Published:Updated:

நாடாளுமன்றம் நவம்பர் 22 ல் கூடுகிறது

நாடாளுமன்றம் நவம்பர் 22 ல் கூடுகிறது
நாடாளுமன்றம் நவம்பர் 22 ல் கூடுகிறது
நாடாளுமன்றம் நவம்பர் 22 ல் கூடுகிறது

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற நவம்பர் 22-ம்  தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், எதிர்கட்சிகள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழலுக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் பதவி விலகவேண்டும் என்று கோரி மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கோலம் பூண்டு அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, குறிப்பிட்டு சொல்லும்படி எந்த நடவடிக்கைகளும் நடைபெறாமல் அந்த கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.

##~~##
இதற்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததை கண்டித்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகியதோடு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, காப்பீடு மற்றும் ஓய்வூதிய துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு வர்த்தக அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.
குளிர்கால கூட்டத்தொடர்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை ஒரு மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.
ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நவம்பர் 22-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைப்பது என்று அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு பிரச்னை
இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகிய பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் ஆகும்.
இந்த கூட்டத்தொடரில், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததற்கு எதிராகவும், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு முக்கிய பிரச்னைகளை கிளப்பியும் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்து உள்ளன.