Published:Updated:

குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017

குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்?  #GujaratElection2017
குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017

2014-ம் வருட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், 13 வருடங்களாகத் தனது ஆட்சியின் கீழ் இருந்த குஜராத் மாநிலத்துடைய வளர்ச்சியைக் காண்பித்து தனக்கான வாக்குவங்கிகளை வலுப்படுத்தினார் மோடி. ’குஜராத் மாடல்’ போல இந்தியாவையும் வைப்ரன்டாக மாற்றுவேன் என்றார். அதுவே அவரை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் 14-வது பிரதமராகவும் ஆக்கியது. இன்று குஜராத்தின் தேர்தல் முடிவுகள்தான் மோடி மீண்டும் பிரதமராவதையும், பி.ஜே.பி மற்ற மாநிலங்களில் சந்திக்கும் தேர்தலின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் ஆணிவேராக இருக்கப்போகிறது. மோடி நாட்டையே விற்றுவிடுவார் என குற்றம் சாட்டுகிறார் ராகுல்காந்தி. ’நான் டீ விற்றவன்...அதற்காக நாட்டை விற்க மாட்டேன்’ என்கிறார் மோடி. 

பிரிட்டிஷ் ஆட்சியில் மூன்று மாகாணங்கள் ஆங்கிலேயர்களுக்கு பெரிதும் உதவிகரமானதாக இருந்தன. சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை மையமாக கொண்டிருந்தது. வங்காள மாகாணத்தில் தங்களுக்கான பாதுகாப்பு தளவாடங்களை அமைத்துக்கொண்டனர். மும்பை மாகாணம்.... தொழில் வளர்ச்சிக்கும் வர்த்தகத்துக்குமான இடமாக அமைத்துக்கொண்டனர். அந்த மாகாணம்தான் இன்றைய மஹாராஷ்டிரா. 1960-ம் ஆண்டு குஜராத், மஹாராஷ்டிராவிலிருந்து தனிமாநிலமாக பிரிந்தது,

தனி மாநிலம் ஆனதிலிருந்து 1990 வரை குஜராத் காங்கிரஸின் கூடாரம். 1990-க்குப் பின் குஜராத்தை காங்கிரஸ் மட்டுமல்ல எந்த கட்சியாலும் பி.ஜே.பியிடமிருந்து கைப்பற்றமுடியாத சூழல் உருவானது. குஜராத், இந்தியாவின் வணிகர்கள் வாழும் ஊர். சூரத் ஆடைகளின் நகரம். மக்கள் தொகையில் இந்தியாவின் 9-வது பெரிய மாநிலம், 6.1 கோடி மக்கள், 79 சதவிகித படிப்பறிவு கொண்ட மாநிலம். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் குஜராத் இரண்டாவது மிகப்பெரிய தொழில்துறை வளர்ச்சி உள்ள மாநிலமாக உள்ளது. இந்திய ஜி.டி.பி-யில் அதிக பங்களிப்பு அளிக்கும் மாநிலங்களில் குஜராத்துக்கு நான்காவது இடம். தனிநபர் வருமானத்தில் இந்திய அளவில் குஜராத் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் தற்போது எதற்கு என்று யோசிக்கிறீர்களா?. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பிரம்மாஸ்திரங்களாக காங்கிரஸுக்கும், பிஜேபிக்கும் இத்தனை ஆண்டுகளாக தேர்தல் அறிக்கையும், தேசிய திட்டங்களுமே இருந்து வந்தன. இந்தியா ஒளிர்கிறது என்றார் வாஜ்பாய்.  வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவேன் என்றார் சோனியா, வென்றார் ஆனால், மன்மோகன் சிங்கை செயல் பிரதமராக்கினார். இந்த க்ளிஷேக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மோடி. வைப்ரன்ட் குஜராத் என்றார். குஜராத்தைப் போல் இந்தியாவை மாற்றுவேன் என்றார். இந்தியாவில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை மாற்றி குஜராத்போல் இந்தியாவை மோடி மாற்றுவார் என்று மக்கள் மனதில் பதிய வைத்தார். குஜராத் அரசியல்தான் இந்தியாவின் மத்திய அரசை முடிவு செய்தது. அந்த குஜராத்துக்கு இப்போது மீண்டும் தேர்தல். மோடி விட்டுச் சென்ற குஜராத் இன்னமும் வைப்ரன்டாகவே இருக்கிறதா? குஜராத் மாடல் என்ன ஆனது என்ற கேள்விகளையெல்லாம் தாங்கி குஜராத் 2017-ம் ஆண்டு தேர்தலை எதிர் கொள்ளப்போகிறது. 

மற்றொருபக்கம்... விவசாயிகளை குஜராத் அரசு கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்கிறார் ராகுல். ’குஜராத்தின் மகன் நான் அவர்கள் என்னை நிராகரிக்க மாட்டார்கள்’ என்கிறார் மோடி. இருகட்சிகளும்,  குஜராத் முதல்வர் சிம்மாசனத்துக்கான தங்களது வாய்ப்புக்காக இப்படி மாறி மாறி வழிதேடிக் கொண்டிருக்கின்றன. 

13 வருடங்களாக மோடியையும், 27 வருடங்களாக பி.ஜே.பியையும் விரும்பிய குஜராத் மக்களின் மனநிலையில் இப்போது மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பில் தீவிரமாக களமிறங்கி வேலைசெய்கிறது காங்கிரஸ். மோடிக்கு இன்னமும் குஜராத் செல்வாக்கான மாநிலம் தான் என்று நிரூபிக்க, பி.ஜே.பி தரப்பினர் குஜராத் முழுவதும் ’நேரு குடும்பம் ஆன்டி குஜராத் கொள்கை உடையது’ என்று கூறிவருகிறார்கள்.

தண்ணீருக்காக நீண்ட தொலைவு பயணித்த மக்களுக்கு இன்று வீட்டில் தண்ணீர் கிடைத்திருக்கிறது என்று டெல்லியில் கெஜ்ரிவால் அடித்த அதே தேர்தல் ஸ்டன்ட்டை மக்கள் மனதில் வேரூன்ற வைக்கிறது பிஜேபி. பட்டேல் சமூகத்தை கவரும் நோக்கில் அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்தப் பட்டியலில் நிதின் பட்டேல் பெயர் பிரதானமாக இருக்கிறது. 

வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்?

பி.ஜே.பி வைப்ரன்ட் குஜராத்தின் 8-வது மாநாட்டை ஜனவரியில் நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் அவர்கள் குஜராத்துக்காக முன்னிறுத்தும் காரணங்கள்... 2000 படுக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை, இந்தியாவின் மொத்த கார்கோ வர்த்தகத்தில் 40 சதவிகிதம் குஜராத் வசமுள்ளது, இந்தியாவின் டாப் 15 சுகாதாரமான நகரங்களில் மூன்று குஜராத்தில் உள்ளது, இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் குஜராத்தில்தான் உள்ளது என்று பட்டியலிட்டு மார்தட்டிக் கொள்கிறது. 

வளர்ச்சி பற்றி அவர்கள் பட்டியலிடும் அதே சமயம் வழக்குகள் பற்றி மௌனம் காத்துவருகிறார்கள். வளர்ச்சியின் எண்ணிக்கை அளவுக்கு அங்கே பி.ஜே.பியினர் மீது வழக்குகளும் பதியப்பட்டிருக்கிறது.  அப்படி அண்மையான வழக்குகளில் ஒன்றான, அமித்ஷா மகன் ஜெய்ஷா வழக்கிலும், போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டிலும் பிரதமர் ஏன் மெளனம் காக்கிறார் என கேள்வி எழுப்புகிறார் ராகுல். பிரசாரத்தில் நிறைய கோவில்களுக்குச் செல்லும் ராகுலை இந்துவே இல்லை என விமர்சிக்கிறார் சுப்ரமணிய சுவாமி.  இப்படி குஜராத் தேர்தல் பரபரப்பின் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.

குஜராத்தில் வெற்றியை தக்க வைக்குமா பிஜேபி, ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து அடுத்த முறையும் பிரதமராகலாம் என்ற மோடியின் கனவை களைத்துப்பார்க்குமா காங்கிரஸ் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் குஜராத் தேர்தல் முடிவுகளில் இருக்கிறது. இரு கட்சிகளின் பலம், தேர்தலில் யார் கில்லி, வைப்ரன்ட் குஜராத் கைகொடுக்குமா, உண்மையிலேயே பி.ஜே.பி.யினர் சொல்வதுபோல் குஜராத் வைப்ரன்ட் தானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரும் பகுதிகளில் பார்ப்போம்.