Published:Updated:

“டெல்லி காற்று மாசுக்கு தீர்வு!” - பஞ்சாப் அரசுக்கு உதவும் சென்னை ஸ்டார்ட்அப் #NewayEngineers

“டெல்லி காற்று மாசுக்கு தீர்வு!” - பஞ்சாப் அரசுக்கு உதவும் சென்னை ஸ்டார்ட்அப் #NewayEngineers
“டெல்லி காற்று மாசுக்கு தீர்வு!” - பஞ்சாப் அரசுக்கு உதவும் சென்னை ஸ்டார்ட்அப் #NewayEngineers

சுற்றுச்சூழல் மீதான அலட்சியத்தின் முழு பலனையும் அறுவடை செய்துகொண்டிருக்கிறது டெல்லி. தீபாவளிக்குப் பின்னர் எப்போதுமே, டெல்லி பகுதியில் காற்று மாசுபாடு அதிகரிப்பதும், அரசு அதற்காக சில கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் பல வருடங்களாக நடந்துவருகிறது. அதேபோல இந்த வருடமும் தலைநகரம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியிருக்கும் ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, கட்டடக்கழிவுகள், தொழிற்சாலைகள், பட்டாசு வெடிப்பது, வைக்கோல்களுக்குத் தீ வைப்பது என இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமான காரணம் வைக்கோல்களுக்குத் தீ வைப்பது. இதனால் வரும் புகைதான், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லிவாசிகளின் நுரையீரலை வருடந்தோறும் பதம் பார்த்துவருகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும், அவை கைகொடுக்கவில்லை.

இந்நிலையில், இந்தப் பெரும் பொறுப்பை சென்னையைச் சார்ந்த நியூவே இன்ஜினீயர்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது பஞ்சாப் அரசு. இந்த நிறுவனத்தின் உதவியோடு, விவசாயிகளின் வைக்கோல் கழிவுகள் முறையாக நீக்கப்பட்டு, பின்னர் அவை எரிபொருளாக மாற்றப்படும். காற்று மாசுபாட்டை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் குறைத்துவிடமுடியுமா என்ற கேள்வியுடன் நியூவே இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான ஐயப்பனைத் தொடர்புகொண்டோம். இந்தத் திட்டத்தின் அம்சங்கள்குறித்தும், அதன் செயல்முறை குறித்தும் அவர் தெளிவாக விளக்கினார்.

"திடக்கழிவு மேலாண்மைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு. பொதுவாக நாம் குப்பைகளை தரம்பிரிக்கும்போது, மக்கும்குப்பை மற்றும் மக்காத குப்பை என இரண்டு வகைகளாகப் பிரிப்போம். உலகளவிலும் இதுதான் நடைமுறை. இதுகுறித்து மக்களுக்குப் பல ஆண்டுகளாக விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும், இன்னும்கூட குப்பைகளைக் கையாள்வது என்பது சவாலானதாகவே இருந்துவருகிறது. எனவே, இந்த முறையில் திடக்கழிவு மேலாண்மை என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக, நாங்கள் வேறொரு வழியைக் கண்டுபிடித்தோம். அதாவது, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரிக்காமல், எரியும் குப்பை மற்றும் எரியாத குப்பை என இரண்டாகப் பிரித்தோம். இதன்படி காகிதம், பிளாஸ்டிக், உணவுப்பொருள்கள், காய்கறிக்கழிவுகள் போன்ற அனைத்திலுமே கார்பன் இருக்கிறது. எனவே, இவை அனைத்துமே எரியும் தன்மை கொண்டது. கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கட்டடக் கழிவுகள் ஆகிய இரண்டும் எரியாத குப்பைகள்; காரணம், இவற்றில் கார்பன் இல்லை. இப்படி, வீட்டிலிருந்து கிடைக்கும் குப்பைகளை இரண்டு வகைகளாகப் பிரித்து அவற்றை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி கரியாக மாற்றிவிடுவோம். இதன் மூலம் குப்பையானது, உயர்ந்த தரமுள்ள கரியாக மாறிவிடும். இந்தத் தொழில்நுட்பத்துக்கு எங்கள் நிறுவனம் காப்புரிமையும் பெற்றுள்ளது. 

