Published:Updated:

’ராக்கி கட்டிய அலெக்ஸாண்டர் மனைவி...தமிழக அரசியல் தயிர் சட்டி எலி!’ - பிச்சை புகினும் புத்தகம் வாசிக்கும் சுவாரஸ்ய பிச்சைக்காரர்!

’ராக்கி கட்டிய அலெக்ஸாண்டர் மனைவி...தமிழக அரசியல் தயிர் சட்டி எலி!’ - பிச்சை புகினும் புத்தகம் வாசிக்கும் சுவாரஸ்ய பிச்சைக்காரர்!
’ராக்கி கட்டிய அலெக்ஸாண்டர் மனைவி...தமிழக அரசியல் தயிர் சட்டி எலி!’ - பிச்சை புகினும் புத்தகம் வாசிக்கும் சுவாரஸ்ய பிச்சைக்காரர்!

ப்படித்தான் ஆரம்பித்தது அவருடனான உரையாடல்... "அண்ணா இன்று காசு கொண்டுவரவில்லை; நாளை தருகிறேன்'' என்றதும், ''பரவாயில்லையம்மா. உன்னுடைய இந்தப் பேச்சு டால்ஸ்டாயை நினைவுப்படுத்துகிறது'' என்றார்... ''என்னது, டால்ஸ்டாயா? என்ன ஐயா சொல்கிறீர்கள்'' என்றேன். பேச ஆரம்பித்தார், அண்ணா சாலை சப்வேயில் பிச்சை எடுக்கும் அந்த முதியவர். இவரை பிச்சைக்காரர் என்று சொல்வதற்கு மன்னிக்கவும். அப்படித்தான் இருக்கிறது, அவருடன் பேசியது.

"டால்ஸ்டாய், நாள்தோறும் தான் செல்லக்கூடிய பாதையில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவாராம். ஒருநாள் அந்தப் பிச்சைக்காரனைக் கடந்துசெல்லும்போது, 'நண்பா, இன்று காசு கொண்டுவரவில்லை. நாளை தருகிறேன்' என்றாராம். அப்படித்தான் நீயும் சொல்கிறாய் அம்மா...'' என்று டால்ஸ்டாய் பற்றி சொன்னதும் அருகே சென்று அமர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன் . ''டால்ஸ்டாய் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்...என்ன படித்துள்ளீர்கள்?'' என்றேன். ''டால்ஸ்டாயைப் பற்றிப் படிக்க ஏட்டுக்கல்வி எதற்கு?'' என்று சிரிப்புடன் தொடர்ந்தார்.

''என் பெயர் லோகநாதன். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டுப் பேர். நான், அதிகமாகப் படித்தவன் இல்லை. எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். அப்பா, ரயில்வேயில் ’ஸ்கில்டு லேபர்’ ஆகப் பணியாற்றி வந்தார். அவருடனே நானும் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றினேன். அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என எனது சகோதரிகள் எல்லாம்  நல்ல பொறுப்புக்குச் சென்றனர். இப்படியான சூழலில் எனக்குத் திருமணம் நடந்தது.கொஞ்ச நாள் எங்கள் திருமண வாழ்வு நன்றாகப் போனது. எங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், நான் வசதி குறைவான நிலையில் இருந்தேன். அதனால், என் மனைவி என்னிடமிருந்து நிரந்தரமாக விலகிச் சென்றார். எங்களுடைய குடும்பத்தில் குழப்பம் இருந்த நிலையில், தனியான வாழ்கைக்கு வந்துவிட்டேன். கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினேன்.முதலில் ஐஸ் கம்பெனியில் வேலை; அதன் பின்னர், சேமியாவில் தயாராகும் உணவை விற்கும் வேலை. அந்த உணவு விற்ற பணத்துக்குப் பதிலாக பழைய புத்தகங்களை வாங்குவேன்..

