Published:Updated:

இரண்டரை ஆண்டில் 3-வது தேர்தல்: குழப்பத்தில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்!

இரண்டரை ஆண்டில் 3-வது தேர்தல்: குழப்பத்தில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்!
இரண்டரை ஆண்டில் 3-வது தேர்தல்: குழப்பத்தில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்!

இரண்டரை ஆண்டில் 3-வது தேர்தல்: குழப்பத்தில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்!

.தி.மு.க. அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னம், கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அணி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த மறுநாளே ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம், சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தது, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றது, எடப்பாடி முதல்வர் ஆனது, பின்னர் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைத்து விட்டு, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை எதிர்த்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி அணியுடன் இணைந்தது போன்ற அனைத்து நிகழ்வுகளுமே அ.தி.மு.க தொண்டர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதுபோன்ற நிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தினகரன் - எடப்பாடி அரசின் பணப்புழக்கத்தைக் காரணம்காட்டி ரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம், அதாவது டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுடன் அருணாச்சலப்பிரதேசத்தில் இரண்டு, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா ஒன்று என மொத்தம் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான அறிவிக்கை நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது. அன்று முதல் டிசம்பர் 4-ம் தேதிவரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்தநாள் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று, டிசம்பர் 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதுடன், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், வி.வி.பி.ஏ.டி எனப்படும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் கருவிகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு ஏதுவாக போதுமான கருவிகள், தேர்தலுக்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்யும். இதன் மூலம் சுமுகமான முறையிலும், நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதோர் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தெரியும் வரை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை என்ற சர்ச்சை இப்போதே கிளம்பியுள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் கூறி ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு இரு நாள்களுக்கு முன் அந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது, பணப்பட்டுவாடா செய்ய எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய பட்டியல், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. அது ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போது ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட இப்போதுள்ள அனைத்து அமைச்சர்களுமே, அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக 'தொப்பி' சின்னத்தில் ஆர்.நே.நகர் தொகுதி முழுவதும் சுற்றிவந்து பிரசாரம் செய்தனர். ஏழு மாதங்களுக்குப் பின்னர், இப்போது மீண்டும் எடப்பாடி உள்ளிட்டோர், ஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிராக வாக்குசேகரிக்க உள்ளனர் என்பது வேடிக்கை. இந்த அணியில் உள்ள ஒரு மாற்றம் என்னவென்றால், அப்போது ஓ.பி.எஸ்ஸை சேற்றைவாரி தூற்றியவர்கள், தற்போது அவருடனேயே கைகோத்து இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு கேட்க உள்ளனர். ஆர்.கே. நகர் வாக்காளர்களே சற்று குழப்பமான மனநிலையில்தான் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

2014-ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுதலையானதும், அவர் மீண்டும் முதல்வராவதற்கு ஏதுவாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றிவேல் 2015-ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 2015 ஜூன் மாதம் 27-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் அவரின் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. உடல்நலக்குறைவால் 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததும், அந்தத் தொகுதி காலியானது. பின்னர் நடந்த களேபரங்கள், குழப்பங்கள் அனைத்தும் அறிந்ததுதான். ஆர்.கே. நகர் தொகுதி மக்களே தற்போது குழம்பித்தான் போய் உள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அவர்கள் இந்த முறையாவது தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையில், இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கீடு செய்த அடுத்தநாள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான சி.ஆர். சரஸ்வதியிடம் பேசினோம். 

"தமிழகத்தில் இன்றைக்கு நடப்பது பி.ஜே.பி-யின் பினாமி அரசு. இவங்க என்ன கேட்டாலும், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு செய்துகொடுக்கும். கடந்த மாதம் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம், நிலக்கரி ஒதுக்கித்தர கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் அப்படி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்களையும், அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள, அவர்களுக்காக பி.ஜே.பி அரசு முழுமூச்சுடன் செயல்படுகிறது. இது மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்தபோதே மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டது. எனவே, இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எனக்குத் தேர்தல் ஆணையத்திடம் ஒரு சந்தேகமும், கேள்வியும் உள்ளது. சாதிக் அலி அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தற்போது சொல்கிறார்கள். அப்படியானால், ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ கட்சியில் அதிகாரம் இல்லாத நிலையில், எப்படி சின்னம் ஒதுக்கீடு செய்தனர்? 

ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அம்மா அணியில் 122 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி.-க்கள் பட்டியலை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருந்தோம். அப்படியானால், சாதிக் அலி தீர்ப்பைப் பின்பற்றி, தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட போது, இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கு வழங்கியிருக்கலாமே. அதன் பின்னர் எதற்காக பிரமாணப் பத்திரங்களைக் கேட்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையே போதுமென்றால், கட்சியின் ஏழு லட்சம் பேர் எதற்காக பிரமாணப் பத்திரங்களை அளிக்க வேண்டும். இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறது" என்றார்.

"ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் தினகரனே போட்டியிடுவாரா" என்று கேட்டதற்கு, "கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவும், ஆட்சிமன்றக் குழுவும் அதுபற்றி முடிவு செய்து அறிவிக்கும்" என்று பதிலளித்தார் சி.ஆர். சரஸ்வதி.

அடுத்த கட்டுரைக்கு