Published:Updated:

சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-2 மனநலம் குன்றியோர் பள்ளியைப் புரட்டி போட்ட அடையாறு வெள்ளம்

சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-2  மனநலம் குன்றியோர் பள்ளியைப் புரட்டி போட்ட அடையாறு வெள்ளம்
சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-2 மனநலம் குன்றியோர் பள்ளியைப் புரட்டி போட்ட அடையாறு வெள்ளம்

நுங்கும்நுரையுமாகப் பொங்கிச் செல்வதில்தான் ஓர் ஆற்றின் அழகு இருக்கிறது. கிராமத்தில் பிறந்து ஆற்றில் குளித்து விளையாடி, அதன் அருமையை ஆழ்மனதில் புதைத்துக்கொண்டு பெருநகரின் வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கும் எண்ணற்றவர்களில் நானும் ஒருவன்.

பொங்கிச் சென்ற அடையாறு!

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை சென்னையின் சாக்கடை நதியாக அடையாறு இருந்தது. ஒவ்வொரு முறையும், ஜாபர்கான் பேட்டை அருகே, ஜவஹர்லால் நேரு நூறடி சாலையைக் கடக்கும்போதும், சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தைக் கடக்கும்போதும், சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி செல்லும் ஆலந்தூர் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலத்தைக் கடக்கும்போதும் சாக்கடையாக ஓடும், நாற்றம் எடுக்கும் அடையாற்றைப் பார்க்கும்போதெல்லாம், எப்போது இந்த ஆற்றில் புதுவெள்ளம் பொங்கிப் பாயும் என்று ஏக்கத்தோடு எண்ணியது உண்டு.

2015-ம் ஆண்டு வட கிழக்குப் பருவமழை தொடங்கியபோது, நவம்பர் மாதத்தின் இறுதியில் அடையாறு பொங்கிப் பிரவாகத்துடன் சென்றதை ஆலந்தூர் சாலை மேம்பாலத்தில் இருந்து, காலைவேளையில் ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

நவம்பர் 30-ம் தேதி இரவு செம்பரம்பாக்கத்தில் மேலும் கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டபோது, ஆற்றில் கூடுதலாகப் பொங்கிவந்த வெள்ளம் கரையோரம் இருந்த வீடுகளையும் மூழ்கடித்துச் சென்றது. அந்த இரவு நேரத்தில், அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், கரையில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் பயிலும் அன்னை சிறப்புப் பள்ளிக்குள்ளும் புகுந்தது.

மனநலம் குன்றிய மாணவர்கள்

வெள்ளம் பெருக்கெடுத்து வருவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு, மனவளர்ச்சி குன்றிய 5 மாணவர்கள், போலியோவால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கான ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர் எப்போதும்போல் இரவு உணவுக்குப் பின்னர் தூங்கச் சென்றனர். அதன்பிறகு அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அப்பள்ளியின் ஆசிரியர் மாரியப்பன் அப்போது சொன்னதாவது, ''மாணவர்களில் ஒருவன், கழிவறைக்குச் செல்வதற்காக எழுந்திருக்கிறான். அவன், கழிவறைக்கு அருகில் செல்லும்போது முழங்கால் அளவு ஆற்றுநீர் உள்ளே வருவதைக் கண்டு பயந்து, உடனே அலறி அடித்துக்கொண்டு என்னைவந்து எழுப்பினான். தண்ணீர் உள்ளே வந்ததைப் பார்த்து மாணவர்கள் பயத்தில் அலறத் தொடங்கினர். அவர்களை அமைதிப்படுத்தி, 'கொஞ்சநேரம் போனால் தண்ணீர் குறைந்துவிடும்' என்று நான் சொன்னேன். ஆனால், நேரம் செல்லச்செல்ல தண்ணீர் அதிகரித்தது. இனிமேலும் இங்கே இருக்கக்கூடாது என்று நினைத்து அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். ஊன்றுகோலை ஊன்றிக்கொண்டு பைக் வரை சென்றேன். தண்ணீரில் மூழ்கியதால் என்னுடைய பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. சிறிது நேரம் என்ன செய்வது என்றே புரியவில்லை.

“தைரியமாக இருங்கள்..!’’ 