அப்படி வந்த புத்தகங்களில், தலைவர்களின் புகைப்படங்களைப் பார்ப்பேன். அதன் பின்னர், நேரம் கிடைக்கும்போது அவர்களைப் பற்றி படிக்கத் தொடங்கிய பழக்கம், நாளடைவில் தீவிரமாகி விட்டது. அரைகுறையாகத் தெரியும் இந்தக் கண்களை வைத்துக்கொண்டு பேப்பரைப் படித்து உலக அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்கிறேன்'' என்றவரிடம், ''சரி... என்னென்ன புத்தகங்கள் படித்துள்ளீர்கள் என்று கேட்டேன். ''தலைப்பை வைத்தோ அல்லது எழுத்தாளர்களை வைத்தோ புத்தகங்களைப் படிப்பதில்லை. வரலாற்றுத் தலைவர்களையும் தற்கால அரசியல்வாதிகள் பற்றியும் படித்துள்ளேன்” என்று வரலாற்றின் நீள அகலங்களை விவரிக்கத் தொடங்கினார். 

''நெப்போலியனின் சூழ்ச்சியைக் கண்டு அதிர்ந்தேன்!''

”மாவீரன் நெப்போலியன், அலெக்ஸாண்டர், லியோ டால்ஸ்டாய் , ஹிட்லர் உள்ளிட்ட பல தலைவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாம் பெர்பெஃக்ட் (perfect) என்று பெரிதும் மதிக்கக்கூடிய தலைவர்கள்  பலரும் நேர்மையானவர்கள் என்று கருதிவிட முடியாது. அதனை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள். 

குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தை தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்த நெப்போலியன், சாதாரண வீரர்தான். அவர் ஆட்சிக்கு வருவதற்கு செய்த அரசியல் சூழ்ச்சி குறித்து படித்தேன்; அதிர்ந்துபோனேன். பிரான்ஸ் பேரரசின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, காய்களை நகர்த்தி எவ்வாறு ஆட்சியைக் கவிழ்த்து எப்படிப் பேரரசர் ஆனார் என்பது குறித்து நெப்போலியனைப் பற்றி விரிவாகப் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

இப்படி, நெப்போலியன் என்ற ஒரு வரலாற்றுத் தலைவரை மட்டும் வைத்துக் குறிப்பிடவில்லை. பெரும்பாலான தலைவர்கள் முக்கியப் பதவிக்கு வருவதற்கு அறத்தை மீறியுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். இதில், ஆபிரஹாம் லிங்கனை உயர்த்திப் பிடிக்கலாம். அவர், மனிதநேயப் பண்பாளர்; அடக்குமுறையாலும் புறக்கணிப்பாலும் உழண்டவர்களுக்குக் கருணைக் கடவுளாக விளங்கியுள்ளார்.

ராக்கி கட்டிய அலெக்ஸாண்டர் மனைவி!

அலெக்ஸாண்டரின் வீரம் பற்றியும் அறிவுக்கூர்மை பற்றியும் பெருமைபொங்க வரலாற்றுப் புத்தகங்களில் எழுதியுள்ளனர். ஆனால், அவருமே போர்களில் வெற்றியடைய அரசியல் காய்களை நகர்த்தியுள்ளார். அவருடைய அறிவுக்கூர்மைக்கு எடுத்துக்காட்டாக நீதிபதியிடமிருந்து கைதிகளைக் காப்பாற்றிய கதைப் பற்றியும், அரிஸ்டாட்டிலிடம் அவர் வைத்த வாதம் பற்றியும் குறிப்பிடத் தவறமாட்டார்கள். ஆனால், அதெல்லாம் முழுக்க உண்மை என்று சொல்ல முடியாது. 

