Published:Updated:

சசிகலா குடும்பத்தினரிடம் கேட்கப்படும் 10 கேள்விகள்! - அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஐ.டி. #VikatanExclusive

சசிகலா குடும்பத்தினரிடம் கேட்கப்படும் 10 கேள்விகள்! - அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஐ.டி. #VikatanExclusive
சசிகலா குடும்பத்தினரிடம் கேட்கப்படும் 10 கேள்விகள்! - அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஐ.டி. #VikatanExclusive

வருமான வரித்துறை விசாரணைக்கு வரும் சசிகலா குடும்பத்தினரிடம் ஒரே மாதிரியான 10 கேள்விகள் தவறாமல் கேட்கப்படுகின்றன. அந்தக் கேள்விகளுக்கு, குடும்பத்தினர் அளித்த ஒரே பதிலால் வருமான வரித்துறையினர் கேள்விகளை மாற்றியதோடு, அடுத்த நடவடிக்கைகளுக்குத் தயாராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா குடும்பத்தினரின் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், வைரங்கள், பணம் ஆகியவை அடிப்படையில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

முதல் நாளில் டாக்டர் சிவக்குமார், விவேக் ஜெயராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். அடுத்தடுத்து இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடமும் முதல்கட்ட விசாரணையை வருமான வரித்துறையினர் நடத்தியுள்ளனர். 

வருமான வரித்துறையின் விசாரணைகுறித்து சசிகலா குடும்பத்தினர் ஆலோசித்துள்ளனர். அப்போது, எல்லோரிடமும் 10 கேள்விகள் ஒரே மாதிரியாகக்  கேட்ட விவரம் தெரியவந்துள்ளது. அதற்கு,  கிட்டத்தட்ட ஒரே  மாதிரியான பதில்களைச் சொல்லியிருப்பது தெரியவந்தது. . இந்தச் சூழ்நிலையில், சசிகலாவின் ஆலோசனையின் பேரில் டி.டி.வி.தினகரனும் விவேக் ஜெயராமனும் சில முடிவுகளை எடுக்க தயாராகிவருவதாக, மன்னார்குடி குடும்ப உறவுகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவேக் ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள், "வருமான வரிச் சோதனை நடக்கும் என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். எங்கள் தரப்பில் எந்தவித தவறும் இல்லாதபட்சத்தில், நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்துவருகிறோம்.  இந்தச் சோதனையை முன்கூட்டியே நடத்தியிருக்கலாம். வருமான வரித்துறை சோதனையில், அவர்களுக்கு உருப்படியான எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. குறிப்பாக, விவேக் வீட்டிலிருந்து சில ஆவணங்களை மட்டுமே எடுத்துச்சென்றனர். நகை, பணம் என எதையும் எடுத்துச்செல்லவில்லை. ஆனால், கள்ளத்துப்பாக்கி எடுத்ததாகச் செய்திகள் பரவின. அதை, வருமானவரித்துறையே மறுத்துள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேக் ஜெயராமனிடம் ஒரே கேள்வியை பல கோணங்களில் கேட்டுள்ளனர். அந்தக் கேள்விகளின் மையப்புள்ளி சசிகலாவைச் சுற்றியே இருந்தன. அதற்கு, எங்கள் தரப்பில் உரிய விளக்கத்தை அளித்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "விசாரணைக்கு வந்த சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் எங்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்டோம். விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு தொடர்பாக அடுத்தடுத்த கேள்விகள் கேட்கப்பட்டன. வருமானவரிச் சோதனையில் கிடைக்கும் ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் எங்களது விசாரணை நடத்தப்படும். சமீபத்தில், சசிகலா குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களே, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க போதுமானது. பொதுவாக, எல்லோரிடமும் கேட்கப்படும் கேள்விகளே சசிகலா குடும்பத்தினரிடமும் கேட்கப்பட்டன. அதில், இந்த வருமானத்துக்குரிய சோர்ஸ், சொத்துக்கள் யாரிடம் வாங்கப்பட்டது? அதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது.