தெருவில் வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டனர். அந்த இரவு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். என்னுடன் இருந்த 5 பேரையும் என்னால் ஒரே நேரத்தில் அழைத்துச்செல்ல இயலவில்லை. அதே நேரத்தில், அவர்களை அங்கேயே விட்டுச் செல்லவும் மனமில்லை. ஒருவேளை தண்ணீர் மேலும் அதிகரித்தால், அவர்கள் அடித்துச் செல்லப்படக் கூடும் என்று நினைப்பதே மனதை பிசைந்தது. தங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியக்கூடிய மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களை நினைத்து மனம் கலக்கமுற்றது. நானே இன்னொருவர் துணையுடன்தான் இயங்க முடியும். இவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாது என்று துணிச்சலாகக் கருதியபடி, ஒருவரை மட்டும் உடன் அழைத்துக்கொண்டு மீதம் இருந்த நான்கு பேரிடமும், ‘தைரியமாக இருங்கள்... நான் வந்து உங்களை அழைத்துப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தண்ணீருக்குள் ஊன்றுகோலை ஊன்றி மெள்ளமெள்ள நடந்து அடுத்த தெருவுக்குச் சென்றேன். அந்தத் தெரு சற்று மேடாக இருந்ததால், தண்ணீர் குறைவாகத்தான் இருந்தது.

உதவிய உள்ளங்கள்!

அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் அந்தச் சிறுவனை ஒப்படைத்துவிட்டு, மீதம் இருந்தவர்களைக் கூப்பிடச் சென்றேன். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களும் என் துணைக்கு வந்தனர். 5 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய பின்னர்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அவர்களை அழைத்துக்கொண்டு மேற்குச் சைதாப்பேட்டையில் இருந்த, என்னுடன் வேலை பார்க்கும் மற்றோர் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். ஆசிரியர் வீடு இருந்த தெருவிலும் நெஞ்சுவரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. என்னால் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு நடக்க முடியவில்லை. அங்கிருந்த ஒருவர், என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு சென்று மாடிப்படியில் ஏற்றினார். மாணவர்களையும் தூக்கிக்கொண்டுதான் செல்ல முடிந்தது.

வெள்ளம் வடியும்வரை மாணவர்களை வைத்துக்கொண்டு அந்த ஆசிரியர் வீட்டில்தான் இருந்தோம். மாணவர்கள் அவசரத்துக்கு கழிப்பறைக்குச் செல்வதற்குக்கூட மிகவும் கஷ்டப்பட்டனர். பள்ளியில் அவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது, யாராவது ஒருவர் உடன் செல்ல வேண்டும். எப்படி உட்கார வேண்டும். எப்படிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு நிலையில் அவர்களை வைத்துக்கொண்டு, மேற்கொண்டு அவர்களுக்கு மனரீதியாக எந்தவிதப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதால் மிகவும் கவனத்துடன் இருந்தோம்.

அடித்துச் சென்ற அறிவுப் பொக்கிஷம்! 

வெள்ளம் வடிந்தபிறகு பள்ளியில் வந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்டிருந்தன. கட்டடத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு மாதம் ஆகிவிட்டது" என்றவரிடம், “இப்போது மீண்டும் மழை பெய்து கொண்டிருக்கிறதே. வெள்ளம் வந்தால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டோம். பெருமழைக்குப் பின்னர் பள்ளியில், இன்னொரு மாடி கட்டியிருக்கிறோம். மழை பெய்யும்போது, இப்போது அங்குதான் இருக்கிறோம். முதல் மாடிவரை தண்ணீர் வந்துவிட்டால், வெளியேதான் செல்ல வேண்டும்” என்றார்.

பள்ளியை நடத்திவரும் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். "பெருமழையில் இருந்து மீண்டு வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிட்டன. மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள், இங்கு இருந்த கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட பொருள்கள் எல்லாமே பாழாகிவிட்டன. சிலரின் உதவியோடு அனைத்துப் பொருள்களையும் மீண்டும் வாங்கினோம். இனி ஒருமுறை இதேபோல வெள்ளம் வந்தால், முன்கூட்டியே மாணவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

அந்த மாமழையின், அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏதும் அறியாத மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான புத்தகங்கள், பொருள்களை மட்டும் அடித்துச் செல்லவில்லை. மூத்த அரசியல் தலைவர் ஒருவர் சேமித்து வைத்திருந்த அறிவுப் பொகிஷத்தையும் அடித்துச் சென்றது அந்த மாமழை. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....