Published:Updated:

மிலாடி நபி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, பிப்.15,2011

மிலாடி நபி திருநாளையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ##~~##

முதலவர் கருணாநிதி:

நபிகள் நாயகம் அன்பில் அமைதியைப் போதித்தார். அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாக கருதினார்.

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும்; ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்.

நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி அடுத்தவர் நலன் கருதி ஆற்றும் அருட்பணிகளை அறம் என வலியுறுத்தினார்.

இத்தகைய அறநெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென கருதி மிலாடி நபித் திருநாளுக்கு 1969-ம்ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்க ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியதை இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.

2001ம்ஆண்டு ஏற்பட்ட அதிமுக அரசு மிலாது நபி திருநாள் விடுமுறையை ரத்து செய்ததையும், 2006ம் ஆண்டு இந்த அரசு மீண்டும் அமைந்த போது மிலாடி நபி திருநாளுக்கு மறுபடியும் அரசு விடுமுறை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாக திகழ்வதையும் சுட்டிக்காட்டி மிலாபி நபி திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

அண்ணல் முகமது நபி பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளான அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை மீண்டும் ஏற்படவும், தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகவும் உழைப்போம் என உறுதி கொள்வோம்.
 
இறைநபி பிறந்த நாளைக் கொண்டாடி இன்புறும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன்நபி வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
 
ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழ் நாட்டில் மீலாது விழாக்களில் பங்கு ஏற்று, நபிகள் பெருமானின் பெருமைகளை எடுத்து உரைத்து, மத நல்லிணக்கத்துக்கு வலுவூட்டும் வகையில், சொற்பொழிவு ஆற்றினர்.
 
தமிழ்நாட்டில் அன்பையும், பரிவையும், விருந்தோம்பும் உன்னதப் பண்பையும் போற்றி வரும் இஸ்லாமியப் பெருமக்கள், மீலாது விழாவைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.