால்களில் சென்று சேராமல் மக்கள் அவதிப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. சென்னையின் மையப்பகுதியிலேயே இந்தநிலை என்றால் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், வீடுகளில் தங்க முடியாத நிலையில், புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்கிடமின்றி சாலைகளில் மழைநீர் தேங்குவதால், முக்கியச் சாலைகளில் அன்றாடப் பணிகளுக்காகச் செல்லும் வாகனஓட்டிகள், நடைபாதைவாசிகள் எனப் பலரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். "மழை பெய்தாலே இப்படியான அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதற்கு, தமிழக அரசின் உள்ளாட்சி நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிப் போய், தோல்வி அடைந்திருப்பதே காரணம்" என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

“சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பாதிப்புகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள், முன்கூட்டியே தூர்வாரப்படாதது ஏன்? இதுபோன்ற பாதிப்புகள் எப்படி ஏற்படுகின்றன?" என்று தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் கேட்டோம்.

அப்போது பேசிய அவர், “2011-ம் ஆண்டுக்கு முன்புவரை சென்னையில் சுமார் 1300 இடங்கள் தண்ணீர் தேங்கும் பகுதிகளாக இருந்துள்ளன. மழைநீர் தேங்கத் தொடங்கினால், அந்த இடங்களில் சுமார் 15 நாள்களுக்குத் தண்ணீர் வடியாது. அப்படியான நிலையில்தான் சென்னையின் மழைநீர் வடிகால்கள் இருந்தன. 

ஜெயலலிதா 2011-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் சென்னையின் மழைநீர் செல்லும் வழி மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த ஆணையிட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, உள்ளாட்சித்துறை இலாகாவை நான் ஏற்ற பின்னர், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமளவு கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகளை மேம்படுத்தியுள்ளேன். புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ளாட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு, மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்காக ஆயிரத்து 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

“எதிர்க்கட்சி போல் கேள்வி கேட்காதீர்கள்...”

இந்த நிதியானது, சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டது. தண்ணீர் சேமிக்கப்படும் குளங்கள், ஏரிகளில் இருந்து 14 ஆயிரம் டன் அளவுக்குக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி உள்ளோம்" என்றார்.

மேலும், அமைச்சர் வேலுமணியிடம் "சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களின் மொத்த நீளம் எவ்வளவு?" என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு  "33 ஆயிரம்" எனத் திணறியவர், அருகில் இருந்த உதவியாளர்களிடம் அதுபற்றிக் கேட்டார். அருகில் இருந்தவர்களுக்கும் மழைநீர் கால்வாய் குறித்த புள்ளிவிவரம் ஏதும் தெரியவில்லை. இந்நிலையில், "இரண்டு நிமிடங்களில் உங்களை மீண்டும் அழைக்கிறேன். உங்களுக்கு அதுபற்றிய முழு விவரங்களை ஒரு அறிக்கையாக 'வாட்ஸ்அப்' எண்ணிற்கு அனுப்பிவைக்கிறேன்" என்றார். 

அவரிடம் நாம் தொடர்ந்து வேறு கேள்விகளை முன்வைத்தோம். 

"2015-ம் ஆண்டு பெருமழை, வெள்ளத்திற்குப் பின்னர், இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் முன்னரே, மழைநீர் வடிகால்களைத் தூர்வாராததே தற்போது மழைநீர் தேங்குவதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே, அதுகுறித்து உங்கள் கருத்து?" 

"மற்ற நிருபர்களைப் போன்று நீங்களும் கேட்காதீர்கள். தண்ணீர் தேங்குவது உண்மைதான். ஆனால், கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது தண்ணீர் தேங்குவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்த வேண்டிய மழைநீர் வடிகால்களைக் கட்டிவிட்டால், முழுமையாக சென்னையில் தண்ணீர் தேங்காமல் தவிர்க்கப்படும். ஆனால், அதற்கு நிதி தேவையாக உள்ளது. எனினும், எதிர்காலத்தில் அத்தகையப் பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

“மழைக்கு முன்னதாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே?”

"அது தவறான குற்றச்சாட்டு. முன்னெச்சரிக்கை திட்டம் எப்போது தொடங்கப்பட்டது, எப்போது முடியும் என அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது" என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க முயன்றார். 

“ ‘ஏற்கெனவே மழை, வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு, அதன் தாக்கங்களை உணர்ந்த பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளதே?"  

"என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை நான் கூறியுள்ளேன். அப்படி இருக்கும்போது, எதிர்க்கட்சிகளைப் போன்று நீங்கள் கேள்வி கேட்காதீர்கள்?" என்று கூறிவிட்டு போனைத் துண்டித்தார்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோவிடம் பேசியபோது, “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யத் தொடங்கியுள்ளது இந்த அரசாங்கம். 'நான்கு சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்' எனப் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்கள் அமைச்சர்கள். 2015-ம் ஆண்டு கனமழை, வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் பல தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு இருக்க, இதுவரை உள்ளாட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கென்று 2,000 கோடி ரூபாய் செலவு செய்வதாக அரசுத்தரப்பில் கூறி வருகிறார்கள். உண்மையிலேயே இந்த அளவு தொகையைச் செலவு செய்திருந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது. அல்லது தண்ணீர் தேங்கும் அளவாவது குறைந்திருக்கும் அல்லவா?

மற்ற திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைக்கான கணக்கு தெரியவரும். ஆனால், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், சாலைகளை

ச் சீரமைத்தல் போன்ற திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை குறித்த விவரம் வெளியே தெரிவதில்லை. 1000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்துவிட்டு, 200 கோடி ரூபாய்கூட செலவு செய்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற மோசடியால்தான் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகிறது. கொசஸ்தலை - கோவளம் வரையிலான மழைநீர் வடிகால்கள் அமைக்கும் திட்டத்திற்கு 3,200 கோடி ரூபாய் ஒதுக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால், அவரின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும்  இப்போதைய அரசு, அந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.

சென்னைக்கு 5,000 கிலோமீட்டர் மழைநீர் வடிகால்கள்அமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், தற்போது 660 கிலோ மீட்டர் தொலைவிற்குத்தான் மழைநீர் வடிகால்கள் உள்ளன. எஞ்சிய தொலைவிற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டமைப்பு பாதிப்புகள் காரணமாகவே, ஓரிரு மணி நேரம் மழை பெய்தாலே முக்கியச் சாலைகளிலும், சிறிய தெருக்களிலும் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்படுகிறது. இது இப்படி என்றால், மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளரான சி.ஏ.ஜி சமர்ப்பித்த அறிக்கையில் இந்த அரசாங்கத்தை தலை குனிய வைக்கும் அளவில் ஒரு வாசகம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. "அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி இல்லாமல் மழை நீர் வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் 55 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு" என்பதே அந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலாகும். இது எவ்வளவு பெரிய கேலிகூத்தானது?' என்றார்.

இந்த அரசு மக்களுக்காகப் பணியாற்றுகிறது என்பதை தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர்ந்துள்ளார்களா என்று தெரியவில்லை. மழை, வெள்ள பாதிப்புகளால் நன்றாக சூடுபட்ட பின்னரும்கூட, வெள்ளநீர் வடிந்து செல்ல மழைநீர் கால்வாய்களை சீரமைக்காமலும், நீர் நிலைகளைப் பராமரிக்காமலும் இருப்பது எந்த அடிப்படையில் நியாயம்? சம்பந்தப்பட்ட அமைச்சரும், அரசு அதிகாரிகளும்தான் பதிலளிக்க வேண்டும்....