Published:Updated:

அக். 28 ல் மத்திய அமைச்சரவை மாற்றம்: எஸ். எம். கிருஷ்ணா விடுவிக்கப்படுகிறார்

விகடன் விமர்சனக்குழு
அக். 28 ல் மத்திய அமைச்சரவை மாற்றம்: எஸ். எம். கிருஷ்ணா விடுவிக்கப்படுகிறார்
அக். 28 ல் மத்திய அமைச்சரவை மாற்றம்: எஸ். எம். கிருஷ்ணா விடுவிக்கப்படுகிறார்
அக். 28 ல் மத்திய அமைச்சரவை மாற்றம்: எஸ். எம். கிருஷ்ணா விடுவிக்கப்படுகிறார்

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை வருகிற 28 ம் தேதியன்று காலை  மாற்றியமைக்கப்பட இருப்பதாக  என டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.  கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு,அவர்கள் கட்சிப்  பணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் காங்கிரஸ்  பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட சில இளைய புதுமுகங்கள் அமைச்சரவையில்  இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 17 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை, ராகுல் சந்தித்துப் பேசினார்.  அப்போது, அமைச்சரவையில் சேர அவர் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், ஊரக  வளர்ச்சித் துறை போன்ற மக்களுடன் நேரடித் தொடர்புடைய துறையில் சேர அவர்  விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே பொதுச் செயலாளராக உள்ள ராகுல் காந்தியை கட்சியின் செயல்  தலைவராக நியமிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட இளைய  அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சர்களாகவோ அல்லது தனிப் பொறுப்புடன் கூடிய  இணை அமைச்சர்களாகவோ பதவி உயர்வு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு  வருகிறது.

மேலும், ராகுல் காந்திக்கு நெருக்கமாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாகூர்  மற்றும் மீனாட்சி நடராஜன் உள்ளிட்ட புதுமுகங்கள் அமைச்சரவையில்  இடம்பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியை நேற்று  சந்தித்துப் பேசினார்.

##~~##
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், மத்திய  அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றம், ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி  வழங்கப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று  கருணாநிதியை நாராயணசாமி வலியுறுத்தியதாகவும் ஆனால், அதற்கு கருணாநிதி  திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் மத்திய தகவல் துறை இணையமைச்சராக உள்ள ஜெகத்ரட்சகன் இலாகாவை  மட்டும் மாற்றுவதற்கு கருணாநிதி சம்மதம் தெரிவித்து உள்ளார். வேறு நல்ல  இலாகாவை அவருக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கேட்டுக் கொண்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.