Published:Updated:

பா.ஜ.கவை வளர்த்துவிடுவதற்காக ஆளுநர் வந்துள்ளார்..! - தமிழக ஆம் ஆத்மி தாக்கு

பா.ஜ.கவை வளர்த்துவிடுவதற்காக ஆளுநர் வந்துள்ளார்..! - தமிழக ஆம் ஆத்மி தாக்கு
பா.ஜ.கவை வளர்த்துவிடுவதற்காக ஆளுநர் வந்துள்ளார்..! - தமிழக ஆம் ஆத்மி தாக்கு
பா.ஜ.கவை வளர்த்துவிடுவதற்காக ஆளுநர் வந்துள்ளார்..! - தமிழக ஆம் ஆத்மி தாக்கு

சேலம் நான்கு ரோட்டில் உள்ள லட்சுமி அரங்கத்தில் ஆம் ஆத்மி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா, இணைச் செயலாளர் சுதா மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் சரத்பாபு ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ''தற்போது தமிழகத்தில் ரெய்டு சீசனாக இருக்கிறது. நேற்று இரவு முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 187 இடத்தில் சசிகலாவுக்குச் சொந்தமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தினார்கள். இது அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. சிறைத் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியின் தனி அறை சோதனை நடத்தக்கூடாது. அது கோயில் போன்றது என்று சொல்வதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவின் தனி அறையையும் சோதனையிட வேண்டும். குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டினால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.

தற்போது இந்தியாவில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் பதவிக்கான ஒரே தகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தால் போதும். தமிழத்தில் பி.ஜே.பியை வளர்த்து விடுவதற்காக பன்வாரிலால் புரோஹித் வந்திருக்கிறார். ஆளுநர் ஆய்வுசெய்வது சரி என்றால் குடியரசுத் தலைவர் சி.பி.ஐ, ரிசர்வ் வங்கியை ஆய்வு செய்ய மோடி அனுமதிப்பாரா?

தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. அதை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். சேலம் கலெக்டர் ரோஹிணி வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி ஆய்வுசெய்து அபராதம் விதிக்கிறார். ஆனால், அவர் அலுவலகத்துக்கு பின்புறமே திருமணி முத்தாறு என்ற கழிவு நீர் ஓடுகிறது. கொசு உற்பத்தி தொழிற்சாலையாக இது இருக்கிறது. இதற்கு யார்மீது அபராதம் போடுவது. எனவே, ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சேலத்தில் ஆம் ஆத்மி, தூய்மை சேலம் என்ற அமைப்பின் மூலம் ஒரு வார்டுக்கு 7 பேர் தூய்மைப் பணியை மேற்கொள்வார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இடத்தை ஆம் ஆத்மி பிடிக்கும். கெஜ்ரிவால் ஒரு பாட்டின் மூலம் டெல்லியில் முதல்வர் ஆனதைப்போல நாங்கள் எடுத்திருக்கும் ''சாதாரண மனிதன்'' என்ற திரைப்படம் புரட்சி செய்ய இருக்கிறது. அந்த திரைப்படத்தின் மூலம் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்'' என்றார்.