Published:Updated:

நலந்தானா ஜெயலலிதா ?

டோட்டல் ஸ்கேன்ப.திருமாவேலன், படம்: குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரசியல்வாதிகளுக்கு முதுமையும் முதலீடுதான்! உடலின் வலிமையைத் தாங்கும் சக்தி, தன் கால்களுக்கு இல்லை என உணர்ந்ததுமே வீல் சேரில் கூச்சப்படாமல் உட்கார்ந்தார் கருணாநிதி. 'வீல் சேரில் வலம்வரும் வில் பவரே...’ என்ற பட்டம் கிடைத்தது. இதை இயல்பான மாற்றமாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி.

ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன் உடல்நிலையைக்கூட சாதாரணமானதாக நினைத்து, அதை உள்வாங்கி விழுங்கப் பழகிக்கொண்டார் கருணாநிதி. 'இத்தனை வயதிலும், நடக்க முடியாத சூழலிலும் இத்தனை மணி நேரம் உழைக்கிறார்’ எனச் சொல்வதே, தனக்கான கம்பீரமாக கருணாநிதி மாற்றிக்கொண்டார். அவர் அரசியல்வாதி!

ஆனால் நடிகர்கள், நடிகைகளால் அது முடியாது. வழுக்கைத் தலை, அருகம்புல் தாடி, வெள்ளை காய்ந்த உதடுடன் இமேஜ் பற்றி கவலைப்படாத ரஜினிகூட, தனது உடல்நிலை பற்றி வெளிப்படையாகச் சொல்லத் தயாராக இல்லை. சிங்கப்பூர் மருத்துவமனை நிலவரம் இன்று வரை சீக்ரெட்தான். இப்படித்தான் ஜெயலலிதாவும் ஜெர்க் ஆகி இருக்கிறார். சமீப காலமாக அவரது உடல்நிலை பற்றி எத்தனையோ தகவல்கள், வதந்திகள் பரவிக்கிடந்தாலும், அவரைப் பார்க்கும்போதும் அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கும்போதும் உடல் நலமின்மையை அறிய முடிகிறது. அரசல்புரசலான செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த ஜெயலலிதா, அதை லேசாக வெளியில் சொல்லியாகவேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

நலந்தானா ஜெயலலிதா ?

ஜூலை 1-ம் தேதி இஃப்தார் விருந்தை அ.தி.மு.க சார்பில் நடத்தவேண்டும் என ஜெயலலிதா கட்டளையிட்டார். அவரது பெயரில் அழைப்பிதழ் தயார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. ஏற்பாடுகளும் பிரமாண்டமாகச் செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா கலந்துகொண்டிருந்தால், கடந்த

8 மாத காலத்தில் அவர் கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சியாக இருந்திருக்கும். சிறைக்குப் போய், ஜாமீன் பெற்று வெளியில் வந்து, வீட்டுக்குள் இருந்து, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்குப் பிறகு பதவியைப் பெற்று,

ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்து, தலைமைச் செயலகத்தில் எத்தனையோ திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்திருந்தாலும், வெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுநிகழ்ச்சி இஃப்தார் விழா. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தும் கடைசி நேரத்தில் ஜெயலலிதா வரவில்லை. அவரது உரையை ஓ.பன்னீர்செல்வம்தான் வாசித்தார்.

'கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், என் எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன’ என, தனது உரையில் குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. அதாவது, அவராலேயே மறைக்க முடியாத நிலைக்கு உடல்நிலை பாடாய்ப்படுத்த ஆரம்பித்துவிட்டது என்பதே உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்வது.

ஜெயலலிதா மிகமிக மகிழ்ச்சியாக இருந்திருக்கவேண்டிய, தன்னுடைய மகிழ்ச்சியை உற்சாகமாக வெளிப்படுத்தவேண்டிய தருணம் இதுதான். 18 ஆண்டு காலமாக ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு என்ற வழக்கு பலூனை, ஒரு சின்ன குண்டூசி மூலமாக நீதிபதி குமாரசாமி குத்திக் கிழித்துப்போட்டுவிட்டார். இதற்கு மேல் ஜெயலலிதாவின் மகிழ்ச்சிக்கு என்ன வேண்டும்?

