Published:Updated:

"ஜெயலலிதா கொடுத்தாங்க...எடப்பாடி பறிச்சுட்டார்!" அகல்விளக்கு செய்பவர்களின் வேதனை!

"ஜெயலலிதா கொடுத்தாங்க...எடப்பாடி பறிச்சுட்டார்!" அகல்விளக்கு செய்பவர்களின் வேதனை!
"ஜெயலலிதா கொடுத்தாங்க...எடப்பாடி பறிச்சுட்டார்!" அகல்விளக்கு செய்பவர்களின் வேதனை!

ந்தாண்டு கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் தொடங்கி பெரிய நகரங்களிலும் உள்ள அனைத்து இல்லங்களிலும் தீபத் திருநாளன்று, அகல் விளக்குகளை  ஏற்றி வழிபடுவார்கள். அகல் விளக்குகளின் ஒளியில், மனித உள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் அவநம்பிக்கைகள் யாவும் அகன்று, உள்ளிருக்கும் இருள் நீங்கி நம்பிக்கை எனும் வெளிச்சம் பரவுவதாக தொன்றுதொட்டு மக்கள் நம்புகிறார்கள். 

அகல் விளக்குகளை ஏற்றும் மக்களுக்கு வெளிச்சம் கிடைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த விளக்குகளை உற்பத்தி செய்பவர்களின் வாழ்வில் இன்னமும் ஒளி பிறக்கவில்லை என்பது வேதனையான உண்மை. மண்ணாலான அகல் விளக்குகளைச் செய்யும் தொழிலாளர்களிடம் பேசியபோது, "பரம்பரை, பரம்பரையா மண்ணை குழைச்சு விளக்குகள் செய்றோம். இதைவிட்டா எங்களுக்கு மாற்றுத்தொழில் தெரியாது. ஐந்து வருஷத்துக்கு முன்புவரை, எங்க பொழப்பு நல்லா இருந்துச்சு. ஆனால், தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப சீமை ஓடுகள், பீங்கான்களில் விளக்குகள் செய்ற பெரிய கம்பெனிகள் முளைச்சுடுச்சு. மண்ணுல விளக்குகள் செஞ்சுக்கிட்டிருந்த எங்க பொழப்புல, அந்த கம்பெனிகள் இருட்டை பூசிட்டாங்க. வாழ்க்கையே இருண்டு ய், அன்றாடம் பிழைப்புக்கே வழியில்லாமத் தவிக்கிறோம். மழைக் காலத்துல சொல்லவே தேவையில்லை. ஜெயலலிதா முதல்வரா இருந்தப்ப வருசாவருஷம் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்ல மாதம் ஐயாயிரம் ரூபா நிவாரணம் தந்தாங்க. ஆனா, இப்போதுள்ள அரசு அந்த நிவாரணத்தை நிறுத்திவிட்டது. எங்க நிலைமைய யாரும் ஏறெடுத்தும் பார்க்கலை சாமி!" என எரிந்து கருகும் விளக்குத்திரி போன்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணாலான அகல்விளக்குகள், மண் பானை மற்றும் சட்டிகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காவிரிப் படுகையில் வசிக்கும் இந்தக் குடும்பங்கள், காவிரி ஆற்றில் படிந்திருக்கும் வண்டல் கலந்த மணலை மூட்டை கணக்கில் எடுத்து வந்து அகல்விளக்கு உள்ளிட்டவற்றை செய்கிறார்கள். ஆனால், மண் அள்ளுவதை அதிகாரிகள் தடுத்துவிடுவதாகவும், மணல் திருடுவதாக இவர்கள் மீது வழக்குகள் போட்டு அலைக்கழிப்பதாகவும் புலம்புகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

பரம்பரையாக அகல் விளக்குகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள மாணிக்கத்திற்கு அவர் குடியிருக்கும் கூரை வீட்டைத் தவிர, வேறு சொத்து ஏதுமில்லை. சோகத்தை கனைப்பால் செருமியபடி அவர் நம்மிடம் பேசினார். 

