Published:Updated:

”டி.டி.வி.தினகரனுக்கும் ஜெயா டிவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்

”டி.டி.வி.தினகரனுக்கும் ஜெயா டிவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்
”டி.டி.வி.தினகரனுக்கும் ஜெயா டிவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்

”டி.டி.வி.தினகரனுக்கும் ஜெயா டிவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்

'பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு' என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு, அ.தி.மு.க கட்சி அங்கீகாரத்தோடு இரட்டை இலைச் சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றையும் ஒதுக்கி இந்தியத் தேர்தல் ஆணையமே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. 

'பெரும்பான்மை' அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை முன்வைத்தே டி.டி.வி தினகரன் அணியினர் அடுத்தக்கட்ட ஆட்டத்துக்கு இப்போது தயாராகிவருகின்றனர். அந்த அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்....

''தேர்தல் ஆணையத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''(சிரித்துக்கொண்டே...) தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது. 

எடப்பாடி - ஓ.பி.எஸ். அணியினரிடம் 111 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகச் சொல்லித்தான் தேர்தல் ஆணையம் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது. எங்களிடமிருந்து பிரிந்துபோன ஓ.பன்னீர்செல்வம் அப்போது  வெறும் 11 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருந்தார். ஆனால், எங்களிடம் 122 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி-க்கள் இருந்தார்கள். ஏன் அப்போது எங்களிடம் 'இரட்டை இலை' சின்னத்தைக் கொடுக்கவில்லை? இப்போது நடந்திருப்பது ஓரவஞ்சனைதானே? 

'சசிகலா குடும்பத்தை ஒழிக்கவேண்டும்' என்ற சதித்திட்டத்தோடு மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி அரசு எடுத்துள்ள நடவடிக்கையாகத்தான் தேர்தல் ஆணைய முடிவைப் பார்க்கிறேன்.

அதுமட்டுமல்ல... சட்டசபையிலேயே எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை பதவி நீக்கம் செய்யாமல், துணை முதல்வர் பதவி கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஓட்டு போட்டு ஜெயிக்கவைத்த 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்கிறார்கள்.  இப்படி மத்திய பி.ஜே.பி அரசும் மாநில அரசும் அதிகார உச்சியில் எடுத்துவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்களும் விரும்பவில்லை, தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்த இரண்டு கட்சிகளுக்குமே மக்கள் சரியான பாடத்தை விரைவிலேயே கொடுப்பார்கள்''

''அடுத்தகட்டமாக உங்களது நடவடிக்கை என்ன?''

'' '111' எம்.எல்.ஏ-க்கள் என்று தேர்தல் ஆணையமே எடப்பாடி பழனிசாமிக்கு நாமம் போட்டுக் காட்டிவிட்டதென்றால், மெஜாரிட்டி இல்லை என்றுதானே அர்த்தம்? அப்படியானால், இந்த அரசைக் கலைக்கவேண்டும், ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்தவேண்டும்தானே...? இதுவிஷயமாக நாளை ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கவிருக்கிறோம். மக்கள் பிரச்னைகள் வரை கீழிறங்கி அக்கறையோடு செயல்பட்டுவரும் ஆளுநர், சட்டமன்றப் பிரச்னையான இதுகுறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அப்படி நடக்கவில்லையெனில், தேர்தல் ஆணையம் இப்போது குறிப்பிட்டுள்ள இந்த 'பெரும்பான்மை' விஷயத்தை முன்வைத்தே நாங்களும் நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்லவிருக்கிறோம். அப்போது நிச்சயம் இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும். கட்சியையும் நாங்கள்தான் வழிநடத்த முடியும்.''

''தற்போதைய சூழ்நிலையில், அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியைத்தானே ஆதரிக்கிறார்கள்?''

''இப்போது எங்கள் துணைப்பொதுச்செயலாளர் திருப்பூரில் இருக்கிறார். அங்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர் போகிற இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக, தேர்தல் ஆணையம் எங்களுக்கு எதிராக வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பும்கூட, மக்கள் மத்தியில் எங்கள் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது - எங்களது பலம் முன்பைவிட இன்னும் கூடியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ''

''எப்படிச் சொல்கிறீர்கள்?''

''நாடு முழுக்க மக்களிடமிருந்து எங்களுக்கு ஆதரவான தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. 'துரோகிகள்' என்ற பட்டத்தை எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பி.ஜே.பி-யினர் அவர்களாகவே உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. அதனால், அவர்களுக்கு 'இரட்டை இலைச் சின்னம்' கிடைத்திருந்தாலும்கூட அதனால், எங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராது.''

''இரட்டை இலை சின்னத்துக்கென்று நிலையான வாக்கு வங்கி இருப்பதால்தானே இத்தனைப் போட்டியும்...?''

''அப்படிச் சொல்லமுடியாது. தலைவர்களைப் பொறுத்துதான் வாக்கு வங்கிகள் எல்லாமே... அந்த வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா என இரு தலைவர்களுக்கும் இரட்டை இலை ஓ.கே.! ஆனால், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் என்ற இந்த இரட்டைத் துரோகிகளுக்கும் 'இரட்டை இலை' எடுபடாது.''

''எந்த அடிப்படையில், 'அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்' என சொல்லிவருகிறீர்கள்?''

''போகிற இடங்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவாக மக்கள் கூடுகிற கூட்டத்தை வைத்துத்தான் இதனைச் சொல்கிறோம். வேறு என்ன ஆதாரம் காட்டமுடியும்? விரைவில் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அந்தத் தேர்தலில் நாங்களும் போட்டியிடுவோம். இரட்டை இலைச் சின்னத்தோடு அவர்களும் போட்டியிடட்டும். இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.''

''தி.மு.க-வின் மூத்த தலைவர் துரைமுருகன், ஜெயா டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது, 'டி.டி.வி அணியினர் தி.மு.க-வோடு மறைமுக கூட்டு வைத்திருக்கிறார்கள்' என்றக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதுபோல் உள்ளதே...?''

''துரைமுருகன் பேட்டிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆகிய நிறுவனங்களை நடத்திக்கொண்டிருப்பவர் வேறொருவர். 'அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம்' என்று எங்கள் துணைப் பொதுச்செயலாளர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதனை மீறி ஒளிபரப்பிவிட்டார்கள். ஆக, எங்களுக்கு அந்த நிறுவனங்கள் கட்டுப்படாது என்பதுதான் உண்மை. 

இது ஒருபுறம் இருக்கட்டும்.... 'இப்போது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்' என்று செல்லூர் ராஜூ சொல்கிறாரே.... அப்படியென்றால், அவர்கள்தானே தி.மு.க-வோடு கூட்டு வைத்திருக்கிறார்கள்?''

அடுத்த கட்டுரைக்கு