Published:Updated:

சீருடை பணியாளர்களுக்கு 2673 அடுக்குமாடி வீடுகள்: ஜெயலலிதா அடிக்கல்!

விகடன் விமர்சனக்குழு
சீருடை பணியாளர்களுக்கு 2673 அடுக்குமாடி வீடுகள்: ஜெயலலிதா அடிக்கல்!

சென்னை:சீருடை பணியாளர்களுக்கு 2673 அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டத்திற்கு  முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

வண்டலூர் அருகே காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகிய சீருடைப்  பணியாளர்களுக்கு ரூ.455 கோடி செலவில் 2,673 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட  உள்ளது.

இந்த  திட்டத்திற்காக சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள மேலக்  கோட்டையூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 47.60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.  இந்த இடம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில்  8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இந்ததிட்டத்தின் கீழ், ரூ.455 கோடி  செலவில் 2,673 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதன்மூலம் காவலர்கள்,தலைமை காவலர்கள்,தீயணைப்பவர்கள்,உதவி  தீயணைப்பவர்கள்,சிறைக் காவலர்கள்,தலைமை சிறைக்காவலர்கள் 1,317 பேர்களும்,  சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், உதவி  கோட்ட தீயணைப்பு அதிகாரிகள், உதவி சிறை அதிகாரிகள் 1,190 பேர்களும்,  போலீஸ் டி.எஸ்.பி.க்கள், கோட்ட தீயணைப்பு அதிகாரிகள், சிறை அதிகாரிகள் 166  பேர்களும் பயன்பெறுவார்கள்.

##~~##
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக்கழகம் மூலம் நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின்  மாதிரியை ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் கடந்த 4-ம் தேதி பார்வையிட்டார்.  அப்போது,இந்த திட்டத்தை ஓராண்டு காலத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்றும்,  கூடுதல் வசதிகளாக பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம்,விளையாட்டு மைதானம்,  அங்காடி வளாகம்,கேண்டீன், புற நோயாளி மருத்துவமனை போன்ற வசதிகளையும்  ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
இந்நிலையில் சீருடை பணியாளர்களுக்கான 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்திற்கான  அடிக்கல் நாட்டுவிழா மேலக் கோட்டையூரில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.  இதில் ஜெயலலிதா  கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதோடு, வீடு ஒதுக்கீட்டு  ஆணைகள், காவலர் குடும்பங்களின் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு உயர்   கல்வித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.
விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின்  பிரதிநிதிகள்  மற்றும் தமிழக அரசின் உள்துறை முதன்மைச்  செயலாளர்  ஆர்.ராஜகோபால், போலீஸ் டி.ஜி.பி. கே.ராமானுஜம் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.