"என் அப்பன், தாத்தன், பூட்டன் எல்லாருமே இந்த மண்ணைக் கட்டிப் புரண்டு, மண்ணைப் பிசைஞ்சு அதுல பானை, சட்டி, அகல் விளக்குகள் செய்ற தொழிலைத்தான் செஞ்சுட்டு வந்தாங்க. நானும் வேற வழியில்லாம இந்தத் தொழிலைச் செய்ய வேண்டியதாயிடுச்சு. அவங்க காலத்தில செழிப்பா இருந்த இந்தத் தொழில் அண்மைக்காலமா நசிஞ்சு போச்சு.

தண்ணீர்ப் பிடிக்க, தண்ணீரைச் சேமிக்க, சமைக்க, சாப்பிட, கார்த்திகை மாதங்கள்ல விளக்குகளாக பயன்படுத்தன்னு நாங்க செய்யும் மண்பாண்டங்களையும், விளக்குகளையும்தான் மக்கள் பயன்படுத்திட்டு வந்தாங்க. முன்பெல்லாம் மண்பாண்டங்களில் சகலத்தையும் புழங்கியதால், அவர்களை நோய் நொடிகள் அண்டாம இருந்துச்சு. ஆனால் நாகரீகம்ங்கிற பேர்ல, தற்போது மண்பாண்டங்களை விட்டுட்டு, பிளாஸ்டிக், அலுமினியம்ன்னு எப்போ மக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சாங்களோ அப்பவே அவர்களுக்கு நோய்களும் ஏற்படத் தொடங்கிடுச்சு.. அதோட, எங்க தொழிலும் படிப்படியா நொடிக்க ஆரம்பிச்சுடுச்சு. கார்த்திகை மாதம்னாலே தீபம்தான். வீட்டுக்கு வீடு நாங்க தயாரிக்கற அகல் விளக்குகளைத்தான் ஏத்துவாங்க. எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைச்சுச்சு. அதனால, நாங்க நம்பிக்கை வெளிச்சத்தோட இருந்தோம். அதன்பின், சீமை ஓடுகளில், பீங்கான்களில் விளக்குகள் செய்ற கமபெனிகள் முளைத்து, எங்க பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டாங்க. இப்போ, மண்பாண்டத் தொழில் செய்ற என்னைப் போன்ற ஏராளமான குடும்பங்கள் அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாம அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டுருச்சு.

முன்பெல்லாம், கார்த்திகை தீபத் திருநாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்பே எங்களுக்கு நிறைய ஆர்டர் கிடைச்சுடும். அஞ்சு வருஷத்துக்கு முன்புவரை, ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சம்வரை வருஷாவருஷம் எங்களுக்கு அகல் விளக்கு செய்யச் சொல்லி ஆர்டர்கள் கிடைத்து வந்தது. அதனால், ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே நாங்க விளக்குகள் செய்ய ஆரம்பிச்சுடுவோம். காவிரியில் கிடைக்கிற வண்டல் கலந்த மணல், குளத்துல கிடக்குற களிமண், திடல் மண் மூன்றையும் அள்ளி வந்து, பதமாக்கி ஒண்ணா கலந்து, அதை ஒருநாள் முழுக்க மிதிச்சு, நல்ல பதத்துக்கு வந்ததும், விளக்குகளுக்குத் தேவைப்படுற அஞ்சு முகங்களை கைகளால் வார்த்தெடுப்போம். அவற்றைக் காய வச்சு, ஆர்டர்கள் கொடுத்த கொடுமுடி, கரூர், திருச்சி வியாபாரிகளிடம் கொண்டுபோய் வித்தோம்ன்னா முப்பதாயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்கும். இதுதவிர, எங்க வீட்லேயே நாங்க தனியா இரண்டாயிரம் விளக்குகள் வரை விற்போம். 

அதோட கரூர் மாவட்டத்துல உள்ள முக்கியப் கோயில்களின் நிர்வாகமும் சில நேரங்கள்ல, எங்ககிட்ட மண்ணாலான நெய் விளக்குகளை செஞ்சுத் தரச்சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க. மேலும், மண்பானை, சட்டிகளை வருடம் முழுக்க விற்பனை செஞ்சா, ஒரு மாசத்துக்கு ஏழாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதனால் பெருசா இல்லாட்டியும், சோத்துக்கு பிரச்னை இல்லாம வாழ்க்கையை ஓட்டிட்டு வந்தோம். ஆனால் கடந்த ஐந்து வருஷமா எல்லா வகையிலும் எங்க தொழில் நட்டப்பட்டு போச்சு. இப்போ கடனாளியா நிக்கிறோம். பெரிய நிறுவனங்கள், பீங்கான் விளக்குகளைத் தயாரிக்கிறதால, ஒன்றரை லட்சம்வரை கிடைச்ச ஆர்டர், இப்போ இருபதாயிரம் விளக்குகளுக்கு ஆர்டர் கிடைப்பதே குதிரை கொம்பாயிடுச்சு. இந்த வீழ்ச்சியை தாக்குபிடிக்க முடியாம நாங்களும் நாட்டு ஓடுகள், பீங்கான்களில் விளக்கு செய்யலாம்ன்னு இறங்கி, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அதற்கு மாறிப் பார்த்தோம். ஆனால், காலம்காலமாக கார்த்திகை விளக்குன்னாலே மண்தான் என்பதால், எங்களால அதை மாத்திக்க முடியல. நட்டப்பட்டாலும் பரவாயில்லை. பழையபடி மண்ணுலயே விளக்கு செய்வோம்ன்னு செய்ய ஆரம்பிச்சுட்டோம். 

இன்னொரு பக்கம், மண்பாண்டங்களுக்காக நாங்க மண்ணைச் சேகரிக்க படுறபாடு இருக்கே...அது எல்லாத்தையும் விட கொடுமை. பக்கத்துல காவிரி ஓடுறதால், அதுலதான் வண்டல் மண் கலந்த மணலை அள்ளுவோம். ஆனால், சில வருடங்களாக அதுக்கு அதிகாரிகள் தடை போட்டதோட காசு வேற கேட்டாங்க. நாங்க சும்மா மூட்டைக் கணக்குலதான் அள்ளுறோம். அதுக்கு தடை கிடையாது. ஆனால், விதிகளை மீறி, கோடிகோடியா மதிப்புள்ள மணலை திருடுபவர்களை அவங்க ஒண்ணும் செய்றதில்லை. அதனால்,இருட்டுல போய் மூட்டைக் கட்டி மணலை இரண்டு கிலோ மீட்டர்கள் சுமந்துகிட்டு வருவோம். அந்த நேரத்திலும் போலீஸ் பார்த்துட்டாங்கன்னா, எங்களை சவட்டி எடுத்துருவாங்க. மண்ணைப் பதமாக்கும் போது, சுமார் நாலு மணி நேரம் கை, கால், உடம்பு முழுவதும் கடுமையா வலிக்கும். இந்த வருஷம் பதினைந்தாயிரம் விளக்குகளுக்குதான் ஆர்டர் வந்திருக்கு. மழை வேற தொடர்ச்சியா பெய்து, எங்க தொழிலை கெடுக்குது.

ஆர்டர் கிடைச்சாதான் சோறுங்கிற நிலைமை. பலநாள்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாம பொழுதைக் கடத்தி இருக்கோம். வட்டிக்கு பணம் வாங்கி சோறு சாப்பிட்டிருக்கோம். மழை காலங்களில் வழங்கப்பட்டு வந்த நிவாரணமும் அண்மைக்காலமா, இந்த அரசு தர்றதில்ல. எங்க கஷ்டம் எங்களோடவே போகட்டும்ன்னு நினைச்சு, எங்க பையன்கள் ரெண்டு பேரையும் இந்தத் தொழில்ல ஈடுபடுத்தாம, படிக்க அனுப்புறோம். எங்களுக்கு மட்டுமல்ல; இந்த ஊரில் இதே தொழில்ல ஈடுபட்டு வரும் மேலும் ஒன்பது குடும்பங்களின் நிலையும், தமிழகம் முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்பவர்களின் நிலைமையும் இதுதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கியது போன்று, இந்த அரசு மீண்டும் நிவாரணம் தரணும். காவிரியில் மண் எடுக்க எங்களுக்கு அதிகாரிகள் குடைச்சல் தரக் கூடாது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்ற அரசே எங்களுக்கு ஆர்டர் கொடுக்கணும். அப்போதுதான், இந்தத்தொழிலை நம்பி இருக்கிற என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். இல்லன்னா, எங்கள் வாழ்க்கை இருட்டாவே தொடரும்" என்ற அவர் வார்த்தைகளில் திரி கருகிய வாசம்!..

மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் அகல் விளக்கை ஏற்றி, இந்த அரசு வெளிச்சத்தை கொடுக்குமா?