Published:Updated:

பினாமி சட்டம்... சிறப்பு நீதிமன்றம்... சிறைவாசி சசிகலாவிடம் அடுத்த விசாரணை!

பினாமி சட்டம்... சிறப்பு நீதிமன்றம்... சிறைவாசி சசிகலாவிடம் அடுத்த விசாரணை!
பினாமி சட்டம்... சிறப்பு நீதிமன்றம்... சிறைவாசி சசிகலாவிடம் அடுத்த விசாரணை!

தமிழக வரலாற்றில் முதல்முறையாக, ஏன்...  இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான வருமானவரி சோதனை அண்மையில் சசிகலா குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களிடம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. 

சசிகலா குடும்பத்தினர் தவிர்த்து, அவரின் உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள், ஊழியர்கள், பினாமி நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் என மொத்தம் 187 இடங்களில் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு சோதனை நடத்தினர். இந்தத் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மூட்டைமூட்டையாகக் கட்டி, வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். தங்கம், வைரம், ரொக்கப் பணம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ஆயிரத்து 430 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டு அதுபற்றி அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு வங்கிகளின் லாக்கர்கள், வங்கிக் கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட மொத்த சொத்துகளின் முழுவிவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும், வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல. பொதுவாக ஓர் இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அங்கு என்னென்ன பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடும். ஆனால், சென்னை உள்பட தமிழகம் மட்டுமல்லாது, இதர மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ரெய்டு முடிந்து நான்கு நாள்கள் ஆன பின்னரும் வருமான வரித்துறையிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

ஏற்கெனவே கடந்த ஆண்டு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது கிடைத்த பொருள்கள், ஆவணங்களின் விவரங்களும் இன்றுவரை வெளியிடப்படவில்லை. ராமமோகன ராவின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகி மீண்டும் பணியில் சேர்ந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டார். சேகர் ரெட்டி மீதான வழக்குகள் முடிவுக்கு வரப்போகின்றன என்கிறார்கள்.

‘சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினாலும், அதுபற்றி மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசும் வருமான வரித்துறை சோதனைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்தச் சோதனைகளுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்று சொல்லி, வருமான வரித்துறையின் சோதனையை நியாயப்படுத்திப் பேசினார்கள். 

அதேநேரத்தில், சசிகலா குடும்பத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து பேட்டியளித்த விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர், “இந்த சோதனையை அரசியல்ரீதியாக பார்க்கவில்லை” என்று சொன்னார்கள். இதற்கிடையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''இந்த சோதனையும் முந்தைய சோதனைகளைப்போல பரபரப்பை ஏற்படுத்தி, இறுதியில் புஸ்வாணமாகி விடக்கூடாது'' என்று கூறியுள்ளார். மேலும் அவர், ''வருமானவரித் துறையின் ஆய்வில் கிடைத்த பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை வருமானவரித் துறை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இதை வரி ஏய்ப்பாக மட்டும் பார்க்காமல் ஊழல் குற்றமாகவும், கூட்டுச் சதியாகவும் கருதி, வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பதுடன், அதற்கு மைக்கேல் டி குன்ஹா போன்ற நேர்மையான நீதிபதி ஒருவரை சிறப்பு நீதிபதியாக நியமிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் விளக்கமளித்துள்ளனர். 187 இடங்களிலும் நடந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை குறித்த வருமான வரித்துறையின் சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கமளித்து இருந்தாலும், தங்களது ஆடிட்டர் மூலம் கூடுதல் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்தச் சோதனையில் பினாமி சொத்துகள் குறித்த ஆவணங்களும் சிக்கியிருப்பதால், அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சட்டத்தில் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வழிவகை செய்ய்யப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டுதான் பினாமி சட்டத்தில், ''மூன்று ஆண்டுகள் தண்டனை'' க்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தில் 2016-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்கீழ் பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவிகிதத்தை அபராதமாக விதிக்கவும் அந்தச் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தின்படி எவரிடம் வேண்டுமானாலும் தகவல் கேட்கலாம். அந்த நபர், வேண்டுமென்றே தவறாக தகவல் அளித்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்கிறது. அத்துடன் சொத்து மதிப்பில் 10 சதவிகிதம் வரை அபராதம் விதிக்க முடியும். இருப்பினும், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் அனுமதியில்லாமல் எவர் மீதும் சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்ய முடியாது. மேலும், இந்தச் சட்டத்தின்படி புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு நிர்வாகி ஒருவரை நியமிக்க முடியும். இதுதவிர, இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம் 2016 வலியுறுத்துகிறது.

இதனிடையே, 'கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது' என்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விக்கு, சசிகலா குடும்பத்தினரிடமிருந்து சரியான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிடம் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறையினர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டுமானால், அதற்கு முறையான அனுமதியைப் பெற வேண்டும். அதற்கான முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, சசிகலாவிடம் விசாரணை நடத்திய பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வருமான வரித்துறையினர் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!