Published:Updated:

டிவி செய்தி ஆசிரியர்களைச் சந்திக்கிறார் பிரதமர்

புதுடெல்லி, பிப்.15,2011

டிவி செய்தி ஆசிரியர்களைச் சந்திக்கிறார் பிரதமர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் நாளை செய்தித் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பேட்டி நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. ##~~##

பிரதமர் தனது '7 ரேஸ் கோர்ஸ்' இல்லத்தில் நாளை காலை செய்தி ஆசிரியர்களை சந்திப்பார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் தூர்தர்ஷன் சேனலில் காலை 10.30 மணிக்கு இந்தப் பேட்டி தொடங்கும்.

இந்தக் கலந்துரையாடலை தனியார் செய்தித் தொலைகாட்சி சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்ப அனுமதிப்பது குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசித்து வருகிறது.

ஒருவேளை அனுமதிக்கப்படாத சூழலில், தூர்தர்ஷனில் இருந்து பெற்று நேரலை செய்ய தனியார் சேனல்கள் முடிவு செய்துள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலை வாசி உயர்வு என பல்வேறு பிரச்னைகளுக்கு பிரதமர் பதிலளிப்பார் எனத் தெரிகிறது.

ஊழல் விவகாரங்களில் பிரதமர் தனது மெளனத்தைக் கலைய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்தப் பேட்டியின் மூலம் தன்னை வெளிப்படைத்தன்மை கொண்டவர் என காட்டிக் கொள்வார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.