Published:Updated:

மோடி புகழும் தூய்மை இந்தியா திட்டம்... ஐ.நா அறிக்கையில் என்ன இருக்கு? - பாகம் 1

மோடி புகழும் தூய்மை இந்தியா திட்டம்... ஐ.நா அறிக்கையில் என்ன இருக்கு? -  பாகம் 1
மோடி புகழும் தூய்மை இந்தியா திட்டம்... ஐ.நா அறிக்கையில் என்ன இருக்கு? - பாகம் 1

பாதுகாப்பான குடிநீர் மற்றும் துப்புரவில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் லியோ ஹெல்லர், கடந்த மாதம் 27 முதல் இம்மாதம் 10-ம் தேதிவரை இரண்டு வாரங்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்திருந்தார். பயணத்தில் கண்டவற்றைப் பற்றி அவர் டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிப் பேச, அதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. 

லியோ ஹெல்லர் தன் அறிக்கையில் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? இதோ அவரின் அறிக்கையிலிருந்து..!

“2015 புள்ளிவிவரப்படி, திறந்தவெளியில் மலம்கழிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 40% பேர். தண்ணீர் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமையானது மக்களின் உடல்நலத்தில் பாதிப்புகளை உண்டாக்குகிறது. போதுமான குடிநீர், துப்புரவு ஆகியவை இல்லாததால் வயிற்றுப்போக்கு மரணங்கள் ஏராளமாக ஏற்படுகின்றன. 2012 நிலவரப்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள அனைத்து நாடுகளில் 40% ஆரோக்கியமானது இதேநிலையில் இருக்கிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் மூலம் இதை அறியமுடியாமல் இருப்பது வியப்பானது. 

ஆனால், அண்மைக்காலமாக இப்பிரச்னையில் இந்திய அரசின் அக்கறை முயற்சி, குறிப்பாக துப்புரவு நிலைமையில், ‘முன்னுதாராணம் இல்லாத கடப்பாடு’ என அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தச் சூழலானது, இந்தியாவுக்கு நேரில்சென்று பாதுகாப்பான குடிநீர், துப்புரவு உரிமைகளை உணர்வதில் உள்ள தடைகளை அறிவதற்கு என்னைத் தள்ளியது. 

என்னுடைய முழுமையான, இன்னும் கூடுதலான அறிக்கையானது அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 39-வது கூட்டத்தொடரில் தாக்கல்செய்யப்படும். என்னுடைய இந்த இரு வார இந்தியப் பயணத்தில், அந்நாட்டின் தண்ணீர் மற்றும் அடிப்படை சுகாதாரத் துறை ஆகியனவும் இவற்றுக்கான உரிமைகளை இந்திய அரசு கையாளும்விதமும் எப்படி பிணைந்துள்ளன என்பதையே நான் கவனித்திருக்கிறேன். 

குடிநீர் மற்றும் துப்புரவு உரிமைகள் தொடர்பான இந்திய சட்டமானது பன்னாட்டு அளவில் முன்னோக்கியதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியலமைப்புச் சட்டமானது வெளிப்படையாக வரையறுக்காதபோதும், இதன் 21-வது பிரிவானது தண்ணீர் உரிமையை உள்ளடக்கிய வாழும் உரிமைக்கு உத்தரவாதம் தருகிறது. 1990களின் தொடக்கத்தில் இந்திய அரசு முறைப்படியாக வாழும் உரிமையிலிருந்து தண்ணீருக்கான உரிமையை அங்கீகரித்தது. 

2014-ல் மும்பை உயர் நீதிமன்றமானது, ‘சட்டத்துக்குப் புறம்பான குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களின் அடிப்படை உரிமையாக தண்ணீர் உரிமையைக் கோரமுடியும்’ என்பதை உறுதிசெய்தது. அதே ஆண்டில் இன்னொரு வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றமானது மாற்றுப் பாலினத்தவர்கள் தங்களின் பாலினத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமையை அங்கீகரித்தும் அவர்களுக்குத் தனி கழிப்பிடம் அமைக்கவும் உத்தரவிட்டது. 

கொள்கை அளவில், அங்கு பல்வேறு தேசிய அளவிலான திட்டங்களின் மூலம் குடிநீர் மற்றும் துப்புரவு வசதி கிடைக்கச் செய்யப்படுகிறது. குறிப்பாக, என்னுடனான உரையாடல்களில் அரசுத் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ‘தூய்மை இந்தியா’ எனும் திட்டத்தைப் பற்றி அதிக அளவில் பேசினார்கள். இதில், திறந்தவெளி மலம்கழிப்பை ஒழிப்பதற்கு, மத்திய அரசு முதல் ஊராட்சிவரை ஓர் அரசியல் போக்கை உருவாக்குவதில் பிரதமரின் தனிப்பட்ட அக்கறையையும் ஊக்குவிப்பையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், அடுத்த அக்டோபருக்குள் நாடு முழுவதும் ஏராளமான கழிப்பிடங்களை ஏற்படுத்துவது ஆகும். குறுகிய காலத்தில் நடப்பு காலகட்டத்தில் ஒரு நாட்டின் துப்புரவு தொடர்பான சவால்களைச் சந்திப்பதில் இது முழுமையான முயற்சி ஆகும். உண்மையிலேயே, இந்திய மக்களின் துப்புரவு தொடர்பான மனிதவுரிமைகளை மேம்படுத்துவதில் இது பெரிய நகர்வாகும். 

என்னுடைய கோணத்தில், இதில் கொள்கை, செயல்பாடுகளில் தெளிவின்மையும் மனிதவுரிமைகள் சார்ந்து முழுமையற்ற அணுகுமுறையும் காணப்படுகிறது. தேசிய அளவிலான திட்டங்கள், மனிதவுரிமைகளை முழுமையானதாக அல்லாமல் துண்டுதுண்டாக உள்வாங்கிக்கொண்டதாக இருக்கின்றன. 

என்னுடைய அறிக்கையின் முக்கிய அம்சம், இந்தப் பிரச்னையில் எப்படி மனிதவுரிமையைப் பேணுவது என்பதற்கான புதிய அணுகுமுறை பற்றியதாகும். 

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறைகளில் மனிதவுரிமைகள் காக்கப்படுவதில் உள்ள இடைவெளி குறித்ததுதான் என் அக்கறை. பொதுவாக, இதில் மனிதவுரிமைகளைக் காப்பது என்பது குடிநீர் கிடைப்பது, அதை நுகர்வதற்கான வாய்ப்பு, ஏற்புத்திறன், தாங்குதிறன், தரம் மற்றும் பாதுகாப்பு, தனியுரிமை, சுயமரியாதை, தீர்வு, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் பாகுபாடின்மை, முன்னேற்றத்தை உணர்தல் ஆகியவையே! எனவே, இதுதொடர்பான பன்னாட்டு மனிதவுரிமை உடன்பாடுகள், பன்னாட்டளவில் தண்ணீர் மற்றும் துப்புரவு உரிமைகளுக்கான ஆதரவு இரண்டிலும் இந்தியாவின் கடப்பாட்டை வலியுறுத்துகிறேன். 

திறந்தவெளிக் கழிப்பிட ஒழிப்பு மனிதவுரிமை அற்றதாக இருக்கமுடியாது.

இந்தியப் பயணத்தின் கடைசிநாளன்று தூய்மை இந்தியா இணையத்தளத்தைப் பார்த்தபோது, கடந்த மூன்று ஆண்டுகளும் ஒரு மாதமும் ஆன காலத்தில், ஊரகப்பகுதிகளில் மட்டும் 5.3 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன எனும் தகவலைப் பார்த்தேன். என் பயணத்தின்போது, உத்தரப்பிரதேசத்தின் சில கிராமப் பகுதிகளில், திறந்தவெளிக் கழிப்பிடம் ஒழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதியில் உள்ளவர்களைச் சந்திக்கமுடிந்தது. அவர்களின் துப்புரவு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. 

உரிய அமைச்சகங்களின் கருத்துப்படி, திறந்தவெளிக் கழிப்பு அகற்றப்பட்ட பகுதி (தி.வெ.க.அ.) எனச் சான்றளிப்பதற்கான விதிமுறைகள், ஊரகப் பகுதிக்கும் நகர்ப்பகுதிக்கும் ஒரேமாதிரியாக இல்லை. சில இடங்களில் தி.வெ.க.அ. பகுதிகள் அறிவிக்கப்பட்டபடி அப்படியே இல்லை என்பதைப் பார்க்கமுடிந்தது. 

உ.பி. மாநிலம் லக்னோ, நௌபஸ்தா கலன் எனும் ஊரில் உள்ள சின்ஹட் வார்டில், சில முதியவர்கள் தாங்கள் தி.வெ.க.-ஐயே விரும்புவதாகத் தெரிவித்தனர். மும்பையில் 118 மண்டலங்களை தி.வெ.க. இடங்களெனக் கண்டறிந்த மாநகராட்சி, குடியிருப்புகளுக்கு 500 மீட்டர் தொலைவில் பொதுக்கழிப்பிடங்களை அமைத்துள்ளது. இன்னும் அங்குள்ள கணிசமானவர்கள், பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டு காரணங்களால் தி.வெ.க.-ஐயே தெரிவுசெய்கின்றனர். ஒரு இடத்தை தி.வெ.க.அ. பகுதி என அறிவிப்பது மட்டும் மனிதவுரிமைகளுக்குச் சாதகமானதாக இருக்காது. இது இப்படித்தான் என மொட்டையாக இதைப் பார்க்கமுடியாது; துப்புரவில் மனிதவுரிமை என்பதை படிப்படியான செயல்பாடுகள் மூலமாகவே சாதிக்கமுடியும். 

தி.வெ.க. என்பது தனிப்பட்ட விருப்பமாக இருக்கையில், பெரும்பாலானவர்களின் தேர்வு அதுவாகவே இருப்பதைப் பார்த்தேன். குறிப்பாக, பொதுக்கழிப்பிடங்கள் சற்று தொலைவில் இருக்கும் குடிசைப்பகுதிகள், ஊரகப் பகுதிகள், மீள்குடியேற்றப் பகுதி ஆகியவற்றில் இது நிதர்சனமாக இருக்கிறது. லக்னோவில் உள்ள அறிவிக்கப்படாத குடிசைப்பகுதியான விநாயக்புரத்தில், அனைவருமே திறந்தவெளியிலேயே கழிக்கின்றனர். அந்தப் பகுதியைச் சுற்றிப்பார்த்தபோது, பயன்பாட்டில் ஒரு கழிப்பிடத்தையும் காணோம். ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாத கழிப்பிடம் இருந்தது.

டெல்லியின் சவ்தா சேவ்ராஸ் மீள்குடியேற்றப் பகுதியில், ஒரு கழிப்பிடத்தைப் பார்த்தேன்; அங்கு விளக்கும் இல்லை, பூட்டும் இல்லை.  

மணிப்பூரில் இம்பால் அருகில் தௌபால் தம் பகுதியில் உள்ள சிற்றூர்களைப் பார்த்தபோது, சில இடங்களில் குடியிருப்பிலேயே உள்ளூராட்சியால் கழிப்பிடங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பாதியில் நின்றுபோய் இருந்தன. கட்டுமானம் முடியும்வரை உரிய பயனாளிகள் காத்திருக்கின்றனர்; அதுவரை அவர்களுக்கு தி.வெ.க. மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கிறது; வேறு இல்லை. 

(தொடரும்)