Published:Updated:

சேது திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறுவது முறைதானா?: கருணாநிதி கேள்வி

சேது திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறுவது முறைதானா?: கருணாநிதி கேள்வி
சேது திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறுவது முறைதானா?: கருணாநிதி கேள்வி
சேது திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறுவது முறைதானா?: கருணாநிதி கேள்வி

சென்னை: சேது சமுத்திர திட்டம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது முறைதானா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சேது சமுத்திரம் திட்டத்துக்காக எழுச்சி நாள் கொண்டாடும்படி 1967-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அண்ணா கூறினார்.தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையிலான குழு 1981-ம் ஆண்டு தமிழகம் வந்தது. அப்போது, அந்தக் குழுவைச் சந்தித்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். அந்தக் குழு மதுரைக்கும், நெல்லைக்கும் சென்றபோது திமுக சார்பில் வைகோ அந்தக் குழுவைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்ற விவாதங்களின் போது முரசொலி மாறனும்,வைகோவும் வாதாடினார்கள்.

இந்த நிலையில் கடந்த 8.5.2002 அன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு நான் ஒரு நீண்ட கடிதத்தை எழுதினேன்.

பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமான இந்தத் திட்டத்தின் அவசியம் குறித்தும், இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் மத்திய கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் 1981-82-ம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழு அறிக்கையிலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியுடன், வேலைவாய்ப்புகளையும் வழங்கிடும் இந்தத் திட்டத்தை நாட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாமதமில்லாமல் நிறைவேற்றிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் நான் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் 2004-ம் ஆண்டு திமுக ஆதரவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தது.அந்த அரசில் கப்பல், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர். பாலு, இந்தத் திட்டத்துக்கு முழு வடிவம் தந்து, திட்டப் பணிகள் வேகமாக நடந்தன.

##~~##
இப்போது மக்களின் பணம் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 75 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.ஆனால்,இந்தத் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.
இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று இம்மாதம் 16-ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டேன்.அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசு கூறுவது முறைதானா என்பதை அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழக மக்களின் நல்வாழ்வை எண்ணிப் பார்த்து அனைவரும் சிந்திக்க வேண்டும் "என்று கூறியுள்ளார்.