Published:Updated:

அடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்!... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்!... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3
அடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்!... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3

அடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்!... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3

மாமழை கொடுத்த புதுவெள்ளத்தில் தம்முடைய சாக்கடை நாற்றத்தை எல்லாம் கழிவிக் கொண்டது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி 900 மில்லியன் கன அடி நீரும், டிசம்பர் 2-ம் தேதி 29,000 மில்லியன் கன அடி நீரும், 3-ம் தேதி 11 ஆயிரம் மில்லியன் கன அடி நீரையும் திறந்துவிட்டதால் பொங்கி, பிராவகம் எடுத்துச் சென்ற புதுவெள்ளத்துக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு மிச்சம் இருந்த அடையாறு ஆறால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வெள்ளக்காடு

தாம்பரம் புறநகர் பகுதிகள், விமானநிலையம், மணப்பாக்கம், ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு என்று அடையாறு ஆறு வேகமாகவும், கரைகளை கரைத்து எடுத்துக்கொண்டும் அகண்ட பரப்பளவில்,  நகர் பகுதிகள் முழுவதையுமே மூழ்கடித்துக் கொண்டபடியே சென்றது. ஆம், இந்த புது வெள்ளத்தால் 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இரவும், 2-ம் தேதியும் சென்னையும், சென்னைப் புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடாயின.  

நகரின் தெருக்களில் எல்லாம் புது வெள்ளம் பாய்ந்தது. எதிர்பாராத புதுவெள்ளத்தால் யாரும் முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளவில்லை. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, தம் வீட்டின் வரவேற்பு அறையை ஒரு நூலகமாக வைத்திருந்தார். அவரை ஒரு சுதந்திர போராட்டத் தியாகியாக, கம்யூனிஸ்ட் தோழராக, இயற்கையை காக்கப் போராடும் களப்போராளியாக பார்த்த பலருக்கு, அவரது வாசிப்பு உலகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மூழ்கிய புத்தகங்கள்

அவரது நூலகத்தில். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழின் அரிய புத்தகங்கள் இருக்கின்றன. அவரிடம் அரசியல் வரலாறு சொல்லும் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் வரலாறு சொல்லும் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த புத்தகங்கள் எல்லாம் அடையாறு பொங்கி வந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. அண்மையில் நல்லகண்ணு வீட்டுக்கு, மணல் கொள்ளை தொடர்பாக அவரது கருத்து அறியச் சென்றோம். அப்போது அவரை சுற்றி இருந்த புத்தகங்கள் பற்றி கேட்டோம்.


"அரசியல், போராட்டம் இதைப்போல வாசிப்பும் என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. புத்தகங்கள் என்னுடைய உற்ற துணையாக இருக்கின்றன. பாரதியார் கட்டுரைகள், அவரது கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், அம்பேத்கர் புத்தகங்கள் என்று பல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கின்றேன். 2015-ம் ஆண்டு டிசம்பர் மழை, வெள்ளத்தின்போது என் வீட்டுக்குள் வெள்ளம் வந்ததில் வரவேற்பரையில் இருக்கும் இந்தப் புத்தகங்கள் எல்லாம் மூழ்கிப் போய்விட்டன. நனைந்ததில்நைந்து போய்விட்டன.

அழிந்து போன வரலாறு

நனைந்த போதிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்த 100 முதல் 150 புத்தகங்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில்  சீரமைப்பு செய்து பைண்டிங் செய்து கொடுத்தனர். சீரமைக்க முடியாத புத்தகங்களை கீழே போட மனம் இன்றி, தனித்தனிப் பைகளில் போட்டு வைத்திருக்கிறேன்.

1900-ம் ஆண்டுக்கு முன்பு வந்த தமிழ் பேரகராதியை இன்னும் வைத்திருக்கின்றேன். இந்தப் புத்தகத்தை ஒரு சிலர்தான் வைத்திருக்கின்றனர். இந்தபுத்தகம் இன்றைக்கு கிடைக்காது.  நெல்லை சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது என்னை மதுரை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். அப்போது அந்தக் காலத்திய அரசியல் நிகழ்வுகள், நான் படித்த புத்தகங்கள்குறித்து தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் டைரி போல எழுதிவந்தேன். அந்த நோட்டுப்புத்தகம் மழையில் நனைத்துவிட்டது. அதைக் காயவைத்து பத்திரமாக வைத்திருக்கிறேன். சில பக்கங்கள் அழிந்துவிட்டன. இருந்தபோதிலும், அதை பொக்கிஷமாகப் பாதுகாத்துவருகிறேன். இதேபோல அந்தக் காலத்தில் வந்த பத்திரிகைகள் எல்லாம் நனைந்து நைந்து போய்விட்டன. இனி அந்தப் புத்தகங்கள் கிடைக்கப்போவதில்லை. எனினும், அதை நான் படித்து ஏற்கெனவே உள்வாங்கி விட்டேன். புத்தகங்கள் இல்லை எனினும் அவை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன.


அரசியல், போராட்டக்களம் ஆகியவற்றுக்கு இடையே என்னை இளைப்பாற்றுவதும், உயிர்ப்போடு வைத்திருப்பது இந்தப் புத்தகங்கள்தான். அதனால்தான் என் புத்தக அலமாரியில் மேலும், மேலும் புத்தகங்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

அவருடன் பேசி முடித்து வெளியேறியபோது கருமேகங்கள் திரண்டு, எந்நேரமும் மழைபெய்யலாம் என்ற சூழல் இருந்தது. மழை வந்தால் நனைந்துகொண்டே போகலாம் என்று நினைத்துக் கொள்கிறேன். சென்னை மாமழையில் மக்கள் பாதிக்கப்பட்டதை விடவா? நாம் பாதிக்கப்படப்போகிறோம் என்று எனக்கு நானே நினைத்துக் கொள்கிறேன். 2015 டிசம்பர் மாமழை, வெள்ளத்தில் ஜாபர்கான் பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், கே.கே.நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் உதவிக்கரங்கள் நீண்டன.  கே.கே.நகரில் அவர் ஒரு பெரிய ரவுடியாக ஃபார்ம் ஆனவர். அவர்மீது 5 கொலை வழக்குகள் இருக்கின்றன. அந்த மாமழையில் அவர் என்ன செய்தார் தெரியுமா? ஒரு பத்திரிகையாளர் சொன்ன அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்....

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு