Published:Updated:

மோடி விரும்பும் ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? - பாகம் 2

மோடி விரும்பும் ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? - பாகம் 2
மோடி விரும்பும் ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? - பாகம் 2

’தூய்மை இந்தியா’ திட்டத்துடன் சேர்த்து பள்ளிகளில் குடிநீர் மற்றும் துப்புரவு வசதியை உறுதிப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன; ஆனால், அவற்றின் இலக்குகளை இன்னும் அடையமுடியாதநிலைதான் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, 2015-ல் பள்ளிகளில் பெண்பிள்ளைகளுக்கும் ஆண்பிள்ளைகளுக்கும் தனித்தனியான கழிப்பிடங்கள் இருக்கவேண்டும் என்று (மத்திய) மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவிப்பு வெளியிட்டது. அரசாங்கத்தின் அறிக்கைகளில், ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியான கழிப்பிடங்கள் கட்டப்படுவதாகக் குறிப்பிடுகின்றன. அதன்படி, சுவச் வித்யாலயா பரப்புரையின்படி 2014 ஆகஸ்ட் முதல் 2015 ஆகஸ்ட் வரையிலான காலத்தில், பெண்பிள்ளைகளுக்கு 1,91,000 கழிப்பிடங்களும் ஆண்பிள்ளைகளுக்கு 2,26,000 கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டன. 2016-ல் இதுவரை 61.9% பள்ளிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கழிப்பிடங்கள் உள்ளன. 2010-ல் இது 32.9% ஆகவும் 2014-ல் 55.7% ஆகவும் இருந்தது. 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகில் சர்தாரா கிராமத்தில், தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றைப் பார்வையிட்டேன். 130 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில் கழிப்பிடங்கள் பயன்படுத்தமுடியாதபடிதான் இருந்தன. சிறுநீர்க் கழிப்பிடங்களுடன் இரண்டு சிறு கழிப்பிடங்கள் அங்கு இருந்தன; இருபாலருக்கும் தலா ஒரு கழிப்பிடம் என புதிதாகக் கட்டிக்கொண்டும் இருந்தார்கள். 

தூய்மை இந்தியா திட்டமானது இந்த வகையில் தகவல், கல்வி, தகவல்தொடர்பு ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது. மாநில அரசுகள் அல்ல, மைய அரசானது, இந்தப் பணிக்கான நிதியைச் செலவழிப்பதில் வெளிப்படையாக இருக்கிறது. ஆனால், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாதது அல்லது தேவைக்குக் குறைவான முறையியலைக் கடைப்பிடிப்பது ஆகிய காரணங்களால், இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சமான, நிலைத்த பாதுகாப்பான கழிப்பிடப் பயன்பாடு என்பதை எட்டமுடியவில்லை. 

கழிப்பிடங்களின் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும்  நிலைத்த தன்மை ஆகியவைகுறித்த மதிப்பீட்டு முடிவுகள் பெரிய அளவுக்கு மாறுபடுகின்றன; மேலும் அவை முறையியலைச் சார்ந்ததாக உள்ளன.  

இந்தியத் தர கவுன்சிலானது இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் நடத்திய கணக்கெடுப்புப்படி, சுமார் 91 % கழிப்பிடங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ’வாட்டர் எய்டு’ அமைப்பின் கணக்கீட்டுப்படி, நிலைப்புத்தன்மைக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், பயன்பாட்டின் அளவு குறைந்துவிடும்படிதான் இருக்கும். அதன் சர்வேயில், “ மொத்தத்தில் 33% கழிப்பிடங்கள் மட்டுமே நிலைப்புத்தன்மையும் பாதுகாப்பும்கொண்டவையாகத் தெரிகின்றன. 35% பாதுகாப்பானவை என்றாலும் நீண்டகால நோக்கில் அவற்றின் பாதுகாப்பு தொடரவேண்டுமானால் பெருமளவில் அவற்றை மேம்படுத்தியாகவேண்டும். மீதமுள்ள 31% கழிப்பிடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன; அவற்றின் மூலம் உடனடியாக சுகாதாரப் பிரச்னைகள் பரவிக்கொண்டிருக்கின்றன. பல கழிப்பிடங்கள் மோசமாகப் பராமரிக்கப்படுபவையாகவோ கைவிடப்பட்டநிலையிலோ உள்ளதை நான் நேரடியாகப் பார்த்தேன். கதவுடன் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடங்களில் பூட்டுகள் இல்லாமல், பயன்படுத்துவோரின் தனிமை பாதிக்கும்வகையில் உள்ளன. இதற்கு நேர்மாறாக, பல பொது இடங்களில் நல்ல நிலைமையில் உள்ள கழிப்பிடங்கள் பூட்டுபோட்டுப் பூட்டப்பட்டுள்ளன என எனக்கு முறையீடுகள் வந்தன;  என்னாலும் அதைப் பார்க்கமுடிந்தது. 

