Published:Updated:

நீதிமன்றங்களுக்குள் உருளும் தயாநிதி தலை!

Vikatan Correspondent

யாநிதி மாறனை கைதுசெய்தாக வேண்டும் என தீவிரமாக இருக்கிறது சி.பி.ஐ. கைது ஆகாமல் இருப்பதற்கான எல்லா பிரயத்தனங்களையும் செய்து வருகிறார் தயாநிதி மாறன். இரு தரப்பும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற நீதிமன்றங்களில் மாறிமாறி மனுப் போட்டுக் கொண்டிருக்கின்றன. சட்டம் வழங்கி இருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்த தயாநிதி முயற்சிக்க... அவர் தப்பும் வழிகளை ஒவ்வொன்றாக அதே சட்டத்தின் துணையோடு ‘லாக்’ செய்து வருகிறது சி.பி.ஐ.!

பி.எஸ்.என்.எல் முறைகேடு!

தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அதில் இருந்து ஒரு சர்ச்சை வெடித்தது.

‘‘மத்திய அமைச்சர் என்ற முறையில், அப்போது அவருக்கு 3 இலவச தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. சென்னையில் உள்ள தயாநிதியின் போட் கிளப் வீட்டுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஐ.எஸ்.டி.என் உயர்ரக தொலைபேசி இணைப்பை, ரகசியமாக நீட்டித்து, அதில் இருந்து 364 தொலைபேசி இணைப்புகள் உருவாக்கப்பட்டன. இதுதவிர, 19 பிரீபெய்டு சிம் கார்டுகளையும் தயாநிதி பயன்படுத்தினார். இவற்றின் மூலம் சன் தொலைக்காட்சிக்கு வீடியோ டவுண்லோடு செய்யப்பட்டது. அதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு. பூமிக்கடியில் பள்ளம் தோண்டி ரகசியமாக உருவாக்கப்பட்ட இந்த இணைப்புகள் பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் துணையோடு கொடுக்கப்பட்டன” என்று சி.பி.ஐ கடந்த 2011-ம் ஆண்டு தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்தது. 2013-ம் ஆண்டு இதில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றங்களுக்குள் உருளும் தயாநிதி தலை!

‘‘நான் தவறு செய்யவில்லை!”

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த வழக்கில் வேகம் கூடியது. சன் டி.வி ஊழியர்கள் கண்ணன், ரவி, கௌதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரச் சொல்லி, கடந்த ஜூலை 29-ம் தேதி, ஃபேக்ஸ், தொலைபேசி மூலம் தயாநிதிக்கு ஓலை அனுப்பியது. உடனே தயாநிதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘‘சி.பி.ஐ. என்னை மிரட்டும் தொனியில் விசாரணைக்கு அழைக்கிறது; பி.எஸ்.என்.எல் இணைப்புகளை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை; நான் பயன்படுத்திய இணைப்புகளுக்குப் பணம் கட்டவில்லை என்றால்... அது சிவில் வழக்கில்தான் வரும்; மாறாக சி.பி.ஐ என் மீது கிரிமினல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது; 2004 - 2007 காலகட்டத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்தப் பிரச்னைக்கு, முதல்கட்ட விசாரணையே 2011-ம் ஆண்டில்தான் தொடங்கியது; அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்கு இதில் சி.பி.ஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; திடீரென 2013-ம் ஆண்டில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து மீண்டும் இந்தப் பிரச்னையைக் கிளற ஆரம்பித்தது; நான் பலமுறை விசாரிக்கப்பட்டேன்; விசாரணை அனைத்துக்கும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தேன்; 60 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 200 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன; ஆனால், சி.பி.ஐ-யால் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய முடியவில்லை; ஏனென்றால், நான் குற்றம் எதுவும் செய்யவில்லை; எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

‘‘இது சிவில் பிரச்னை அல்ல!”

இதற்கு எதிராக சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘தயாநிதி மாறன் தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை ரகசியமாக 364 இணைப்புகளாக நீட்டித்து பயன்படுத்தியது, அதற்கான கட்டணம் பதிவு ஆகாதவாறு, தொழில்நுட்ப மோசடியில் ஈடுபட்டது,  இதற்காக ரகசியமாகப் பூமிக்கடியில் பள்ளம் தோண்டி உயர்ரக ஃபைபர் கேபிள் பதித்தது, இந்த முறைகேடுகளுக்காகத் தன்னுடைய வீட்டில் ஒரு சிறிய டெலிபோன் எக்சேஞ்ஜ் அமைப்பையே நிறுவியது, இதற்காக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் முதன்மைப் பொது மேலாளர்களாக இருந்த பிரம்மானந்தம், வேலுச்சாமி ஆகியோரை கூட்டுச்சதியில் பங்கேற்க வைத்தது போன்றவை சிவில் பிரச்னை அல்ல. கூட்டுச்சதி, நம்பிக்கைக் துரோகம், ஏமாற்றுதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது, ஊழல் புரிந்தது போன்ற குற்றங்கள் இதில் அடக்கம். அதனால்தான், தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் மீது கிரிமினல் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை நடைபெற்ற விசாரணைகளுக்கு சரியாக அவர் ஒத்துழைத்தது இல்லை. எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று தனது வாதங்களை அடுக்கியது.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, தயாநிதி மாறனுக்கு 6 வார காலம் முன்ஜாமீன் வழங்கினார்.

‘‘கஸ்டடியில் எடுக்க வேண்டும்!”

இதையடுத்து, டெல்லியில், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தயாநிதி மாறனிடம் விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு, கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில் “தயாநிதி மாறன், விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. அவர் ஏற்கெனவே நடந்த விசாரணையில் சொன்ன பல தகவல்களைத் தற்போது திரும்பப் பெற்றுள்ளார். முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிக்கிறார். எனவே, அவரை முழுமையாக கஸ்டடியில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். எனவே, அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்” என்று மனுத் தாக்கல் செய்தது. மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன் ஆகியோர், ‘‘தயாநிதி  விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அவர் ஒரே ஒரு இணைப்பைத்தான் பயன்படுத்தினார். அவர் பெயரில் வேறு எந்த இணைப்புகளும் இல்லை. சி.பி.ஐ கருத்துப்படி, தயாநிதி முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் இணைப்புகள் சன் டி.வி-க்குப் பயன்படுத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதை இன்னும் சி.பி.ஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. எனவே, முன் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது” என்று வாதிட்டனர்.

‘‘அரசியல் காழ்ப்பு இல்லை!”

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ‘‘குற்றம் நிரூபிக்கப்படாதவரை குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சொல்ல முடியாது. தயாநிதி பொறுப்புமிக்க அமைச்சர் பதவியில் இருந்துள்ளார். அவர் இருந்த காலகட்டத்தில், அவர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு அதனால் அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கான விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களை அளித்துள்ளார். முந்தைய விசாரணையில் சொன்ன தகவல்களை மறு விசாரணையில் திரும்பப் பெற்றுள்ளார். அதனால், உண்மையைக் வெளிக்கொண்டுவர அவரை முழுமையாக விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் தயாநிதி சொல்வது போல், இதை அரசியல் காழ்ப்பு உணர்ச்சி என்று சொல்ல முடியாது. அதனால், அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்கிறேன். மூன்று நாள்களுக்குள் தயாநிதி சரணடைய வேண்டும். இல்லையென்றால், சி.பி.ஐ அவரைக் கைதுசெய்யலாம்” என்று அதிரடித் தீர்ப்பை அளித்தார்.

இதையடுத்து தயாநிதி மாறன் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. பரபரப்பாக செயல்பட்டது தயாநிதி தரப்பு.

‘‘சி.பி.ஐ-யிடம் ஆதாரங்கள் இல்லை!”

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11-ம் தேதி மனுத் தாக்கல் செய்தார் தயாநிதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், பி.கோபல கௌடா, ஆர்.பானுமதி முன் 12-ம் தேதி தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்அபிஷேக் சிங்வி, இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதன்கிழமை மனுவை விசாரணைக்காக ஏற்றனர். விசாரணையின்போது, தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் தவான், ‘‘2011-ம் ஆண்டு முதல்கட்ட விசாரணை நடைபெற்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து 2013-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இன்னும் இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சன் டி.வி முறைகேடாக இணைப்புகளைப் பயன்படுத்தியதற்கு ஆதாரங்களை சி.பி.ஐ-யால் திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும்போது, தயாநிதியைக் கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் சி.பி.ஐ இந்தப் பிரச்னையை அணுகுகிறது. எனவே, இதில் அரசியல் காழ்ப்பு உள்ளது” என்று வாதிட்டார்.

நீதிமன்றங்களுக்குள் உருளும் தயாநிதி தலை!

‘‘அரசியல் பாதுகாப்பில் இருந்தார் தயாநிதி!”

அதைக் கடுமையாக எதிர்த்த சி.பி.ஐ வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “தயாநிதி  கடந்த 2011 - 2013 காலகட்டத்தில் அரசியல் பாதுகாப்பில் இருந்தார். எனவே, அப்போது சி.பி.ஐ தயாநிதியை அணுகுவதில் பல சிக்கல்கள் இருந்தன. மேலும் இதுவரை நடைபெற்ற விசாரணைகளுக்கு தயாநிதி மாறன் சரியான ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. மேலும் அரசுக்குப் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்ட வழக்கில், தயாநிதி வெளியில் இருந்தால் அவர் சாட்சிகளை கலைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் வழக்கு சரியான திசையில் போகாது. எனவே, அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்’’ என்று வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சி.பி.ஐ-யிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள். “தயாநிதி மாறனை கைதுசெய்வதில் மட்டுமே நோக்கமாக உள்ள சி.பி.ஐ., அவர் உத்தரவின் பேரில் தவறுசெய்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளைக் கைதுசெய்யாதது ஏன்? இரண்டு ஆண்டுகள் தயாநிதி அரசியல் பாதுகாப்பில் இருந்ததாக சி.பி.ஐ வழக்கறிஞரே நீதிமன்றத்தில் சொல்கிறார். அப்படியானால் இந்த வழக்கில் அரசியல் காழ்ப்பு இருக்கிறது என்று நாங்கள் ஏன் கருதக் கூடாது? முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட இணைப்புகள் சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரங்களை சி.பி.ஐ வைத்துள்ளது? தயாநிதி தவறு செய்ததற்கான ஆதாரங்களாக சி.பி.ஐ வசம் என்னென்ன ஆவணங்கள் உள்ளன? அப்படி இருக்கும் ஆவணங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், இரண்டு வாரங்களில் சி.பி.ஐ மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, சி.பி.ஐ-யின் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் தயாநிதி ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 14-ம் தேதி தொடரும். அதுவரை தயாநிதி மாறனைக் கைதுசெய்யக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்துசெய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

விசாரணைக்கு முன்பே கண்ணைக்கட்டுதே!

- ஜோ.ஸ்டாலின்