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, பதிவான வாக்குகளில் 20 ஆயிரம் தவிர மொத்தத்தையும் அள்ளிவிட்டார். இதற்கு மேல் ஜெயலலிதாவின் மகிழ்ச்சிக்கு என்ன வேண்டும்?

இந்த இரண்டு வெற்றிகளுக்குப் பிறகும், மனமகிழ்ச்சியோடு மைக் பிடித்து தொண்டர்களிடம் பேச அவர் முன்வரவில்லை; இனிப்புகள் வழங்கிக் கொண்டாடவில்லை. இன்னும் சொன்னால், அன்றைய தினம் அவர் வீட்டைவிட்டு வெளியில் வரவே இல்லை. அதற்காக இவை மகிழ்ச்சிக்குரிய செய்திகள் இல்லை எனச் சொல்லிவிட முடியுமா என்ன? மாறாக, கொண்டாடும் சூழ்நிலையில் அவரது மனநிலையும் இல்லை; உடல் நிலையும் இல்லை!

ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை என்பதுதான் இப்போதைய பெரிய தொந்தரவு. மொத்த அமைச்சரவையும் பதவி ஏற்கும் நிகழ்வையே, சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் நெருக்கடி ஏற்பட்டதற்கும் அதுதான் காரணம்.

'கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின்படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் செய்கிறார். ஆனாலும் வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான்போகிறது. வலிநிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுகிறார்’ என்கிறார்கள்.

நலந்தானா ஜெயலலிதா ?

எல்லா நிகழ்ச்சிகளும் தலைமைச் செயலகத்தில்தான் நடக்கின்றன. 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான கனவுத் திட்டமான சென்னை மெட்ரோ ரயிலைக்கூட கோட்டையில் இருந்துதான், கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார். கோட்டையில் இருந்து தொடங்கிவைக்கும் திட்டத்தில்கூட, ஒருசில நிமிடங்கள் அதிகாரி ஒருவர் அந்தத் திட்டத்தை பற்றி விளக்கம் கொடுக்கும்போது ஜெயலலிதா உட்கார்ந்துகொண்டுதான் அதைக் கவனிக்கிறார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை அமைச்சரவைக் கூட்டம் நடக்கவே இல்லை. 'அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும்’ என ஒருமுறை அறிவித்தார்கள். ஆனால், அன்றைய தினம் அவர் கோட்டைக்கு வரவில்லை. முன்பெல்லாம் (பெங்களூரு தீர்ப்புக்கு முன்பு வரை!) தினமும் கோட்டைக்கு வந்தவர்தான் ஜெயலலிதா. இப்போது பதவி ஏற்புக்குப் பிறகு மூன்று - நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறார். அதுவும் மதியம்

2 மணிக்கு மேல் வந்துவிட்டு, 3 மணிக்கு மேல் புறப்பட்டுவிடுகிறார். மரியாதை நிமித்தமாக பலரையும் முன்பு சந்திப்பார். அத்தகைய சந்திப்புகளும் இப்போது குறைந்துவிட்டன. இவை அனைத்துக்கும் இந்தக் கால் மூட்டு வலிதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் உடலில் சர்க்கரைச் சத்து இருப்பது பழைய செய்தி. அது கூடிக்கொண்டே போகிறது என்பதும் சொல்லவேண்டிய செய்தி. சாப்பாட்டு விஷயத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே நேரத்தில் தொடர்ந்து நடைப்பயிற்சியும் செய்துவந்தார். கொடநாடு போனால் நடைப்பயிற்சி கூடுதல் ஆனது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் கொடநாட்டில் இருந்தபோது சுமார் 9 கிலோ எடை குறைந்தார். சர்க்கரைச் சத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இப்போது மூட்டு வலி காரணமாக நடைப்பயிற்சியும் முன்பைப்போல செய்ய இயலவில்லை. அதனாலேயே சர்க்கரையும் கூடியது. உடல் எடையையும் குறைக்க இயலவில்லை. இருந்தாலும், அவரது ஸ்வீட் ஆசை குறையவில்லை. இரண்டு ஆண்டுக்கு முன் இஃப்தார் நோன்புக்குச் சென்றபோது ஸ்டார் ஹோட்டல் ஸ்வீட் பிடித்துப்போய் திரும்பத் திரும்ப வாங்கிச் சாப்பிட்டார். அந்த ஆர்வம் இன்னமும் இருக்கிறது.

