Published:Updated:

சசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை!

சசிகலா குடும்பத்தினர்  சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை!
சசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை!

சிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் அடுத்த கட்ட நகர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வருமான வரி புலனாய்வு துறையின் வேலை ரெய்டு நடத்துவது மட்டும் அல்ல. ரெய்டுக்கு உள்ளானவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதும் அவர்களின் முக்கியமான பணி.

நம்பிக்கை என்றால் பூங்குன்றன்

'ஆபரேஷன் க்ளீன் மணி' என்ற பெயரில் தமிழகத்தில் வருமானவரித்துறை நடத்திய மெகா ரெய்டு அடுத்த கட்டத் திருப்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.  சசிகலாவால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் ரெய்டு நடத்தியதையும், அவரிடம் விசாரணை நடத்தியதையும்தான் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதுகிறது. ஜெயலலிதாவிடம் வெறும் உதவியாளராக மட்டும் இல்லாமல், அ.தி.மு.க-வின் நிழல் சக்தியாகவும்,  ஜெயல லிதா, சசிகலா ஆகியோர் வாங்கிக்குவித்த சொத்துகளை நிர்வகிப்பவராகவும், கணக்கில் வராத பணத்தைப் பார்த்துக்கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய நபராகவும் இருந்தார்.
அவரிடம் வருமானவரித்துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முக்கியமான தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்திருக்கிறது.

“சசிகலா 2011-ம் ஆண்டு கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர் கவனித்து வந்த பல நிழல் நிறுவனங்களில் இருந்து அவரை ஜெயலலிதா நீக்கி விட்டார். அந்த இடத்தில் பூங்குன்றனின் பெயரைச் சேர்த்தார். அந்த அளவுக்கு பூங்குன்றன் மீது ஜெ நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, நிழல் நிறுவனங்களின் விவரங்களையும், அதில் செய்யப்பட்ட முதலீடுகளையும் பூங்குன்றன் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில்தான் 188-வது இடமாக போயஸ்கார்டனும் ரெய்டு லிஸ்டில் சேர்க்கப்பட்டது. குறிப்பாக சசிகலாவின் அறை, பூங்குன்றனின் அறை ஆகியவற்றில் மட்டும் சோதனை நடத்துவதற்கு அனுமதி வாங்கப்பட்டது. இதனால்தான் மூன்று அதிகாரிகளை மட்டும் சோதனைக்காக தேர்ந்தெடுத்தோம். ஆய்வும் 5 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
 
187 இடங்களில் நடந்த விசாரணையில் பல ஆவணங்களுக்கான நகல்கள் கிடைத்தன. இந்த ஆவணங்களுக்கான மூல ஆவணங்கள் எங்கே இருக்கிறது என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, ச சிகலாவிடம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.  இதன்காரணமாகவும் 17-ம் தேதி போயஸ்கார்டன் ரெய்டு நடந்தது.

அழித்தவற்றை மீட்கலாம்

வருமானவரித்துறையினர் எடுத்துச் சென்ற கம்ப்யூட்டர், லேப் டாப், பென்டிரைவ்கள் ஆகியவற்றில் இருக்கும் ஆவணங்கள் அழிக்கப்பட்டாலும்,  அவற்றை மீண்டும் எடுக்க முடியும். வருமானவரி புலனாய்வு பிரிவில் அதற்கென தொழில்நுட்ப பிரிவு உள்ளது. அவர்களால் இந்த ஃபைலை எடுக்க முடியும். அப்படியும் இயலாவிட்டால், ஐதராபாத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி அழிக்கப்பட்ட  ஃபைல்களை திரும்பவும் பெறமுடியும் என்று வருமானவரித்துறையினர் சொல்கிறார்கள். அழிக்கப்பட்ட தகவல்களை மீட்ட பின்னர், அதன் அடிப்படையில் மேலும் சிலரது வீடுகளில் அல்லது இடங்களில் ரெய்டுகளும் நடக்கும். இப்போது நடந்து முடிந்த சோதனைகளின் அடிப்படையில் சராசரியாக 300 பேரிடம் விசாரணை நடத்துவது என்றும் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.அதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணிகளும் தொடங்கி உள்ளன.

குறைவான மதிப்பு

188 இடங்களிலும் கைப்பற்ற ஆவணங்களில் இருந்து 1000 கோடி  ரூபாய்களும் அதிகமான சொத்துக்களுக்கான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.  ஆனால், ஆவணங்களில்  குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு  சட்டத்துக்கு உட்பட்ட மதிப்புதான். எந்தெந்த ஆண்டுகளில் வாங்கப்பட்டதோ, அந்த ஆண்டுகளுக்கான   சந்தை மதிப்பை விட குறைவான விலையிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து புலனாய்வு பிரிவு அலுலவகத்தில் உள்ள சென்ட்ரல் சர்க்கிள் என்ற பிரிவில் ஆய்வு செய்வார்கள். இப்போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் முந்தைய பத்து ஆண்டுகளில், சம்பந்தப்பட்டவர்கள் செலுத்திய வருமான வரிக் கணக்குகளின் ஆவணங்களையும் மறு ஆய்வு செய்வார்கள்.  அதன் அடிப்படையில், தற்போதைய ஆவணங்கள்,  கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக்கான மறுமதிப்பீடு அடிப்படையில்  கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். சம்பந்தப் பட்டவர்கள், இதற்கு மறுப்பு தெரிவித்தால்,  செட்டில்மென்ட் கமிஷனில் முறையீடு செய்யலாம்.  இதில் 18 மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும். எனவே,   ச சிகலா, டி.டி.வி தரப்பில் செட்டில்மெண்ட் கமிஷனிலும் முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சரண் அடைந்தால் தப்பிக்கலாம்
 