அரசு அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் எனப் பல தரப்பினரிடமும் பேசியதில், ஒரு சங்கதி தெளிவாகத் தெரிந்தது.. திறந்தவெளிக் கழிப்பானது தனிநபர் அளவிலும் சமூக அளவிலும் நன்கு வேரூன்றிய பழக்கமாக இருக்கிறது; இதை மாற்றுவதற்கு மக்களை ஒப்புக்கொள்ளச்செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே அது! பல மாநிலங்களில் குறிப்பிட்ட வயதுப்பிரிவினரில் குறிப்பாக முதியோர்கள் மத்தியில் இந்தப் பழக்கத்தை மாற்றும் முயற்சியானது சவாலாக இருக்கிறது என்று கூறினார்கள். அதே சமயம், கிராமங்களில் தனித்தனியாக நிறைய பேரைச் சந்தித்தேன்; அப்போது வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் அமைந்ததே என திருப்தியை வெளிப்படுத்தினர்; உற்சாகமாக அதைப் பற்றி விவரித்தனர். ஆனாலும், அரசு அதிகாரிகள் உட்பட பலரும்,  குறுகிய காலத்தில் பழக்கவழக்கத்தை மாற்றுவது மற்றும் கழிப்பிடங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளவர்களிடம் நிலைப்புத்தன்மையை எதிர்பார்ப்பது ஆகியவற்றில் சந்தேகமாகவே என்னிடம் சொன்னார்கள். 

தூய்மை இந்தியா திட்டமானது, குறுகிய காலத்தில் சிறப்பான நோக்கத்தைக் கொண்டதாகவும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகவும் அதேபாணியில் பலன்களையும் எதிர்பார்க்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவது மாநிலம், மாவட்டம், கிராமம் என அனைத்து நிலைகளிலும் கடுமையானப் போட்டியையும் உள்ளடக்கியதாகும். 

இது ஒருபக்கம் இருக்க, இதில் பாராட்டுக்காகவும் பரிசுக்காகவும் மூர்க்கத்தனமாகவும்  தொல்லைதரும்வகையிலும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. திட்டத்தின் இலக்கை அடைவதற்காகவும் அதைத் தொடர்ந்து பாராட்டுகளைக் குவிக்கும் ஆர்வத்தோடும் அதிகாரிகள் ஒருபக்கம் கழிப்பிடத்தை வேகமாகக் கட்டிமுடிக்குமாறு நெருக்கடி தருகின்றனர்; இன்னொரு பக்கம் திறந்தவெளிக் கழிப்பை உடனடியாக நிறுத்தவும் கட்டாயப்படுத்துகின்றனர். உதாரணமாக, ரேஷன் அட்டையைப் புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு உணவு உரிமை மறுக்கப்படுவது, கூடுதலான மின்கட்டணம் செலுத்தவேண்டியவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதைப் போல! அவற்றைப் போலவே, திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிப்பவர்கள்,  அவமதிப்புக்கும் வதைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்; அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் இப்படி நடப்பது தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, அனைத்து மாநிலங்களுக்கும் இரண்டு முறை அறிவுறுத்தலைச் செய்திருக்கிறது. என்னுடைய பார்வையில், திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிப்பது என்பதில் நடக்கும் துன்புறுத்தல்களை அரசாங்கத்தின் பல அடுக்குகள் தொடர்ச்சியாகக் கண்காணிப்புக்கு உள்ளாக்குவதும் அதற்குப் பொறுப்புடைமையும் கொண்டதாகச் செயல்படவேண்டும். தனி மனிதர்களின் அடிப்படை உரிமைகளை மீறப்படாமலும் அவர்களின் சுயமரியாதையைப் பேணும்வகையிலும் நடவடிக்கைகள் அமையவேண்டும். 

தூய்மை இந்தியா திட்டத்தில் இன்னொரு முக்கியமான அம்சம், இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் துப்புரவு சேவைகளின் தரம். நிலைப்புத்தன்மையுள்ள வளர்ச்சி இலக்குகள் எனும் மதிப்பீட்டின்படி, துப்புரவு வசதி என்பது பாதுகாப்பாக கையாளக்கூடியதாக இருக்கவேண்டும். இதன் பொருள், மேம்பட்ட துப்புரவு வசதிகளை மக்கள் மற்ற வீடுகளுடன் பகிர்ந்துகொள்வதாக இருக்கக்கூடாது. அதாவது இப்போது சமுதாயக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவோருக்கு, அவர்களின் குடியிருப்பிலேயே கழிப்பிட வசதி அளிக்கப்படவேண்டும். திறந்தவெளியாக உள்ள மழைநீர் வடிகால்களில் ஓடும் சாக்கடையைச் சரிசெய்வதிலும் இதே பார்வை அவசியம். மேலும், கழிப்பிடங்களில் சேமிக்கப்படும் கழிவுகளையும் இதைப்போலவே பெருநகரங்களில் அதிகரித்துவரும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களால் சேகரிக்கப்படும் கழிவை அகற்றுவதிலும் மிகத் திறன்வாய்ந்த முறை, தரம் பேணப்படவேண்டும். 

துப்புரவைவிட குடிநீருக்கான முயற்சிகளில் வேகம் குறைவு 

தூய்மை இந்தியா திட்டத்தில் துப்புரவுக்கு நாட்டிலேயே முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல குடிநீர் வசதியானது அவ்வளவாக கவனிக்கப்படுவதில்லை என்றாகிவிட்டது. இந்த நிலையில் இந்தியாவில், பாதுகாப்பற்ற துப்புரவைவிட, பாதுகாப்பில்லாத குடிநீரானது வயிற்றுப்போக்கு மரணங்களில் 68% அளவுக்கு காரணமாக அமைந்துள்ளது. 

(தொடரும்)