Published:Updated:

மும்பை தாக்குதல் 10-வது ஆண்டு - தீவிரவாதிக்கு பாகிஸ்தான் தந்த பரிசு!

மும்பை தாக்குதல் 10-வது ஆண்டு - தீவிரவாதிக்கு பாகிஸ்தான் தந்த பரிசு!
மும்பை தாக்குதல் 10-வது ஆண்டு - தீவிரவாதிக்கு பாகிஸ்தான் தந்த பரிசு!

மும்பையில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிரைப் பறித்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்து, வரும் 26-ம் தேதியன்று அதன் கோர நினைவு தினம் வரும்நிலையில், அதில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்பட்ட தீவிரவாதி ஹஃபிஸ் சயீதுவை வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சயீதுவை மேலும் 90 நாள்களுக்கு காவலைத் தொடர உத்தரவிடுமாறு லாகூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது.  ஆனால், அந்த நீதிமன்றத்தின் சீராய்வுப்பிரிவானது, அதை ஏற்க மறுத்துவிட்டது. சயீதுவை தொடர்ச்சியாக வீட்டுக்காவலில் வைத்திருப்பதற்கான முகாந்திரத்தையும் அரசுத் தரப்பால் நிரூபிக்கமுடியாததால், அவர் விடுவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

சயீதுவின் தலைமையிலான ஜமாத்- உத்- தவா அமைப்பின் கூட்டாளிகளான அப்துல்லா உபைது, ஜாஃபர் இக்பால், அப்துல் ரகுமான் அபைது, காசி காசிஃப் நியாஸ் ஆகியோரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சிறைவாசத்தை எதிர்த்து இதைப்போலவே சீராய்வு மனுத்தாக்கல்செய்து, கடந்த மாதம் விடுவிக்கப்பட்டனர். 
லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் எனக் கூறப்படும் சயீது, மும்பைத் தாக்குதலில் 160 பேர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர் என இந்திய தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. ஆனால், தனக்கும் ஆயுத நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஜமாத்-உத்-தவா அமைப்பும் ஒரு தொண்டு அமைப்பே என்றும் சயீது கூறிவருகிறார். 

முன்னதாக, கடந்த ஜனவரியில் உள்நாட்டுப் பயங்கரவாத சட்டத்தின்படி சயீதுவும் அவருடைய கூட்டாளிகள் நால்வரும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்காவலை மாகாண உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு உட்படுத்தும். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியன்று சயீதுவின் வீட்டுக்காவல் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சிறைவாசம் தொடர்ந்தபோதும் சயீதுவின் ஜமாத்-உத்-தவா அமைப்பின் சார்பில் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 7-ம் நாளன்று ’மில்லி முஸ்லிம் லீக்’ எனும் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், அதில் சயீது பங்கேற்கவில்லை. 

அக்கட்சியின் தலைவராக சைஃபுல்லா காலித் அறிவிக்கப்பட்டபோதும், கட்சியில் சயீதுவின் தலைமைகுறித்து அவர் மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சயீதுவின் விடுதலைக்குப் பிறகுதான் அதைப் பற்றி தெரியும் என்பதுடன் நழுவிக்கொண்டார். 

அதன் பிறகு, அண்மையில் பாகிஸ்தானில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் கோட்டையாக இருக்கும் லாகூரில், மில்லி கட்சியானது தன் வேட்பாளரை நிறுத்தி, நான்காவது இடத்தில் வந்தது. மொத்த வாக்குகளில் 4.6 சதவிகித வாக்குகளை அது பெற்றது சாதாரணமானது அல்ல.

மில்லி கட்சிக்கும் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைவிட, லஸ்கர்- இ- தொய்பா அமைப்புக்கும் சயீதுவுக்கும் இடையிலான தொடர்பு குறித்துதான் சர்வதேச அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜ.உ.த.வின் தலைவரான சயீதுவுக்கு லஸ்கர்-இ-தொய்பாவின் முக்கியப் பொறுப்பு இருக்கிறது என்பது அமெரிக்க அரசு மற்றும் ஐ.நா. அமைப்பு ஆகியவற்றின் உறுதியான கருத்து. 

முதலில் பாகிஸ்தானில் 2002-ம் ஆண்டு லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என அறிவித்து அந்நாட்டு அரசு தடைசெய்தது. காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவாகத் தொடங்கப்பட்ட லஸ்கர் இயக்கத்தின் நிறுவனர்களில் சயீதுவும் ஒருவர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. 1994-ம் ஆண்டு முதல் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் லஸ்கர் இயக்கம் மற்றும் அல்கொய்தா இயக்கம் ஆகியவற்றுக்கு நிதி, ஆயுத ஒத்துழைப்பு அளித்ததற்காக சயீதுவும் அவருடைய ஜமாத்-உத்-தவா அமைப்பும் ஐ.நா.சபையால் 2008-ல் தடைசெய்யப்பட்டன. 

அதே ஆண்டில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு சயீதுவின் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இதுதொடர்பாக தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஜ.உ.த.வின் செயல்பாடுகளுக்குத் தடைவிதித்ததுடன் அதன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. 

ஐ.நா.வின் தடையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் சயீதுவின் அமைப்பை கண்காணிப்புக்கு உள்ளான அமைப்புப் பட்டியலில் சேர்த்தது. ஆனால், நாடு முழுவதும் சயீது தொடர்ந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குறிப்பாக, காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிரான செயல்பாடுகளை நியாயப்படுத்தி அவர் பேசியும், பாகிஸ்தான் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம், சர்வசாதாரணமாக பதிலளித்தது, பாகிஸ்தான் அரசு. காரணம், ஜ.உ.த. அமைப்பானது ஃபாலா-இ-இன்சானியத் அறக்கட்டளை மூலம் பாகிஸ்தான் முழுவதும் பெருமளவிலான தொண்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மதவாதமையங்கள் என 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஜ.உ.த. அமைப்பே நடத்திவருகிறது; ஃபாலா அறக்கட்டளை மூலம் ஏராளமான மருந்து மற்றும் உணவுப்பொருள்களை வழங்கிவருகிறது. குண்டுவெடிப்பு அல்லது இயற்கைப் பேரிடர்களின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு முதல் ஆளாகப் போய் உதவிக்கு நிற்பதில் சயீதுவின் அமைப்புகள் பெயர் வாங்கியுள்ளன என்கிறார்கள். 

அமெரிக்க அரசோ சயீதுவை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் வைத்ததுடன் அவரைப் பிடித்துக்கொடுத்தாலோ அல்லது அதற்கு துப்பு கொடுத்தாலோ ஒரு கோடி அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று 2012-ல் அறிவித்தது. ஆனால், பாகிஸ்தானிலோ அந்த பயங்கரவாதக் குற்றச்சாட்டுதாரியை நாட்டில் உலவவிடுவதுடன் உறுமவும் விடுகிறார்கள். இதைப்போலத்தான் ஒசாமா பின்லேடனையும் பாகிஸ்தானில் இல்லை என்றே கூறிவந்தார்கள்; ஆனால், அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், பாகிஸ்தானின் இறையாண்மையையும் மீறி, ஒசாமாவின் தங்குமிடத்திலேயே போய் வானூர்திகளில் இறங்கி, மொத்தமாக முடித்தது, முந்தைய அமெரிக்க அரசு. இதில் என்ன நடக்குமோ?