இது குறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டோம்." வருமானவரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் விளக்கம் கேட்பார்கள். ஆனால், இதுவரையும் வருமானவரித்துறையினர் எந்த ஆவணமும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால், உரிய முறையில் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் எங்களுடைய பதில் நடவடிக்கை இருக்கும். அதன்பின்னர்தான் வழக்கிறிஞர்கள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இது குறித்து ஆடிட்டர் ஒருவரிடம் கேட்டோம். "ஒருவர் 100 ரூபாய் வருமானம் பெற்றால். அதில் 30-ஐ மட்டும் வருமானமாக காண்பிக்கிறார் என்று வைத்துக் கொண்டால், மீதி 70 ரூபாய் வருமான வரி துறையால் கண்டுபிடிக்கப்பட்டால் பிரச்னை ஏற்படும். எனவே வருமானவரித்துறை கண்டுபிடிக்கும் முன்பே, செட்டில்மென்ட் கமிஷனில் மொத்தமாக 100 ரூபாய் நான் சம்பாதித்தேன் என்று சரண் அடைந்து விட்டால், பிரச்னை இருக்காது" என்றார்.

நடவடிக்கை உறுதி

செட்டில் மென்ட் கமிஷன் போவது, ஒரு நபருக்கு சட்டரீதியாக பாதுகாப்பையும் தரும் என்கிறார்கள். இது குறித்து

வருமானவரித் துறை வழக்குகளில் ஆஜர் ஆகும், நளினி சிதம்பரத்திடம் கேட்டோம். "வருமான வரிச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்கள், செட்டில்மென்ட் செய்கிறோம் என்று பெட்டிஷன் போடுவார்கள். ஆனால், அதை வருமானவரித்துறை கமிஷனர் தரப்பில் ஒரு மனு போட்டு தள்ளுபடி செய்யும்படி கோருவார்கள். இவர்கள் பல ஆண்டுகளாக வருமானவரி கட்டாமல் ஏமாற்றி இருக்கின்றனர். இவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சொல்வார்கள். வருமானவரித்துறையின் கோரிக்கையை ஏற்று செட்டில்மென்ட் அமர்வு அவர்களின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. 75 சதவிகித ரெய்டு வழக்குகள் செட்டில்மென்ட் கமிஷனால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ரெய்டுகளில் தொடர்புடையவர்கள் செட்டில்மென்ட் கமிஷனில் முறையிடுவார்கள். ஆனால், அவர்களின் முறையீடுகள் நிராகரிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அதே நேரத்தில் உண்மையிலேயே தெரியாமல் நடைபெற்ற தவறுதான் என்று தெரியவரும்போது, சில நேரங்களில் வருமானவரித்துறையின் நடவடிக்கைக்கு செட்டிமென்ட் கமிஷன் தடைவிதிக்கவும் கூடும்" என்றார்.
 
முதல் ரெய்டு இதுதான்

1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வர் ஆனபின்னர்தான் சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்குவிப்புகள் தொடங்கின. எனவே, அப்போதில் இருந்தே வருமானவரித்துறைக்கு சசிகலா குடும்பம் குறித்தும், அவர் குவித்த சொத்துகள் குறித்தும் தகவல்கள் வந்தபடி தான் இருந்தன. ஆனால்,  1996-ல்  தி.மு.க அரசு ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினர் மீது தனியாக சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டது. இதனால், வருமானவரித்துறை சார்பில் தனியாக ஒரு நடவடிக்கை தேவை இல்லை என்று கருதப்பட்டதாகத் தெரிகிறது.

இதன்பின்னர், ஜெயலலிதா முதல்வர் ஆனபோதெல்லாம் ச சிகலாவின் குடும்பத்தினர் சொத்துகள், நிறுவனங்களை குவிக்க ஆரம்பித்தனர். அதுகுறித்து பாதிக்கப்படவர்கள் தரப்பில் இருந்து வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அரசியல் சூழல்கள், நிர்பந்தம் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.  இப்போதுதான் முதன் முறையாக வருமானவரித்துறை சார்பில் சசிகலா  குடும்பத்தினர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. சசிகலா மீது இப்போதுதான் விசாரணை தொடங்கி இருக்கிறது. ஆனால், பூங்குன்றனிடம் கடந்த ஜூலை மாதமே டெல்லி அழைத்துச் சென்று வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சசிகலா குடும்பத்தினர் ஓடவும், ஒளியவும் முடியாது. அரசியல் ரீதியாகவோ அல்லது வருமானவரித்துறையிலோ சரண் அடைந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.