Published:Updated:

‘தி.மு.கவின் கைக்கூலியாக நம்மை மாற்றிவிடுவார்கள்!’ - சிறை சந்திப்பில் கொந்தளித்த சசிகலா

‘தி.மு.கவின் கைக்கூலியாக நம்மை மாற்றிவிடுவார்கள்!’ - சிறை சந்திப்பில் கொந்தளித்த சசிகலா
‘தி.மு.கவின் கைக்கூலியாக நம்மை மாற்றிவிடுவார்கள்!’ - சிறை சந்திப்பில் கொந்தளித்த சசிகலா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வரும் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 1 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ‘இரட்டை இலை எதிர்த்துப் போட்டியிடுவதால் அரசியல்ரீதியாக பின்னடைவுதான் ஏற்படும் என சசிகலா வலியுறுத்தியிருக்கிறார். அதையும் மீறி களம் இறங்குகிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது ஆர்.கே.நகர் தொகுதி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்ட தினகரன், தற்போது தனது ஆதரவாளர்களுடன் தனித்துக் களம் இறங்குகிறார். இரட்டை இலையை எதிர்த்து தனது தனிப்பட்ட செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய தினகரன், 'துரோகிகளிடம் இருந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிராகவே போட்டியிட்டு, இரட்டை இலைச் சின்னத்தை நம் பக்கம் மீட்டெடுக்க இருக்கிறோம். அதேபோல தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்ட இந்த தீர்ப்பு ஒன்றும் இறுதியானது அல்ல. சட்டரீதியாகவே போராடி வெல்வோம். முதல் சுற்றில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. இறுதிச் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார் என்பதுதான் முக்கியம். இது தர்மத்துக்கும் துரோகத்துக்கும் நடக்கின்ற யுத்தம்' எனக் கொந்தளித்தார். 

'தினகரன் போட்டியிடுவதைக் குடும்ப உறவுகள் எப்படிப் பார்க்கிறார்கள்?' என மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். “தேர்தலில் நிற்பதா... வேண்டாமா என்பதில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ‘நடராஜன் சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்' என்பதுதான் சசிகலாவின் வார்த்தையாக இருக்கிறது. 'ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்பதன் மூலம், தமிழகத்தில் ஒரு தலைவராக வர முடியும்' என நம்புகிறார் தினகரன். சசிகலாவோ, ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலத்தையும் பார்க்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளனர் குடும்ப உறுப்பினர்கள்.

இந்தச் சந்திப்பின்போது இளவரசியும் உடன் இருந்தார். அப்போது பேசிய சசிகலா, 'இரட்டை இலையை எதிர்த்து தேர்தலில் நின்றால் அ.தி.மு.கவுக்கு எதிராகச் செல்வதுபோல ஆகிவிடும். தற்போது அ.தி.மு.க அரசின் ஆதரவோடு நமக்குச் சில தொழில்கள் நடந்துவருகின்றன. டாஸ்மாக் கதவுகளை மூடியது போல, இதர தொழில்களையும் எடப்பாடி பழனிசாமி அரசு மூடிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்கான சூழல்களை நாமே உருவாக்கிவிட வேண்டாம். நமக்கு எதிராக மத்திய அரசு மட்டுமே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசும் நடவடிக்கையில் இறங்கிவிட்டால், எதிர்கொள்வது சிரமம் ஆகிவிடும்' என விவரித்தவர், 

‘அ.தி.மு.கவை எதிர்த்தால் எந்தக் காலத்திலும், 'நாம்தான் அ.தி.மு.க' என உரிமை கொண்டாட முடியாது. எம்.ஜி.ஆரை எதிர்த்துச் சென்ற எஸ்.டி.எஸ் பெரிதாக ஜொலிக்கவில்லை. அ.தி.மு.கவை எதிர்த்து நம்மால் வளர முடியாது. இதை உணர்ந்துதான் ஜெயலலிதாவிடம் (2011-ம் ஆண்டு) மன்னிப்புக் கடிதம் கொடுத்து சரண்டர் ஆனோம். அன்று அதைப் பொறுத்துக் கொண்டததால்தான், இந்தளவுக்கு நம்மால் வளர முடிந்தது. அ.தி.மு.கவை எதிர்த்துக் களம் இறங்கினால், 2 சதவிகிதக் கட்சியாக மாறிவிடுவோம். இன்று நம்மை ஆதரிப்பவர்கள் எல்லாம் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் இருப்பவர்கள். இவர்களது வாக்குகள் அனைத்தும் தி.மு.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் சென்று சேரும். ஆர்.கே.நகரில் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் பேர் இருக்கிறார்கள்.

இந்த வாக்குகளை பன்னீர்செல்வமும் அமைச்சர் மணிகண்டனும் பிரித்துக்கொண்டு போய்விடுவார்கள். நம்மை தி.மு.கவின் கைக்கூலியாக அடையாளப்படுத்தவே வாய்ப்பு அதிகம். எடப்பாடி பழனிசாமி பக்கம் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். நம்மிடம் வெற்றிவேல் மட்டுமே இருக்கிறார். இருமுனைப் போட்டி நடக்கும்போது மூன்றாவது போட்டியிடுபவருக்கு பெரிதாக வாக்குகள் கிடைக்காது. இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. அப்போது நமது பலத்தைக் காட்டி மேலே வருவோம். இந்தத் தேர்தலில் பலத்தைக் காட்டினால் நமக்குத்தான் இழப்பு. ஒட்டுமொத்த அ.தி.மு.கவைப் பிடிப்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்' எனப் பேசியிருக்கிறார். 

சசிகலா கூறிய கருத்துகளைக் கேட்ட தினகரன், 'ஆர்.கே.நகர் தொகுதியில் எனக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. முப்பதாயிரம் வாக்குகள் வாங்கினாலும் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். நாம் முன்னிலை பெற்றால், மீண்டும் நம் பக்கம் அ.தி.மு.க வருவதற்கே வாய்ப்பு அதிகம். இஸ்லாமியர்களும் நமது சமுதாயத்து மக்களும் நமக்கே வாக்களிப்பார்கள். நமது குடும்பத்துக்கு ஏற்பட்ட துன்பங்களை மக்களிடம் எடுத்துரைப்போம். இந்தத் தேர்தலில் உங்களை முன்னிறுத்தியே நான் வாக்குகளைக் கேட்பேன். எல்லா காலத்திலும் உங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நான் இருப்பேன். தனித்து முடிவெடுப்பதாக நினைக்க வேண்டாம்' என விவரித்திருக்கிறார். இந்தக் கருத்தை குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினகரனின் பிடிவாதத்தையும் அவர்கள் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்" என்றார் விரிவாக.