Published:Updated:

முள்படுக்கையில் பி.ஜே.பி - யின் பிதாமகன்கள் !

ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப்கான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

த்வானி ஊதியிருப்பது அபாயச் சங்கு! தேசம் போகும் போக்கின் 'டெம்ப்ரேச்சர்’ காட்டுகிறது அவரது ஒவ்வொரு சொல்லும். மோடிக்கு எதிரான கோபத்தின் குமுறலை, அரசியலாக மட்டுமே குறுக்கிப் பார்த்துவிட முடியாது. கெட்டது நடக்கும்போது எங்கோ ஒரு மூலையில் 'உள்ளுணர்வு’ சொல்லும் அல்லவா? அப்படிப்பட்ட அசரீரி... அத்வானியின் குரல்! 

'மீண்டும் ஓர் அவசரநிலைப் பிரகடனத்துக்கு நாடு தயாராகிவரக்கூடும். இதற்கு முக்கியக் காரணம், தற்போது உள்ள அரசியல் சூழல் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. மக்களாட்சியில் சில எதிர்மறைச் சக்திகளின் வலிமை பெருகிக்கொண்டிருக்கிறது. மேலும், சில அரசியல் சக்திகளின் தலைமையின் போக்கில் மாற்றம் ஏற்படும்போது, அது அவசரநிலைப் பிரகடனத்துக்கு வழிவகுக்கும். காரணம், தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிலரின் கைகளில் இருந்து அதிகாரம் திசை மாறுகிறது. இதை யாரும் மறுக்க முடியாது. தற்போது உள்ள சூழ்நிலையில் நான் அவசரநிலைப் பிரகடனம் குறித்து வலியுறுத்திக் கூறக் காரணம் - அரசியல் சூழல் மாறிக்கொண்டுவருகிறது. இங்கு நீதிமன்றம் மற்றும் ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் வலிமை மெள்ள மெள்ள வலுவிழந்துவருகிறது. இதனால், இந்திரா காந்தியின் காலத்தில் ஏற்பட்ட அதே நிலை மீண்டும் ஏற்படும் என என் உள்ளம் கூறுகிறது’ - அத்வானியின் அலறல் இதுதான்!

அவசரநிலைப் பிரகடனத்தின் அராஜகப் பல் பதிந்த உடல் அத்வானியுடையது. 'நான் படித்ததில் மிக முக்கியமானது’ என வில்லியம் எல்.ஷீரர் எழுதிய, 'The Rise and Fall of the Third Reich' என்ற புத்தகத்தை அத்வானி அடிக்கடி குறிப்பிடுவார். நாஜி ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசக் காரியங்களைச் சொல்லும் புத்தகம் அது. ஹிட்லர் செய்ததும், இந்திரா காந்தி செய்ததும் ஒன்றுதான் என, தனிப் புத்தகமே எழுதியவர் அத்வானி. 40 ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த நடுக்கம் அவருக்கு இருப்பது இயல்புதான்.

முள்படுக்கையில் பி.ஜே.பி - யின் பிதாமகன்கள் !

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள், தனது நாட்குறிப்பில், 'நாங்கள் உணர்ந்த அளவில் இது இந்திய ஜனநாயக வரலாற்றின் கடைசி தினம். இந்த அச்சம் பொய்த்துப்போகட்டும்’ என அத்வானி எழுதினார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்வானியின் நம்பிக்கைதான் பொய்த்துப் போயிருக்கிறது.

'மீண்டும் எமர்ஜென்சி’ என அத்வானி சொல்லியிருப்பது, எதிரியான காங்கிரஸ் ஆளும் நேரத்தில் அல்ல; எந்தக் கட்சியை வளர்க்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ, அந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் கோலோச்சும் நேரத்தில்தான் அத்வானியின் கோபம் வெடித்திருக்கிறது. டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியும், பண்டிட் தீனதயாள் உபாத்யாவும், பால்ராஜ் மதோக்கும், ஆர்.கே.மல்கானியும், அடல் பிகாரி வாஜ்பாயும், பெய்ரோன் சிங் ஷெக்காவத்தும், லால் கிஷன் அத்வானியும் வளர்த்தெடுத்த இயக்கம், இன்று 'நரேந்திர மோடி’ என்ற  ஒற்றை  மனிதரின் ஆளுகைக்குள் போய்விட்டதே என்ற ஆதங்கம், ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் அத்வானியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. 'நான் சொன்னது மோடி அரசு மீதான கருத்து அல்ல’ என பிறகு அத்வானி மறுத்தாலும், அரசியல் விமர்சனங்கள் யாருடைய ஆட்சியில் வெளிப்படுகிறதோ அவர்களையே நேரடியாகவோ மறைமுகமாகவோ

சுட்டுகின்றன என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே, அத்வானி சொன்னதற்கு அத்வானியின் விளக்கம் அவசியப்படவில்லை.

