Published:Updated:

ரெய்டின் அடுத்தகட்டம் என்ன... விவேக் ஜெயராமன் கைது செய்யப்படுவாரா..? #ITRaid #JayaTV

ரெய்டின் அடுத்தகட்டம் என்ன... விவேக் ஜெயராமன் கைது செய்யப்படுவாரா..? #ITRaid #JayaTV
ரெய்டின் அடுத்தகட்டம் என்ன... விவேக் ஜெயராமன் கைது செய்யப்படுவாரா..? #ITRaid #JayaTV

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் என 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் அண்மையில் வருமான வரிச் சோதனை நடத்திய செய்தி, ஒருவாரமாக அகில இந்திய சேனல்களில் தலைப்புச் செய்தியாக இருந்தன. டெல்லி தலைமை வருமான வரித்துறையே ஒவ்வொரு நாளும் சோதனையில் கிடைத்த ஆவணங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. சசிலாவுக்கு எதிர் முகாமில் இருந்தவர்களும் இந்த சோதனைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்கள். 

ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகனாக சசிகலாவின் அக்காள் மகன் வி.என். சுதாகரனை அறிவித்து, நாடே திரும்பிப் பார்க்கும்வகையில் அவருக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்திவைத்தது, பலத்த அதிர்வலைகளை உருவாக்கியது. அப்போது செய்த ஆடம்பரங்கள், சொத்துக்களை வாங்கிக் குவித்தது போன்றவை எல்லாம் பின்னாளில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குகளாகப் பாய்ந்தன. தி.மு.க. ஆட்சியில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து நடத்தப்பட்ட வழக்குகள், பல கட்டங்களைக் கடந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயில் தண்டனை விதித்தது. பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, ஜெயலலிதா உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர், இந்த வழக்கில் கீழ்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இப்போது, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சசிகலா, இளவரசியை கம்பி எண்ணவைத்த சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்ட விசாரணையில் இருந்தபோதுதான், இளவரசியின் மகன் விவேக், புதிய அதிகாரமையமாக உருவெடுத்தார். 

2015-ம் ஆண்டு, விவேக் தொடங்கிய ஜாஸ் சினிமாஸ் தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது. தொழில் நிறுவனங்களில் விவேக் செய்த முதலீடுகள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அப்போது கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், 25 வயதில் விவேக் ஜெயராமனின் வளர்ச்சி 'கிடுகிடுவென்று' உயர்ந்தது. சசிகலாவின் உறவுகள் அனைவரையும் 'ஓவர்டேக்' செய்துவிட்டு, விவேக்கின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்தது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, விவேக் மீது ஏராளமான புகார் வெளியானதால் அவரின் திருமணம் சென்னையில் நடந்தபோதிலும், ஜெயலலிதா நேரில் போகவில்லை. ஆனாலும், சசிகலாவின் முழு ஆசிர்வாதம் இருந்ததால் விவேக்கின் வளர்ச்சிக்கு யாராலும் முட்டுக்கட்டை போடமுடியவில்லை. இளவரசியின் மகன் விவேக்கின் அசுர வளர்ச்சியே சசிகலா குடும்பத்திற்கு தற்போது தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. 

'ஜெயலலிதா மரணம்.., அ.தி.மு.க-வில் பிளவு, சசிகலா சிறையில் அடைப்பு', என அடுத்தடுத்து ஏற்பட்ட சரிவுகள், சசிகலா குடும்பத்தினரிடையே அரசியல் அதிகாரம் தொடர்பாக புயல் கிளம்பியது. அரசியலில் இருந்து படிப்படியாக சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டது. இந்த நிலையில்தான், சசிகலா குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வாங்கிக்குவித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், போலி நிறுவனங்கள், பினாமிகள் பட்டியல் என்று அடுத்தடுத்து கிளம்பிய புகார்கள், பொருளாதார உளவுப் பிரிவுக்கு பறந்தன. அந்தப் புகார்களைப் பார்த்து பொருளாதார உளவுப் பிரிவே மலைத்துப்போனது.

இந்தப் புகார்களை எல்லாம் பல மாதங்களாக ரகசியமாகக் கண்காணித்த பிறகே, வருமான வரித்துறையினர், நவம்பர் 9-ம் தேதி அன்று அதிரடியாக களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை குறித்து இதுவரை வருமான வரித்துறை சார்பில் வெளிப்படையான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. "ஏன் இந்த மவுனம்" என்று வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரை நாம் நேரில் சென்று சந்தித்தோம். 'வருமான வரித்துறை சோதனை குறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியிட நீதிமன்றங்கள் விதித்த தடை அமலில் உள்ளது' என்று கூறிய அதிகாரிகள், 'பெயர் வெளியிடக் கூடாது' என்ற நிபந்தனையோடு சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அதை அப்படியே தருகிறோம்.

''வரி ஏய்ப்பு குறித்து உறுதியான தகவல் கிடைத்ததால்தான், இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஐந்து நாட்கள்வரை நீடித்த விசாரணையில் 1,430 கோடி ரூபாய் மதிப்பளவுக்கு சொத்து ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கி உள்ளன. 65-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்துள்ளோம். அவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 187 இடங்களில் ரெய்டு நடந்தபோது, பல இடங்களைச் சீல் வைத்துள்ளோம். அந்த இடங்களை திறந்துப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மூலம் சசிகலா குடும்பத்தினர் நடத்தியதாக சொல்லிக் கொள்ளும் நிறுவனங்களின் டின் எண்கள் கிடைத்துள்ளன. அவை மூலம் நடந்த பண பரிவர்த்தனை விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றியும், ஏற்கனவே நடந்த சோதனைகள் குறித்தும் சம்மன் அனுப்பி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து முறையான விசாரணையை சம்பந்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ள இருக்கிறோம். சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல; யார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாலும் எங்களுக்கு வரும் புகாரில் அடிப்படை ஆதாரம் இருந்தால் எங்கள் கடமையைச் செய்வோம். வெளிநாட்டில் பதுக்கினாலும் எங்களுக்குத் தகவல் கொடுக்கலாம்.

இப்போது பெரிய பணக்காரர்களே பினாமியாக இருக்கிறார்கள். 'சசிகலா குடும்பத்தில் யார்-யார் பினாமியாக இருக்கின்றனர்? அவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் இருக்கின்றன? பினாமிகளாக இருப்போர் எந்த நாட்டில் இருக்கிறார்கள்? எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன?' என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் மீது பினாமி தடுப்புச்  சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை  மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தால், பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

வருமான வரி சோதனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும் அதிகாரம், நீதிமன்ற உத்தரவின்பேரில் செயல்படுத்தப்படும். முன்பெல்லாம் வருமான வரித்துறை சோதனை முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கம்  மற்றும் பல விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். அதுதொடர்பாக நிறைய வழக்குகள், நீதிமன்றத்தில் போடப்பட்டு, வருமான வரி ரெய்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட எங்களுக்கு அனுமதி இல்லை. எனவேதான், எங்களால் ரெய்டு தொடர்பான தகவல்களை வெளியிட முடியவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே நாங்கள் செயல்படுகிறோம். தற்போது பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் தேவைப்பட்டால் விசாரணை நடத்துவோம்" என்றனர். 

ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட  இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, அவர்களை மீண்டும் நேரில் அழைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியோடு, கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளியே கொண்டுவருவதற்கும் வருமான வரித்துறை தயாராகி வருகிறது. வருமான வரித்துறையின், அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி சசிகலா குடும்பம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.