Published:Updated:

போயஸ்கார்டன் ஐ.டி. ரெய்டு... பரபரப்பு நிமிடங்களில் நடந்தது என்ன? #ITRaids

போயஸ்கார்டன் ஐ.டி. ரெய்டு... பரபரப்பு நிமிடங்களில் நடந்தது என்ன? #ITRaids
போயஸ்கார்டன் ஐ.டி. ரெய்டு... பரபரப்பு நிமிடங்களில் நடந்தது என்ன? #ITRaids

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த செய்தி, பிரேக் ஆனபோது, வேதா இல்லத்தின் முன்பு, எப்போதும் இருக்கும் போலீஸார் மட்டுமே பாதுகாப்பில் இருந்தனர்.

ரகசியம் காத்த அதிகாரிகள்

அந்த அளவுக்கு இந்த ரெய்டை வருமானவரித்துறை மிக, மிக ரகசியமாக வைத்திருந்தது. ரெய்டு நடத்துவதற்காக வாரண்டை ரெடி செய்த வருமானத்துறை அதிகாரிகள், அதற்கான உத்தரவை நீதிபதியிடம் காட்டி அனுமதி பெற்றனர். வழக்கமாக இது போன்ற ரெய்டுகளை அதிகாலை நேரத்திலேயே வருமானவரித்துறையினர் நடத்துவார்கள். ஆனால், இந்த ரெய்டை இரவு நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அதற்குக் காரணம், டி.டி.வி ஆதரவாளர்கள் பெரும் அளவில் குவிந்துவிடக் கூடாது என்பதுதான்.

வெளியில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், வீட்டுக்குள் சோதனை நடத்த இரண்டு ஆண் அதிகாரிகள், ஒரு பெண் அதிகாரி உள்பட மூன்று பேர் மட்டும் சோதனையில் ஈடுபட்டனர். முதலில் பூங்குன்றன் பயன்படுத்திய பகுதியை மட்டும் சோதனை போடவேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இது குறித்து டி.டி.வி-யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஜெ., சசி அறைகள்...

ஒரு கட்டத்தில் சசிகலா அறை, ஜெயலலிதா தங்கியிருந்த அறை ஆகியவற்றிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். இது குறித்தும் டி.டி.வி-க்கு உடனடியாகத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். ஒரு லேப்டாப், இரண்டு பென் டிரைவ்கள், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களைக் கொண்ட பண்டல் என்று சில பொருள்களை மட்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

எனினும் கூட, ரெய்டு தொடங்கிய சில மணி நேரத்தில் டி.டி.வி ஆதரவாளர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த ஆரம்பத்தில் போலீஸார் திணறிப்போயினர். பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சசிகலா, டி.டி.வி தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன், டி.டி.வி அணி பேச்சாளர்கள் சி.ஆர். சரஸ்வதி, குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் போயஸ் கார்டனில் குவிந்தனர்.

சசிகலா சிறைக்குச் செல்லும்முன்பு, கடைசியாக இந்த வீட்டில்தான் இருந்தார். அந்த வகையில் இது அவருடைய வீடு என்று சொல்வதுதான் பொருத்தமானது. அவருடைய வழக்கறிஞர் என்ற முறையில் சோதனை நடத்தும் போது அருகில் இருக்க வேண்டும். எனவே, என்னை அனுமதியுங்கள் என்று போலீஸாரிடம் கேட்டார். ஆனால், போலீஸார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

எதிர்ப்பு கோஷம்

ஒரு கும்பல் திடீரென மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக, எடப்பாடி, ஓ.பி.எஸ் ஒழிக என்று கோஷமிட்டதும், பதற்றமடைந்த போலீஸார் அவர்களைத் தூக்கிக்கொண்டு போய் வேனுக்குள் ஏற்றினர். பின்னர் எதிர்ப்பு கோஷம் அடங்கியது. எனினும், அண்ணே நானும் வரட்டுமா என்று பலர் போன்செய்து, கலைராஜனிடம் விசாரிக்க, வேணாம்பா, இங்க இருக்கிறவங்கள போலீஸ் கைதுபண்ணுது. நீ வேற எதுக்கு இங்க வர்றே. உள்ளே போகப் பிரியப்பட்டா வா என்றார். அருகில் இருந்த ஊடகக்காரர்களிடம், நான் பார்த்து வளர்த்துவிட்ட ஆட்கள் எல்லாம் இன்னைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-ன்னு போய்ட்டாங்க என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி, "என் தாயினுடைய வீட்டில் எப்படி இவர்கள் நுழைந்தார்கள். எப்படி ரெய்டு நடத்துவதற்கு தமிழக அரசு இவர்களுக்கு அனுமதி கொடுத்தது. எங்களுடைய சந்தேகம், இது தமிழக அரசுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதுதான் எங்கள் கேள்வி. பகல் நேரத்தில் வந்திருக்கலாம். ஏன் இரவு நேரத்தில் வந்தார்கள். அரசின் கட்டுப்பாட்டில்தான் வீடு இருக்கிறது. இந்த ரெய்டு குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பதில் சொல்ல வேண்டும்" என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

பேச்சாளர் குண்டுகல்யாணம், "அம்மா வீட்டினுள் எதை எடுக்க வந்தார்கள். இல்லையெனில் பொருள்களைக் கொண்டு வந்து வைத்து விட்டு, இங்கு இருந்தது என்று சொல்வார்களா. பொதுமக்கள் சந்தேகமும் இதுதான். அம்மா மறைந்த பிறகு அழுததை விட இன்றைக்கு அதிக வேதனையில் அழுகிறோம். அரசு பொறுப்பில் வீடு இருக்கிறது. அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார் ஆவேசமாக.