கட்சியில் அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா... எனப் பலரும் ஒதுக்கப்பட்டு, அடக்க ஒடுக்கமானவர்களை மட்டுமே கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில்

முள்படுக்கையில் பி.ஜே.பி - யின் பிதாமகன்கள் !

நிறைவேற்ற முடியாவிட்டாலும் ஒரே சட்டத்தை மூன்று முறைக்கு மேல் திரும்பத் திரும்பக் கொண்டுவந்து, குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர்களால் குட்டுகள் வாங்கி, முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்திலும்... மக்கள் மன்றத்திலும் வாயே திறக்காமல், பல நாட்கள் நாடாளுமன்றத்துக்கே வராமல், கூட்டுப் பொறுப்புள்ள ஆட்சி அதிகாரத்தை தனதுடைமை ஆக்கி, சகல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளையும் தானே தொடங்கி, அவசியமற்ற நாடுகளுக்குக்கூட அவசரப் பயணங்களை மேற்கொண்டு, எந்த நாட்டுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துச் செல்லாமல், தனக்கு நெருக்கமான தொழிலதிபரை அதிகாரபூர்வப் பயணங்களில்கூட உடன் அழைத்துச் சென்று, அடுத்தடுத்து அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்து, நீதித் துறை நியமனங்களில் தலையிட்டு, சிலை வைப்பது... பெயர் சூட்டுவது... போன்ற கவர்ச்சிகளில் இறங்கி, காந்தி ஜெயந்தி அன்று துடைப்பத்தைக் கொடுத்து, கோட்சேவின் குருநாதர் நினைவுநாளை யோகா தினமாக அறிவித்து... மொத்தத்தில் காட்டப்படும் எல்லா படங்களுமே 'மோனொபொலி’ அரசியலுக்கு அச்சாரம் என்பதை, அத்வானியால்கூட சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இன்னும் பல படிகள் மேலே போய்விட்டார் யஷ்வந்த் சின்ஹா. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர். 'தற்போதைய மத்திய அரசு, 75 வயதைக் கடந்த மூத்த தலைவர்களை மூளைச்சாவு அடைந்தவர்களாகக் கருதுகிறது. அவ்வாறு கருதப்படும் தலைவர்களில் நானும் ஒருவன்’ என்ற சின்ஹா, 'மத்திய அரசு கூறிவரும் பொருளாதார வளர்ச்சி, வெறும் புள்ளிவிவரங்களின் அளவிலேயே இருக்கிறது. நடைமுறையில் தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன’ என்றும் சொல்லி இருக்கிறார். இவரது மகன் ஜெயந்த் சின்ஹா, இப்போது மத்திய நிதித் துறை இணை அமைச்சராக இருக்கிறார். மகன் மத்திய அமைச்சராக இருக்கும்போதே, அப்பாவுக்கு நிலைமை குமட்டுகிறது.

நல்லவேளை, வாஜ்பாய் உடல்நலம் குன்றிப்போய் இருக்கிறார். இல்லாவிட்டால் அத்வானி, யஷ்வந்த் நிலைமைதான் இவருக்கும். கோரிக்கைகள் இல்லாத வாஜ்பாயை அடிக்கடி சந்தித்து ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் மோடி, அவர் நன்றாக இருந்திருந்தால் அந்தப் பக்கமே எட்டிப்பார்த்திருக்க மாட்டார்.

இன்றைய நிலைமையை, 'மோடியின் அதிர்ஷ்டம்’ என்றும், 'அத்வானியின் துரதிர்ஷ்டம்’ என்பார்கள் சிலர். எல்லா அரசியல்வாதிகளுக்கும் அத்வானி ஒரு பாடம். அரசியலில் தனக்கு வந்த பதவியை அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்தவர்களுக்கு, அது திரும்பக் கிடைத்ததே இல்லை.

1996-ம் ஆண்டு காலகட்டத்தில் பா.ஜ.க எழுச்சி பெற்றது. வாஜ்பாய்க்கு, பிரதமர் ஆசை இல்லை. ஆனால், அத்வானிக்கு இருந்தது. அதே நேரத்தில் வாஜ்பாயை மீறிப் போகக் கூடாது என்ற தயக்கமும் அடக்கமும் அத்வானிக்கு இருந்தன. மும்பை மாநாட்டில் பகிரங்கமாக, 'அடுத்த பிரதமர் அடல்ஜிதான்’ என அத்வானி அறிவித்தார். அப்படி அறிவிக்கவேண்டிய கட்டாயமே இல்லாத சூழ்நிலை அது. உடனே எழுந்து மைக் முன் வந்த வாஜ்பாய், 'பா.ஜ.க வெற்றி பெறும். அத்வானிதான் பிரதமர் ஆவார்’ என அறிவித்தார். மைக் வாங்கிய அத்வானி, 'அறிவிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது’ என்றார். 'ஆம்... நானும் அறிவித்துவிட்டேன். எனது அறிவிப்பும் முடிந்துவிட்டது’ என்றார் வாஜ்பாய். ''நீங்கள்தான் முதலில்...’ என்ற லக்னோ விருந்தோம்பலைத்தான் இப்போது மக்கள் பார்க்கிறார்கள்’ எனச் சிரித்தார் வாஜ்பாய். பல்லாயிரம் பேர் பார்த்த பகிரங்க மாநாட்டுக் காட்சி அது. 1998-ம் ஆண்டு தேர்தலில் வென்று, பிரதமர் ஆனார் வாஜ்பாய். அதன் பின் அத்வானியால் பிரதமராகவே முடியவில்லை. 'அரசியலில் பிள்ளைப்பூச்சிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் அனைவரும் நசுக்கப்படுவார்கள்’ எனச் சொல்வார், கருணாநிதிக்கே கதை சொல்லும் எஸ்.எஸ்.தென்னரசு. அதுதான் அத்வானிக்கும் பலருக்கும் நடக்கிறது.

கராச்சியில் பிறந்து, 20 ஆண்டு காலம் சிந்து பகுதியில் வளர்ந்து, நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு

முள்படுக்கையில் பி.ஜே.பி - யின் பிதாமகன்கள் !

வீடு பறிக்கப்பட்ட நிலையில் இந்தியப் பகுதிக்குள் அகதியாக வந்து, 'எந்த மாநிலத்தில் போய் குடியேறுவது?’ எனத் தெரியாமல் விழித்த தொடக்க கால வாழ்க்கை கொண்டவர் அத்வானி. இன்றும் அவரது நிலைமை அப்படித்தான். அன்றைய நிலைமைக்கு புறக் காரணங்கள்... இன்று அகக் காரணங்கள்.

2002-ம் ஆண்டில் மட்டும் அத்வானி இல்லாவிட்டால், மோடியின் அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும். 1947-ம் ஆண்டுக்குப் பிறகு தேசம் பார்த்திராத பச்சைப் படுகொலைகள் நடந்தபோது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. 'இங்கு இவ்வளவு நடந்த பிறகு, எந்த முகத்துடன் நான் வெளிநாட்டுக்குப் போவேன்?’ என, பகிரங்கமாகச் சொல்லி, தலை கவிழ்ந்து நின்றார் பிரதமர் வாஜ்பாய். 'மோடி பதவி விலக வேண்டும்’ என வாஜ்பாயும் நினைத்தார். மோடி பதவி விலகத் தேவை இல்லை என்பதில் உறுதியாக இருந்தவர் அத்வானி. வாஜ்பாயிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்ட ஓரிரு தருணங்களில் இதுவும் ஒன்று என்கிறார் அத்வானி. அத்தகைய அத்வானிதான் இன்று மோடிக்குப் பிடிக்காத உருவம்.

அனைத்தையும் தன்னை நோக்கிக் குவிப்பது மட்டும்தான் சர்வாதிகாரத்தின் முதல் படி. அவசரநிலைப் பிரகடனத்தைச் செய்யாமலேயே அதன் குணாம்சங்கங்கள் பின்பற்றப்படுவதையே இன்று நித்தமும் பார்க்கிறோம். அதைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்துவிட்டாரே என்ற ஆத்திரம் அத்வானி மீது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய் பேசினாலும் இதையேதான் சொல்லியிருப்பார். ஏற்கெனவே சொல்லியும் இருக்கிறார்.

'ஒன்றாகப் பணியாற்றுவது என்ற தத்துவத்தையே, நம்முடைய எல்லா அரசியல்/அரசியல் அல்லாத நிறுவனங்கள் அனைத்தும் நமது தேசிய வாழ்க்கையின் கலாசாரப் பண்பாக பழகிக்கொள்ள வேண்டும்’ என்ற வாஜ்பாய் கலாசாரம், மோடிக்குக் கசக்கிறது.

தனி மரம் தோப்பு ஆகாது என்றால், நாடாகுமா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு