Published:Updated:

வெள்ளக்காட்டின் நடுவே துளிர்த்த மனிதம்! - சென்னை மழையின் மீள்நினைவுகள்- தொடர் 4

வெள்ளக்காட்டின் நடுவே துளிர்த்த மனிதம்! -  சென்னை மழையின் மீள்நினைவுகள்- தொடர் 4
வெள்ளக்காட்டின் நடுவே துளிர்த்த மனிதம்! - சென்னை மழையின் மீள்நினைவுகள்- தொடர் 4

வெள்ளக்காடு தொடருக்கான இந்த அத்தியாயத்தை எழுதும் தருணத்தில் ஒகி புயலின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு மழைநாளில்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தவித்தோம். தத்தளித்தோம். ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டோம். மீண்டு எழுந்தோம்.

அந்த நாள்களை சென்னையில் இருந்த யார் ஒருவரும் மறக்கவே முடியாது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன் அறிவிப்பு இன்றி அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், சென்னை நகரமே வெள்ளக் காடானது. ஜாபர்கான் பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையோரம் இருக்கும் எம்.ஜி.ஆர் நகர் ஒரு தாழ்வான பகுதி. சேலத்தைச் சேர்ந்த, சென்னையில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் தமிழ் என்பவர் அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

இடுப்பளவு தண்ணீர்

2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அவருடைய அலுவலகத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழகத்தின் விழாகுறித்த செய்தியைச் சேகரிக்க வேண்டும் என்பதுதான். அதன்படி அவர் அந்த விழாவுக்குச் சென்றார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை அவரே சொல்கிறார்.”பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அடையாறு ஆற்றில் வந்த வெள்ளம், மதிய நேரத்தில் வீதிகளில் புக ஆரம்பித்தது. மாலை 4 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, மண்டபம் இருந்த தெருவில் இடுப்பு வரை தண்ணீர் இருந்தது. என்னுடைய வண்டி வேறு பஞ்சர் ஆகி இருந்தது. வெள்ளநீரில் மழையில் நனைந்தபடி வண்டியைத் தள்ளிக் கொண்டே அசோக் நகர் நோக்கிச் சென்றேன். பெரும்பாலானோர் குடையைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மெதுவாக நடந்தபடி சென்றனர். வாகனத்தைத் தள்ளிக்கொண்டு சென்றதால், விரைவாக நடக்க முடியவில்லை. நேரம் செல்ல, செல்ல தண்ணீர் மட்டம் அதிகரித்தது. கேமராவில் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என்று பக்கத்தில் வந்தவரிடம் கேமராவை கொடுத்தேன். ஒரு வழியாக மேட்டுப்பாளையம் வந்தபோது, அங்கிருக்கும் மேட்டுப் பகுதியில் கொஞ்சநேரம் இளைப்பாறினேன். அங்கு இருந்தபடி அலுவலகத்துக்கு மொபைல் போனில் தகவல் சொல்லிவிட்டு, மீண்டும் வெள்ளத்தில் வண்டியைத் தள்ளிக்கொண்டு அசோக்நகர் வரை சென்றுவிட்டேன். மேற்கு மாம்பலத்தில் இருந்து அசோக் நகர் வருவதற்கு மூன்று மணி நேரம் ஆகி இருந்தது. மின்சாரம் இல்லாததால், எங்கு பார்த்தாலும் இருட்டாக இருந்தது. ஆற்றுக்குள் நடந்து செல்வதுபோல இருந்தது. எங்கே பள்ளம் இருக்கிறது. எங்கே மேடு இருக்கிறது என்று தெரியவில்லை. எதிரில் வரும் வண்டிகள் தெரியவில்லை.

இப்படியான சூழலில், காசி தியேட்டரின் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் தங்கி இருக்கும் அறைக்கு வந்தேன். வீதியில் இடுப்பளவு தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. இரண்டாவது மாடியில் இருந்த அறையில் தங்கி இருந்ததால் அன்றைக்கு அதுவரை தண்ணீர் ஏதும் வரவில்லை. இரவு 11.30-க்கு மழை அதிகரித்தது. அதிகாலை மூன்று மணிக்கு முதல் தளம் வரை தண்ணீர் வந்துவிட்டது என கூக்குரல்கள் கேட்டன. காலை 5 மணிக்கு ஆற்றுக்குள் இருப்பதுபோல, உஸ், உஸ் என்ற சத்தத்துடன் வெள்ளநீர் வீதியிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து போனது. இரவு முழுவதும் தெருவில் இருந்த யாரும் தூங்கியதாகத் தெரியவில்லை. விடிய, விடிய தூங்காமல் விழித்திருந்தோம். ஒரு கட்டத்துக்கு மேல் மொபைல் போன் டவர் கிடைக்கவில்லை. காலையில், நான் தங்கியிருந்த கட்டடத்தில் ஒருவரிடம் இருந்த ஒரே ஒரு ஒரு லேண்ட் லைன் மட்டும் இயக்கத்தில் இருந்தது. அதில் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள், வந்து, டியூப்பை படகாக உபயோகித்து பதினைந்து பேர் வரை மீட்டனர். கயறை டியூப்பில் இணைத்து எங்களை மீட்டுச் சென்றனர். தண்ணீருக்குள் விழுந்து கிடக்கும் வாகனங்களில் இடித்துக்கொண்டுதான் செல்ல முடிந்தது. அதற்கே அவர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. மேட்டுப்பகுதியில் எங்களைக் கொண்டு போய்விட்டனர்.

அடையாறு வெள்ளத்தில்...

எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் சூளைப்பள்ளம் அதன் அருகில் இருக்கும் காசி தியேட்டர் அருகே என ஆயிரக்கணக்கானோர் மாடிகளில், நின்றபடி உதவிக்கு அழைத்துக்கொண்டிருந்தனர்.

காசி தியேட்டர் அருகே நூறடி சாலையில் இருக்கும் மேம்பாலம், அடையாறு ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. ஆற்றின் அந்தபக்கம் போக முடியவில்லை. அங்கிருப்பவர்கள் இங்கும் வர முடியவில்லை. ஆற்றின் நீர் மட்டம் நேரம் செல்ல, செல்ல அதிகரித்தது. ஆற்றில் இறந்து போன நாய், பூனைகள் எல்லாம் மிதந்து சென்றன. இந்த வெள்ளத்தின் சீற்றம் அசோக் நகர் வரை இருந்தது. அசோக் பில்லர் அருகே இருந்தவர்களை மீட்க, நூறடி சாலையின் இருபுறம் கயிறு கட்டி அதைப் பிடித்துக்கொண்டு செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தினர். அந்த கயிறைப் பிடித்துக்கொண்டுதான். ஒவ்வொருவராகக் கடந்துசென்றனர். கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் பிடிவிலக, அவரை வெள்ளம் அடித்துக்கொண்டு உதயம் தியேட்டர் வரை சென்றது. அவரை சிலர் மீட்டனர்.

அந்த சமயத்தில் பால் கிடைக்காமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்திலும் சிலர், ஒரு லிட்டர் பாக்கெட் பால் முன்னூறு ரூபாய் வரை விற்பனை செய்தனர். ஒரு தீப்பெட்டியை 75 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு கடையில் கடலை மிட்டாயைக் கூட அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர். இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கடலை மிட்டாய் விலையைக் குறைத்தனர். இதற்கு மத்தியில் அங்கிருந்த டாஸ்மாக் கடையை திறக்கச் சொல்லி சிலர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

கதறிய பெண்

சூளைப்பள்ளம், பர்மா காலனி பகுதியில் நூற்றுக்கணக்கானோர் பசியோடு தவித்தனர். காலையில் சாப்பிடாததால், மதியம் பசிக்கத் தொடங்கியது. எங்கு சென்று சாப்பிடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனக்கு மட்டும் இல்லை. அங்கிருந்த யாருக்குமே சாப்பாடு கிடைக்கவில்லை. அப்போது ஒரு வயதான பெண், தன் வயிற்றில் அடித்துக்கொண்டு கதறியபடியே ஓடி வருகிறார். அவர், கதறலுக்கு இடையே இந்தத் தகவலைச் சொல்கிறார். கர்ப்பிணி பெண் ஒருவர் தவித்துக்கொண்டிருக்கிறார். இப்பவோ, அப்பவோ பிரசவம் நடக்கக் கூடிய நிலையில் வயிறு வலியால் துடிக்கிறார். பனிக்குடம் உடைந்துவிட்டது. என்ன ஆச்சுன்னே தெரியல அவரை யாராவது காப்பாத்துங்கய்யா என்று கதறுகிறார். உடனே அந்தப் பகுதியை நோக்கி சிலர் காப்பாற்ற ஓடுகின்றனர்.

ஊரே காலி செய்துகொண்டு போவது போல குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு, உடமைகளைச் சுமந்துகொண்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் கண்களில் வேதனையும், பசியும் தெரிகிறது. எல்லோருமே நிராதரவாக நிற்கிறார்கள். அந்தச் சூழலில் அங்கிருந்த ஒருவர், ”டேய் இம்மா நேரம் இன்னாடா பண்றீங்க, பண்ணாடைகளா போங்கடா அங்க போய் அந்த வீட்டுல பெருசு ஒன்னு தவிச்சுக்கினு இருக்கு தூக்கிட்டு வாங்கடா” என்று விரட்டுகிறார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் அவர் உத்தரவிட்டபடி முதியவரைத் தூக்கி வந்து காப்பாற்றுகின்றனர். அந்த நபர் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்துவருகிறார். அவர் மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆம் அவர் ஒரு ரவுடி. அவரை இதற்கு முன் அந்த ஏரியாவில் பல முறை பார்த்திருக்கிறேன். அவரைக் கண்டதும் எல்லோரும் நடுங்கியபடி ஓடி ஒளிவார்கள். 2015 மாமழை அந்த ரவுடியையும் ஈரம் உள்ள மனித நேயராக மாற்றி இருக்கிறது என்று நான் நினைத்துக்கொண்டேன். அவரும், அவருடைய சகாக்களும் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்களைக் காப்பாற்றினர். வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள், நூறடி சாலையில் இருபுறமும் போலீஸார் கட்டியிருந்த கயிறை பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர். அந்த சமயத்தில் கையில் குழந்தையுடன் வந்த இளம் பெண், கை நழுவி குழந்தையை கீழே போடப் போக, அந்த ரவுடி அந்தக் குழந்தையைப் பிடித்து, ஜாக்ரதையா போமே என்கிறார். அருகில் ஒருவரை கூப்பிட்டு, டேய் அந்தம்மாவை ஜாக்ரதையா கூட்டிட்டுப்போய் விட்டுட்டு வாடா என்கிறார். அந்தப் பகுதியில் அவரை அறிந்த பலர் இதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உணவு இன்றி, பசிக்கும் வயிரோடு, யாராவது உணவு தருவார்களா என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் என்ன செய்தார்கள். பத்திரிகையாளரின் அந்த அனுபவத்தை அடுத்த அத்தியாயத்திலும் தொடர்ந்து பார்க்கலாம்....