அவர், போரஸ் மன்னனிடம் வெற்றிபெற்று அந்த மன்னனிடமே நாட்டை ஒப்படைத்ததாகப் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை என்கிறது ஒரு வரலாற்று நூல். பல நாடுகளில் வெற்றியைக் கண்ட அலெக்ஸாண்டர், இந்தியாவின் மீது கவனத்தைத் திருப்புகிறார். பஞ்சாப் மன்னன் போரஸிடம் போரிட அலெக்ஸாண்டர் முடிவு செய்கிறார். அப்போது, போருக்கு  முன்னதாக ஒற்றர்களை அனுப்பி நாட்டைக் கண்காணிக்க வைக்கிறார். பஞ்சாப் வந்த ஒற்றன், நாட்டைக் கண்காணித்து அலெக்ஸாண்டரிடம் அறிக்கை கொடுக்கிறான். அதில், 'அந்த நாட்டில் ராக்கி கட்டும் பழக்கம் என்பது மிகவும் உணர்வுபூர்வமான நடக்கும் விழா. ராக்கி கட்டும் பெண்களை அந்த நாட்டு ஆண்கள் சகோதரிகளாக ஏற்க வேண்டும் என்பது பண்பாடு' என்று குறிப்பிடுகிறான். இதனைத் தொடர்ந்து, ஒரு ராக்கிக் கயிற்றை எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தனுப்புகிறார் அலெக்ஸாண்டர். அவரும், பஞ்சாப் சென்று போரஸ் என்ற புருஷோத்தமனுக்குக் கட்டுகிறார்.

இந்த நிகழ்வு முடிந்து சில காலம் கழித்து பஞ்சாப்மீது படையெடுக்கிறார் அலெக்ஸாண்டர். குதிரையின் மீது இருந்தவாறு வாளைச் சுழற்றுகிறார் போரஸ். அப்போது, 'நீங்கள் கையில் கட்டியிருக்கும் ராக்கிக் கயிறு என் மனைவி கட்டியது. இருந்தாலும், போரைத் தொடங்குங்கள்' என்கிறார் அலெக்ஸாண்டர். இதைக் கேட்டு வாளை அப்படியே போட்டுவிடுகிறார் போரஸ். ஆனால், புத்தகங்களில் அலெக்ஸாண்டரின் பெருமையை மேம்படுத்த... தோற்ற போரஸ் மன்னனுக்கு நாட்டைத் தந்தார் அலெக்ஸாண்டர் என்கிறார்கள். இதில் சிந்திக்க வேண்டிய விஷயம், தோற்ற மன்னனுக்கு எந்த மன்னன் நாட்டை மீண்டும் வழங்குவான்? இப்படி ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஒவ்வொரு கதையைக் கூறுகின்றனர். 

என்னதான் ஆர்வமாக வாசித்தாலும் வயதாக வயதாகப் பார்வை மங்க ஆரம்பித்தது. வேலையில் தடுமாற்றம் ஏற்பட்டது. நான் வேலை செய்த கடையில், 'வேறு இடத்தில் வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றனர். இந்த நிலையில்தான் சேப்பாக்கத்துக்கு வந்து தங்கிய நான் வருமானத்துக்காகப் பிச்சை எடுக்க ஆரம்பித்தேன்” என்றவரிடம், ''தலைவர்கள் யாரும் பெர்பெஃக்ட் இல்லை என்று சொல்கிறீர்கள்... நீங்கள் மட்டும் இப்படிக் காசு வாங்குவது பெர்பெஃக்ட்டா?'' என்று  கேள்வி எழுப்பினேன். 

 குறைத்து  மதிப்பீடாதீர்கள்....

அதற்குப் பதிலளித்த அவர், ''இப்போதைக்கு அம்பேத்கர் சொன்ன பொன்மொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. 'வாழ்வதற்கு ஏற்றச் சூழல் ஒரு மனிதனுக்கு இல்லை என்றால், எத்தனை நாளைக்கு அவனால் உயிர்ப்போடு ஓட முடியும்?' என்னால் ஓட முடியாத நிலையில்தான் முடங்கி விட்டேன். இதிலும், நான் பெர்பெஃக்ட் ஆன மனிதனாகத்தான் இருக்கிறேன். யாரிடமும் கையேந்தி நச்சரிக்க மாட்டேன். சில நேரங்களில் பிச்சை போடுபவர்கள், கைப்பைக்குள் கையைவிட்டுக் காசைத் தேடுவார்கள். அவர்களிடம், 'பரவாயில்லை அம்மா... பஸ்ஸுக்கு நேரமாகிவிடும். நாளை வந்தால் கொடுங்கள்' என்பேன். பலரும் என்னை உறவுமுறைவைத்து அழைத்து காசு கொடுப்பார்கள். சிலர், 'சாப்பிட்டீர்களா?' என்பார்கள். அதற்கு ஈடு இணை என்ன இருக்கிறது. நான் யாருமற்றவனாக இருந்தாலும் என்னுடைய குணத்தால் இங்கும் நல்ல உறவுகளைச் சம்பாதித்துவைத்துள்ளேன்.

வாரத்தில் நான்கு நாள்கள் செய்தித்தாள்களை வாங்குகிறேன். ஒருமுறை நான் ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றை வாங்கச் சென்றபோது, கடையில் இருந்த ஒரு பையன், என்னை (என் தோற்றத்தைவைத்து) ஒருமாதிரியாகப் பார்த்ததோடு, 'நீயெல்லாம் ஆங்கிலம் பேப்பர் வாங்குகிறாயா... உனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமா?' என்று கேட்டான். அந்தப் பேப்பரை வாங்கி நான் அவனிடம் படித்துக்காட்டிய பிறகு... என்னை அவன் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. பிறகு அவனிடம் நான், 'நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல... அந்த இடத்தை எப்படி அழகாக்குகிறோம் என்பதே முக்கியம்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன் என்றவரிடம், ''சர்வதேச அரசியல்,  தத்துவமெல்லாம் பேசறிங்க தமிழக அரசியலைக் கவனிக்கறிங்களா?'' என்று சுவாரஸ்யம் பொங்கக் கேட்டேன். 

 ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தயிர்பானையில் விழுந்த எலிகள்

”தமிழக அரசியல்தானே? அது குறித்து இப்படி விவரித்தால்தான் சரியாக இருக்கும். இரண்டு எலிகள் தயிர் சட்டியில் விழுந்து விட்டன. அதில் ஓர் எலி, 'அய்யோ... நாம் அவ்வளவுதான்' என்றதாம். மற்றோர் எலி அந்த எலியின் வார்த்தையைக் காதில் வாங்காமல் வானுக்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருந்ததாம். அதில், குதித்துக்கொண்டிருந்த எலி, உருண்டுவந்த வெண்ணெய்யில் ஏறி மேலே வந்துவிட்டதாம். மேலே ஏறிய அந்த எலிதான் எடப்பாடி பழனிசாமி. உள்ளே லாக் ஆன எலிதான் ஓ.பன்னீர்செல்வம். இதுதான் தமிழக அரசியலின் நிலை'' என்று கலாய்த்தவரிடம் விடைபெற முயன்று நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.

அதற்கு, ''நான் பேசியதற்குக் கூலியாகிவிடும், வேண்டாம்மா!'' என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் லோகநாதன். உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமா? என்றதும். எனக்குப் பிரச்னையில்லை. என் உறவினர்களுக்கு, இப்படிப் பிச்சைக்காரனாகப் பார்த்தால்  கவுரவ குறைச்சலாக இருக்குமே என்று சிரித்தவரை அப்படியே ஒரு ‘க்ளிக்’..

இங்கே நட்பு பாராட்ட, மனிதனைச் சக மனிதனாக நடத்த ஸ்டேடஸ் பார்க்கப்படுகிறது. இதுதான் சமூகத்தின் உறவை மேம்படுத்துவதற்கான ஆகச் சிறந்த தகுதியாக வைக்கப்படுகிறது. இங்கு, புறக்கணிப்பைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் நீட்டி முழக்கும் நாம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் அழுக்கான ஆடை அணிபவர்களையும் ஒதுக்கிவைத்து அவர்களுடைய உணர்வுகளை மதிக்கத் தவறிவிடுகிறோம்.

அடுத்தமுறை அண்ணா சாலை சப்வேயில் நடந்துசெல்லும் வாய்ப்புக் கிடைத்தால் லோகநாதனைச் சந்தித்து விடுங்கள். பிச்சைப் புகினும்  தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும் ஒரு நல்ல நட்பை நீங்கள் பெற வாய்ப்பிருக்கிறது.