அந்தத் தொகை, எந்த வழியில் கொடுக்கப்பட்டது (மோடு ஆஃப் பேமென்ட்), நகை வாங்கிய விவரங்கள், ரசீதுகள், பணம் வந்த வழி, அதற்கு வரி செலுத்தியுள்ளீர்களா, யார்மூலம் பணம் பெறப்பட்டது, கடந்த ஆண்டு செலுத்திய வருமானவரி கணக்கு விவரங்கள், அரசு நிர்ணயித்த நிலத்தின் வழிகாட்டு மதிப்பின்படி பதிவுசெய்யப்பட்டுள்ளதா ஆகியவை எல்லோரிடமும் கேட்கப்பட்டன. அப்போது, விசாரணைக்கு ஆஜரான சசிகலா குடும்பத்தினர், ஒரே மாதிரியான பதிலைச் சொல்லி வைத்தாற்போல தெரிவித்தனர். இதனால், அடுத்தடுத்து ஆஜரான சசிகலா குடும்பத்தினரிடம் கேள்விகளை மாற்றிவிட்டோம். அப்போது, அவர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்தன.

விசாரணைக்கு, சசிகலா குடும்பத்தினரில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கிடைத்துள்ள நகைகள், வைரங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவடைந்துவிடும். ஆவணங்களில் உள்ள விவரங்கள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேகரித்தாக எங்களுக்குக் கிடைத்த தகவல், ஆதாரங்கள் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில், சம்பந்தப்பட்டவர்கள் மேல் தவறில்லை என்றால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால், சசிகலா குடும்பத்தினரைப் பொறுத்தவரை, பினாமிகள் பெயரில் பல சொத்துக்கள் இருப்பதும், அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

பண மதிப்பிழப்பு சமயத்தில், போலி நிறுவனங்கள், சசிகலா குடும்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்மூலம் ரூபாய் நோட்டுகள் மாற்றியது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சசிகலா குடும்பத்தினரின் வங்கி லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை நடத்தப்பட்டால், இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா சிக்கிய பிறகு, புத்திசாலித்தனமாகவே சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் சசிகலாவின் உறவுகள் யாரும் அவர்களுடைய பினாமிகளாக இல்லை. குடும்ப உறவுகளைத் தாண்டி தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ள விவரங்கள் எங்களிடம் உள்ளன. அதில் சிலர், சசிகலாவை நேரில் சந்தித்ததுகூட இல்லையாம். பினாமிகளாக இருக்க, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மட்டுமே சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கொடுக்கப்பட்டுவந்துள்ளது. சசிகலா குடும்பத்தினருக்கு அந்த சொத்துகள் தேவைப்படும்போது, எந்தவித மறுப்பும் பேசாமல் அதை மாற்றியும் கொடுத்துள்ளனர். 

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்தில் போயஸ் கார்டனுக்குள் வீட்டு வேலைக்காக நுழைந்துள்ளது. அந்தக் குடும்பத்தினரின் விசுவாசத்தைப் பார்த்த சசிகலா, அந்தக் குடும்பத்தை தன்னுடை பினாமியாக மாற்றியிருக்கிறார். குறுகிய காலத்தில் அந்த குடும்பத்தினரின் வளர்ச்சியைக் கண்ட ஊர்காரர்கள் வாயடைத்துப் போயிருக்கின்றனர். இந்தத் தகவல் கிடைத்ததும் அந்த குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில்  சோதனைசெய்த வருமான வரித்துறையினர், முக்கிய ஆவணங்களைக் கண்டெடுத்துள்ளனர். அந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். தென்மாவட்ட குடும்பம்போல இன்னும் பலர் சசிகலாவின் பினாமிகளாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எங்களது சந்தேக வளையத்தில் இருக்கின்றனர்" என்றனர்.