Published:Updated:

ரெய்டு... தண்டனை... சசிகலா முகாம் மீதான அதிரடியின் பின்னணி!

ரெய்டு... தண்டனை... சசிகலா முகாம் மீதான அதிரடியின் பின்னணி!
ரெய்டு... தண்டனை... சசிகலா முகாம் மீதான அதிரடியின் பின்னணி!

வருமானவரித் துறையின் கிடுக்குப்பிடி, நீதிமன்றத்தின் தண்டனை, ஜெயலலிதா வாழ்ந்துமறைந்த போயஸ் கார்டன் இல்லத்தில் ரெய்டு என சசிகலா குடும்பத்தினைச் சுற்றி அடுத்தடுத்து நடக்கும் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஆட்டம்கண்டுள்ளது.

1991-96-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சர்வ வல்லமையுடன் ஆளுமை செலுத்தியது சசிகலாவின் குடும்பம். யதேச்சதிகாரத்தில் அந்தக் குடும்பத்தினரின் ஆளுமையால் தமிழக ஆட்சியிலே அந்த ஐந்து ஆண்டுகள் கரும்புள்ளியாகவே பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வரிசையாக வழக்குகளைப் பாய்ச்சியது. பல வழக்குகளில் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட அவருடைய உறவுகளுக்கு விடுதலை கிடைத்தாலும், மத்திய அரசின் கீழ்வரும் அமலாக்கத் துறை மற்றும் பெரா வழக்குகள் இருபது ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்தது. அதேபோல், சசிகலா உறவுகள் சிலர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்துவந்தது. இந்த வழக்குகள் எல்லாம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்துவந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து வழக்குகளும் இப்போது வேகமெடுத்து வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கலாம் என்று எதிர்பார்ப்பில் இருந்த சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அந்தக் கனவு கலைந்துபோனது. அதன்பிறகு அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த தினகரன்மீது மத்திய அரசின் பிடி இறுகியது. அவர்மீது இருந்த பெரா வழக்கினைத் தூசி தட்டிய நீதிமன்றம், அந்த வழக்கினை வேகப்பபடுத்தியது. அதேபோல், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டார் தினகரன். 

மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தினகரன் தம்பி பாஸ்கரன், சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளும் வேகமெடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்கவேண்டும் என்ற முடிவில் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

மத்திய அரசு சசிகலா குடும்பத்தின் சொத்துவிவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. அதேநேரம், தமிழக அரசும் மத்திய அரசிடம், சசிகலா குடும்ப உறவுகளிடம் இருக்கும் பணத்தினால் தங்களால் அ.தி.மு.க-வை முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் போவதாக ஒருபுறம் புலம்பியது. இதற்கு முடிவுகட்ட நினைத்த மத்திய அரசு, வருமானவரித் துறையைச் சசிகலா உறவுகள், நண்பர்கள், அவர்களின் பணியாளர்கள் என 187 இடங்களில் ரெய்டு நடத்தி நாட்டையே கிடுகிடுக்க வைத்தது. ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்த அதிரடி ஆய்வில் பெரிய அளவில் பணமோ, நகையோ சிக்காத நிலையில், ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர் வருமானவரித் துறையினர். 

வருமானவரித் துறையின் ஆய்வு முடிந்து, சசிகலா உறவுகளுக்குச் சம்மன் அனுப்பி வருமான அலுவலகத்துக்கு வரும்படி அழைப்புக் கொடுத்துவரும் நிலையில், அடுத்த அதிரடி நீதிமன்றம் மூலம் நிகழ்ந்தேறியது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டில், சசிகலாவின் அக்கா மகள் சீதளதேவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதத் தொகையும், அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் ரூ.20 லட்சம் அபராதமும் விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இது சசிகலா குடும்பத்துக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சசிகலா குடும்பத்தில் முக்கிய நபராகக் கருதப்படுபவர் சசிகலாவின் கணவர் நடராசன். இப்போது அவருக்கு எதிராகவும் நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. உடல்நலக் குறைவால் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடராசன் சமீபத்தில்தான் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், அவர்மீது நிலுவையில் இருந்த சொகுசு கார் இறக்குமதி வழக்கில் இரண்டு ஆண்டு தண்டனையை உறுதி செய்துள்ளது. 

சசிகலாவின் கணவர் நடராசன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக் கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், நடராசன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் நடராசன், அவரின் உறவினர் வி.என்.பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் யோகேஷ், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஸ்ரிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்தது. இதனிடையே,சொகுசுக் கார் இறக்குமதி தொடர்பாக அமலாக்கத் துறையும், தனியாக நடராசன் உள்ளிட்ட நான்குபேர் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து நடராசன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

வருமானவரித் துறை ரெய்டு, வழக்கின் வேகம், தண்டனை என அடுத்தடுத்த அதிரடிகள் சசிகலா குடும்பத்தின்மீது ஏவப்படுவதின் பின்னணியில் டெல்லி தலையீடு இருக்கும் என்கிறார்கள் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.