பொதுவாகவே பெரும் கவலை இருந்தால், சர்க்கரைச் சத்து கூடவே செய்யும் என்பார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஹெலிகாப்டரில் போய் பெங்களூரில் இறங்கியவரை, 'உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான தண்டனை என்ன என்பதை மாலையில் சொல்கிறேன். அந்த அறையில் போய் உட்காருங்கள்’ என பெஞ்ச் மட்டுமே இருந்த அறைக்குள் அனுப்பிவைக்கப்படுவோம் என்பதை ஜெயலலிதா எதிர்பார்க்கவே இல்லை. முதல் ஒரு வார காலத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடத்தில் இருக்க வைக்கப்பட்ட, சரியாக மருந்துகள்கூட எடுத்துக்கொள்ளாமல் இருந்த அந்தச் சமயமே அவரது கவலையோடு சர்க்கரையும் சேர்ந்தே கூடியது. மருத்துவர்கள் சாந்தாராம், சிவக்குமார் ஆகிய இருவரும் கட்டாய வற்புறுத்தலும் கடுமையான கவனிப்புமாக இருந்து அவருக்கு ஆலோசனைகள் சொன்னார்கள். அதன் பிறகுதான் மருந்துகளை எடுத்துக்கொண்டார். அந்த 21 நாட்கள், ஜெயலலிதாவின் மனதை, உடலை அதிகமாகப் பாதித்துவிட்டன.

ஹெச்.எல்.தத்து கொடுத்த ஜாமீனோ, குமாரசாமி கொடுத்த விடுதலையோ, கட்சிக்காரர்களுக்கு லட்டு கொடுக்கும் கொண்டாட்டமே தவிர, ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தனக்குத் தரப்பட்ட தண்டனை, சிறைவாசம் ஆகிய இரண்டையும் இன்னமும் மறக்கத் தயாராக இல்லை. இந்த மனவேதனைதான், அவரை கொண்டாட்டங்கள் செய்யவிடாமல் தடுக்கிறது.

இனி மறைக்கவும் முடியாது, யாருக்கும் தெரியாமல் சிகிச்சை செய்யவும் முடியாது என்ற நிலைமைதான் இப்போது. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பலாம் என்பது ஓர் ஆலோசனை. ஆனால், அதை ஆரம்பத்திலேயே ஜெயலலிதா நிராகரித்துவிட்டார். அநேகமாக, விரைவில் வெளிநாட்டு மருத்துவர்கள் வரலாம். கொடநாட்டில் தங்கலாம் என்றால், அது இரண்டு முறை தேதி குறித்து தள்ளிப்போகிறது. கொடநாட்டில் ஓய்வு, சிகிச்சை, மருத்துவர்கள் வருகை என்பன போன்ற செய்திகள் வரக் கூடாது என நினைக்கிறார்கள். இதனால் தனது பல்வேறு நடவடிக்கைகளைத் தள்ளிப்போட ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.

2015-ம் ஆண்டு டிசம்பருக்குள் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என்பது அவரது பழைய எண்ணம். இன்றைய உடல்நிலை, மனநிலை அந்த யோசனையையும் தள்ளிப்போட வைத்துள்ளன. மிக நீண்ட தூரப் பயணங்கள், அது ஹெலிகாப்டர் பயணமாக இருந்தாலும் அவரால் இயலாது என்றும், மேடையில் நின்று 10 நிமிடங்களுக்குள்தான் அவரால் பேச முடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகரில் செய்ததைப்போல முழுமையாக வேன் பிரசாரத்தை, சட்டமன்றத் தேர்தலில் செய்ய முடியாது என்பதாலும் தயங்குகிறார்.

பலவீனமான தி.மு.க., ஒன்றுசேராத எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்தாத பொதுமக்கள்... என எல்லாம் கூடிநிற்கும்போது, உள்ளே ஓர் அவஸ்தை தன்னைப் படுத்தியெடுப்பதை, அவர் விதி எனச் சொல்வார். அந்த விதியை எப்போது, எப்படி வெல்வார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு