Published:Updated:

“காங்கிரஸில் இப்போது யார் காமராஜர் ?”

டி.அருள் எழிலன்படம்: கே.ராஜசேகரன், ஓவியங்கள்: கண்ணா

பிரீமியம் ஸ்டோரி

மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்று காவல் துறையால் தடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அப்போதுதான் சத்தியமூர்த்திபவன் வந்து இறங்கினார். அவரோடு நாமும் சென்றால், நோட்டீஸ் போர்டில் கட்சி செய்திகளை யார் ஒட்டுவது என ஒரே போட்டா போட்டி. 'அட... அடிச்சுக்காம ஒட்டுங்கப்பா’ எனச் சமாதானப்படுத்துகிறார் இளங்கோவன். 

''காங்கிரஸ் கட்சின்னாலே கலாட்டா, கோஷ்டிப் பூசல்னுதான் கேள்விகேட்பீங்க. அதெல்லாம் பழைய கதை. இப்போ கட்சி முன்பைவிட வலுவா, கொண்ட கொள்கையில் தெளிவா இருக்கு'' - படபடவெனப் பேசுகிறார்.

“காங்கிரஸில் இப்போது யார் காமராஜர் ?”

''உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் இப்போது கோஷ்டிப் பூசல் இல்லவே இல்லையா... அனைத்து தலைவர்களும் தலைமைக்குக் கட்டுப்படுகிறார்களா?''

''நான் உறுதியாகச் சொல்கிறேன்... கட்சி இப்போது கட்டுப்பாட்டோடு இருக்கிறது. முன்னர் கட்சியில் நடந்த சிறுசிறு பூசல்களைச் சிலர் ஊதிப் பெரிதாக்கிக் காட்டினார்கள். மற்ற கட்சிகளில் உள்ளதுபோல கோஷ்டிப் பூசல்களினால் கை-காலை எடுப்பது, கொலைசெய்வது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியில் நடக்காது. ஆனால், திருச்சி ராகுல் காந்தி தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சரிவர செய்யாத சில மாவட்டத் தலைவர்களை மாற்றியிருக்கிறேன்!''

“காங்கிரஸில் இப்போது யார் காமராஜர் ?”

''முன்னர் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு கட்சியின் 60 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டதாகச் சொன்னீர்கள். இப்போது வாசனும் அவருடைய ஆதரவாளர்களும் இல்லாத வெற்றிடத்தை நிரப்பிவிட்டீர்களா?''

''இல்லாத ஒன்றைப் பற்றி எதற்குப் பேசிக்கொண்டு? பெயர் அளவில் லெட்டர் பேட் கட்சியாக உள்ளவர்களைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்ல முடியாது!''

''தடாலடியாக '234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!’ என்கிறீர்களே... நிச்சயமாக அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி சேர மாட்டீர்களா?''

''அது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தெரியும்!''

'' 'காங்கிரஸ் கட்சி குனிந்து திராவிடக் கட்சிகளைச் சுமந்தது போதும்’ எனச் சொல்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்... காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சிகளைச் சுமந்ததா அல்லது அவர்களின் முதுகில் சவாரி செய்ததா?''

''எது உண்மை, எது பொய் என்றெல்லாம் இப்போது விவாதிக்கத் தேவை இல்லை. ஆனால், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். இந்த முறை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றி பெற்று, காமராஜர் ஆட்சி அமைக்கவே ஆசை. கூட்டணி சேரவேண்டிய அவசியம் ஏற்பட்டால், வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையை எடுக்க மாட்டோம். ஆட்சியில் பங்கு கேட்போம். அப்படிக் கேட்பது, காமராஜர் நல்லது செய்ததுபோல நாங்களும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான்!''

“காங்கிரஸில் இப்போது யார் காமராஜர் ?”

''என்ன நம்பிக்கையில் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?'

''மக்கள் எங்கள் பக்கம் இருக்கும் நம்பிக்கையில்தான்.''

''ஒருவேளை தனித்துப் போட்டியிட்டால், முதலமைச்சர் வேட்பாளராக குஷ்புவை அறிவிப்பீர்களா?''

''காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் மரபு இல்லை. தேர்தலில் வென்ற பிறகு, சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரைத் தேர்வு செய்வார்கள்!''

''சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?''

''தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் தலை இல்லாத உடல்போல இருக்கின்றன. அரசின் தினப்படி வேலைகள்கூட முடங்கிக் கிடக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதுகூட சிக்கலாகிவிடும். மதுவிலக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம், சட்டம் - ஒழுங்கு பிரச்னை மறுபக்கம்... என தமிழ்நாடு முழுக்கவே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த மக்கள் எழுச்சியை போலீஸைக் கொண்டு ஒடுக்கிவிடலாம் என நினைப்பது தவறு.''

''மது ஒழிப்புப் போராட்டத்தைத் தூண்ட, சசிபெருமாள் மரணம் அடைய வேண்டுமா?''

''அது யாரும் எதிர்பாராத சோகம். அதேசமயம் 24 மணி நேரத்தில் மதுவை முழுமையாக ஒழித்துவிட முடியும் என நான் நினைக்கவில்லை. மதுவைப் படிப்படியாக ஒழிப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும். மதுப் பழக்கம், அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சூறையாடுகிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதைக் கணக்கில்கொண்டு, மதுவை ஒழிக்க தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, மதுவுக்கு எதிராகப் போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக இரும்புக்கம்பிகளால் தாக்கி, பூட்ஸ் காலால் மிதித்து, மருத்துவ சிகிச்சைகூட வழங்காமல் சிறையில் அடைத்திருப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்!''

“காங்கிரஸில் இப்போது யார் காமராஜர் ?”

''மது ஒழிப்புப் போராட்டம், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ஈகோ போராட்டமாக மாறிவிட்டது. இன்னொரு பக்கம் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே, சாராய ஆலை அதிபர்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. பொது வாழ்க்கையில் தூய்மை என்பது கேலிப்பொருளாகிவிட்டதா?''

''மதுவிலக்கு என்பது மக்களின் கோரிக்கை. அரசியல் கட்சிகளைவிட மக்களே மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறார்கள். மக்களின் இந்தக் கோரிக்கைக்காகப் போராடும் அரசியல் தலைவர்கள், தங்களின் சொந்தக் கட்சி நலனையும் தனிப்பட்ட காழ்ப்புஉணர்ச்சிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் போராட வேண்டுமே தவிர, ஒருவரை ஒருவர் கேள்விகேட்டு தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக்கொள்வது அவசியம் இல்லாதது. அப்படிச் செய்வது,  மக்களின் நியாயமான கோரிக்கையைத் திசைதிருப்பும் செயல். மற்றபடி தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் தூய்மை என்பது காணாமல்போய் எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன!''

''காமராஜர் ஆட்சி அமைப்போம் என நீங்கள் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது யார் காமராஜர்?''

''காங்கிரஸ் கட்சியில் ஒரு காமராஜர்தான் இருக்க முடியும்; பல காமராஜர்கள் இருக்க முடியாது. காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சிதான் நடத்தியது. அந்த அனுபவத்தில்தான் 'காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்கிறோம். மற்றபடி பிற கட்சிகளும் 'காமராஜர் ஆட்சி அமைப்போம்’ எனச் சொல்வதே காங்கிரஸுக்குக் கிடைத்த பெருமைதானே!''

''பெரியாரின் பேரன் நீங்கள். பெரியாருடனான நினைவுகள் என்னென்ன?''

''என் தாத்தா கிருஷ்ணசாமியின் தம்பிதான் தந்தை பெரியார். 1948-ம் ஆண்டு நான் பிறந்தேன். அடுத்த வருடம் பெரியாரிடம் இருந்து அண்ணா விலகி தி.மு.க-வைத் தொடங்கிவிட்டார். அப்போது தி.மு.க-வை வளர்த்தவர்களுள் என் அப்பா ஈ.வி.கே.சம்பத்தும் ஒருவர். அதனாலேயே கூட்டுக் குடும்பமாக இருந்த எங்கள் குடும்பம் பிரிந்துவிட்டது. அதனால் நான் சிறுவனாக

“காங்கிரஸில் இப்போது யார் காமராஜர் ?”

இருந்தபோது பெரியாரை ஒருசில முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். 'தாத்தா’ என்பதைத் தாண்டி வேறு எந்த நினைவுகளும் பதிவாகவில்லை!''

''ஹேர் டை பயன்படுத்துறீங்களா?''

''ஆங்... ஹேர் டைய்யா...  (மெள்ள சுதாரித்து... அருகில் அமர்ந்திருந்த யசோதா உள்பட கட்சியினரைப் பார்த்துவிட்டு) நான் எதையும் ஓப்பனா பேசுறவன்தான். அதுக்காக இவ்ளோ ஓப்பனாவா கேள்வி கேட்பீங்க? நான் செஞ்ச பெரிய தப்பே, ஹேர் டை அடிக்க ஆரம்பிச்சதுதான். கையில என்ன டை கிடைக்குதோ அதை எடுத்து அடிச்சுப்பேன். எந்த ஹேர் டை தடவினாலும் அதுல பக்கவிளைவுகள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா ஹேர் டை அடிக்கிறதை விட்டுரணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு