Published:Updated:

எங்கு தொடங்கியது இந்த மோதல். கமல் Vs பி.ஜே.பி ஒரு அரசியல் ரீவைண்ட்!

எங்கு தொடங்கியது இந்த மோதல். கமல் Vs பி.ஜே.பி ஒரு அரசியல் ரீவைண்ட்!
எங்கு தொடங்கியது இந்த மோதல். கமல் Vs பி.ஜே.பி ஒரு அரசியல் ரீவைண்ட்!

ரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்; அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. போர் வரட்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம்" என்று தன் ரசிகர்கள் மத்தியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். இதன்மூலம் அவர் 'அரசியலில் கால்பதிக்கத் தயாராகிறார்' என்று தெரியவந்தது. ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்த சில தினங்களிலேயே, நடிகர் கமல்ஹாசனும் தன் பங்குக்குக் களத்தில் இறங்கி ட்விட்டர் மூலமாக மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினார். கமலின் அரசியல் கருத்துகளுடன் கூடிய பேச்சில், தமிழக அரசை எதிர்த்த அளவுக்கு மத்திய பி.ஜே.பி. அரசை அவர் விமர்சிக்கவில்லை என்பதுதான் உண்மை. இப்படிப் போய்க்கொண்டிருந்த கமலின் அரசியலை நோக்கிய பயணம் தற்போது சற்றே மாறத் தொடங்கியுள்ளது.

பி.ஜே.பி பற்றி கமலின் கருத்து என்ன? 

மத்திய அரசு கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, ஆரம்பத்தில் அதனை ஆதரித்தார் கமல். ஆனால், "அப்போது டீமானிட்டைசேஷனை ஆதரித்தது, அதன் விளைவுகளை அறியாமல் பதிவிட்ட கருத்து" என்று மத்திய அரசுக்கு எதிராக பல்டி அடித்தார். 

தமிழக அரசை தொடர்ந்து கமல் விமர்சித்து வந்த நிலையில், கமல்ஹாசனுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார், "கமல் முதலில் அரசியலுக்கு வந்துவிட்டு பேசட்டும்" என்று தெரிவித்து சூட்டைக் கிளப்பவே, கமல் அரசியல்ரீதியான கருத்துகளைத் தெரிவிப்பதும், ட்விட்டரில் அரசுக்கு எதிராகப் பதிவுகளைப் போடுவதும், அறிக்கைகளை அளிப்பதும் தொடர்கதையாக தமிழக அரசியல் களம் மேலும் அனலில் தகித்தது. ஜெயக்குமாருக்குப் பதிலளித்த கமல், "நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்" என்றார். இதனால், பல்வேறு அமைச்சர்களுக்கும், கமலுக்கும் அறிக்கைப் போர் உருவாகி, தொடர்ந்து கருத்து மோதல் அதிகரித்துக் கொண்டே சென்றது. 

இந்நிலையில்தான், தமிழக அரசை மட்டுமே விமர்சித்து வந்த அவர், மத்திய பி.ஜே.பி-யுடனும் அவ்வப்போது உரசல் போக்கைக் கடைபிடித்தார். அதுவரை 'கமல் ஏன் மத்திய அரசை எதிர்த்துப் பேசவில்லை' என்ற விமர்சனத்தை அரசியல் ஆர்வலர்கள் எழுப்பினர். இதுபோன்ற சூழலில்தான், கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்து தமிழக அரசியல் களத்தையும், மத்திய -மாநில அரசையும் கலக்கத்தில் ஆழ்த்தினார். இத்தகைய சந்திப்புகள், 'பி.ஜே.பி-க்கு எதிரான மனநிலையில்தான் கமல் இருக்கிறார்' என்பதை மிகத்தெளிவாக உறுதிப்படுத்தின. இந்த நிலையில் திடீரென 'நிர்வாக ரீதியாக பி.ஜே.பி-யுடன் இணைந்து செயலாற்றுவதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை' என்று தெரிவித்து, தன் நிலைப்பாட்டை உறுதிசெய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கினார் கமல். 

கடந்த சில மாதங்களுக்கு முன், டெங்குக் காய்ச்சல் பாதிப்புகள் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் வகையில், நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்க முடிவெடுத்து, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள், நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்றும், அதுதொடர்பான ஆய்வு முடிவுகள் வந்தபிறகே முடிவெடுக்க வேண்டும் என்று பதிவிட்டு பலத்த சர்ச்சையை எழுப்பினார் கமல். 'டெங்குக் காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு வழங்கிவரும் நிலவேம்பு கசாயத்தால், பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்மறையான கருத்துகள் பரவி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனவே, அதுகுறித்து சரியான விளக்கம் கிடைக்கும் வரை அதனை தன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விநியோகிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு, பல எதிர்ப்புக்குரல்களை எதிர்கொண்டார். நிலவேம்புக் குடிநீர் தொடர்பான கமலின் கருத்துக்கு பி.ஜே.பி. தரப்பிலிருந்தும் எதிர்வினை எழுந்தது. 

பி.ஜே.பி. மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் பேசுகையில் 'நிலவேம்புக் குடிநீர் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல' எனத் தெரிவித்திருந்தார். 

வலுக்கும் மோதல்...

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. அந்தப் படத்தில் 'ஜி.எஸ்.டி. குறித்து தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்' என்று பி.ஜே.பி. சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், நடிகர் விஜய்-க்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டார். அதில், " 'மெர்சல்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. அந்தப் படத்தை மறுபடியும் தணிக்கை செய்ய வேண்டாம். எதிர் விமர்சனம் தர்க்கரீதியான விமர்சனமாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் வாயை அடைக்காதீர்கள். வெளிப்படையாகப் பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற தொனியில் கமல் வெளியிட்ட இந்தக் கருத்துக்கு பி.ஜே.பி. தரப்பில் மிகப்பெரும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இவ்வாறு கமல்ஹாசனுக்கும், பி.ஜே.பி-க்கும் இடையே நீடித்து வந்த இத்தகைய மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.  

அதை உறுதிசெய்யும் வகையில், பி.ஜே.பி. தேசியச்செயலாளர் ஹெச். ராஜா,  "நடிகர் கமல்ஹாசனுக்கு சினிமாவைத் தவிர்த்து அரசியல் ஞானம் இல்லை. அவரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். 

இதைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி கமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தப் பின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக் கூடாது. மக்களும், குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம். தயவாய்" என்று பதிவிட்டிருந்தார். 

இந்தப் பதிவு குறித்து கருத்து வெளியிட்ட பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "கமல் பதிவிடும் கருத்துகள், கடுமையாக உள்ளது. அதனைப் புரிந்துகொள்வதற்குக் கோனார் தமிழ் உரை தேவைப்படுகிறது" என விமர்சித்திருந்தார். 

இப்படி அண்மைக்காலமாக பி.ஜே.பி-க்கும், கமலுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது... "பி.ஜே.பி-க்கு சவாலாக தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடக்கட்சிகள் என்றிருந்த சூழல் மாறி தமிழ்நாட்டில் தற்போது நடிகர்களும் அக்கட்சிக்கு சவாலாகத் திகழத் தொடங்கியுள்ளனர்" என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.