பஞ்சாப் பகுதியில்ஒவ்வொருமுறையும் விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின்னர், வயலில் இருக்கும் வைக்கோலுக்குத் தீ வைத்துவிடுவார்கள். இதனால் எழும் புகையானது அந்தப் பகுதியின் காற்றை முழுவதுமாக மாசுபடுத்திவிடும். இந்தப் புகை பஞ்சாப் மாநிலத்தை மட்டுமின்றி, அருகில் இருக்கும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளையும் பாதிக்கும். இதுகுறித்து அந்தப் பகுதி மக்களுக்கு அரசு சார்பில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும், வயலுக்குத் தீ வைப்பதை விவசாயிகள் தொடர்ந்து செய்துவருகின்றனர். 30 மில்லியன் ஏக்கர் அளவுள்ள விவசாய நிலங்கள், இப்படி தீ வைத்துக்கொளுத்தப்படுகின்றன. இதற்கு முக்கியமான காரணம், விவசாயிகளின் பொருளாதாரம்தான். பஞ்சாப் விவசாயத்தில், ஒரு பருவத்துக்கும் அடுத்த பருவத்துக்கும் இடைப்பட்ட காலம் வெறும் 30 நாள்கள்தான். இந்த 30 நாள்களுக்குள்ளாக விவசாயிகள் வைக்கோலை அகற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்தப் பருவத்துக்கு விவசாயத்தைத் தொடங்க முடியும். ஆனால், வைக்கோலை அகற்றுவதற்கு மனிதஉழைப்பும், அதிகப் பணமும் தேவைப்படும். இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியது. மேலும், இப்படி அகற்றப்படும் வைக்கோல் கழிவுகள் அவர்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படுவது கிடையாது. அங்கே கோதுமைக் கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவதால், இந்த வைக்கோலுக்குத் தேவை இல்லாமல் போகிறது. எனவேதான் அரசு என்ன சொன்னாலும், விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு தீ வைத்துவிடுகின்றனர்.

இந்தச் சிக்கலை எங்களின் தொழில்நுட்பம் மூலமாகத் தீர்க்கமுடியும். இந்த வைக்கோல்களை எங்களால் கரியாக மாற்றமுடியும். இப்படி மாற்றுவதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. முதலாவது சுற்றுச்சூழல். வைக்கோல்களை பாதுகாப்பான முறையில் கையாள்வதால், சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுவது கிடையாது; மேலும், விவசாயிகள் தீ வைக்கும் சம்பவங்களும் நின்றுவிடும். இரண்டாவது, பொருளாதாரம். வைக்கோல்களை மிகக்குறைந்த செலவில் அகற்றுவதோடு, அவற்றை கரியாகவும் மாற்றிவிடுகிறோம். இந்தக் கரியின் மூலம் நமக்கு வருமானமும் கிடைக்கும். சென்னையில் ஏற்கெனவே இப்படி திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு வந்தோம். அப்போதுதான், பஞ்சாப் மற்றும் டெல்லி பகுதிகள் இப்படி ஒரு பிரச்னையில் சிக்கித்தவிப்பது தெரிந்தது; உடனே எங்கள் திட்டம்குறித்து, பஞ்சாப்பின் அமைச்சர்களில் ஒருவரான சித்துவிடம் விளக்கினோம். ஏற்கெனவே அவர்கள் காற்று மாசுபாடுகளைக் குறைக்க நிறைய திட்டங்களைப் பரிசீலித்துவந்தனர். நாங்கள் எங்கள் திட்டத்தை விளக்கவும், இதுகுறித்து ஆர்வமுடன் தெரிந்துகொண்டனர். பின்னர் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் எங்களுக்கு வைக்கோல்களைக் கரியாக மாற்றுவதற்கான அனுமதியையும், அதற்கான நிலத்தையும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன் அடிப்படையில் விரைவில் பஞ்சாப்பில், 400 வைக்கோல் சேமிப்பு மையங்களையும், அவற்றை வினைக்கு உட்படுத்துவதற்கான உலைகளையும் நிறுவஉள்ளோம். முதலில் விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் வைக்கோல்களை இயந்திரங்கள் உதவியுடன் வெட்டி எடுத்து உருண்டையாக மாற்றுவோம். பின்னர் இவற்றை எங்கள் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்தி கரியாக மாற்றிவிடுவோம். இப்படி நாங்கள் தயாரிக்கும் உயர்தரமான கரியைப் பெற்றுக்கொள்ள சிமென்ட் நிறுவனங்கள், இரும்பு ஆலைகள் மற்றும் சில அனல்மின் நிலையங்கள் முன்வந்துள்ளன. அடுத்த ஆண்டு அறுவடை முடிந்ததும் எங்களின் பணி துவங்கிவிடும். எனவே, விரைவில் கட்டுமானப்பணிகளைத் துவங்க உள்ளோம். பஞ்சாப் பகுதியில் இருந்து வெளியேறும் புகையால்தான் பெருமளவு காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எனவே, அங்கே ஒழித்துவிட்டாலே 50 சதவிகிதம் அளவுக்கு காற்று மாசுபடுதலைக் குறைத்துவிடலாம்." என நம்பிக்கையுடன் முடிக்கிறார் ஐயப்பன்.

அடுத்த ஆண்டு டெல்லி மக்கள் நல்லக் காற்றை சுவாசிப்பார்கள் என நம்புவோம்.