Published:Updated:

`ஆர்.கே.நகரில் தனக்கு ஓட்டு விழுமா..?' விஷால் எடுத்த ரகசிய சர்வே #VikatanExclusive

`ஆர்.கே.நகரில் தனக்கு ஓட்டு விழுமா..?' விஷால் எடுத்த ரகசிய சர்வே  #VikatanExclusive
`ஆர்.கே.நகரில் தனக்கு ஓட்டு விழுமா..?' விஷால் எடுத்த ரகசிய சர்வே #VikatanExclusive

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் சுயேட்சை வேட்பாளராக நிற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா,  விஷாலுக்கு திடீரென இடைத்தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது அல்லது இது அத்தனையும் வதந்தியா? 

அதற்கு முன் தென்னிந்திய நடிகர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் ஏன் போட்டியிட்டார் என்று தெரிந்தால்தான் இந்தக் கேள்விக்கும் விடை காண முடியும். 

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி அண்ட் கோ... சில காரணங்களால் விஷாலை தொடர்ந்து சீண்டிவந்தார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் நடிகர் தேர்தலில் விஷால் ஓர் அணியை உருவாக்கி நின்று வென்றார். அதேபோலத்தான் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் தாணு, சங்கத்திலிருந்து விஷாலை நீக்கியது பெரும் பிரச்னையானது. இது வழக்காகத் தொடரப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. அதன்பின் வந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றும் வென்றார் விஷால். இப்படி ஒவ்வொரு முறையும் விஷால் சீண்டப்பட்டதால்தான்... எந்தத் தேர்தலானாலும் நிற்க வேண்டும். அதை வென்று காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தார். அப்படித்தான் இந்த முறை தேர்தல் அரசியலுக்குள் நுழையலாமா என்ற எண்ணத்தை விஷாலிடம் விதைத்திருக்கிறது பா.ஜ.க. 

விஷாலை சீண்டிய பா.ஜ.க : 

விஜய் ஹீரோவாக நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் வந்த ஜி.எஸ்.டி வரி குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அக்கட்சியின் தேசியச் செயலாளரார் ஹெச்.ராஜா எனப் பலரும் நிர்பந்தம் செய்தனர். இதற்கு திரைப்படத் துறையை சேர்ந்த பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விஷாலும் கடுமையாக எதிர்த்தார். மேலும், ‘மெர்சல்’ திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாகக் கூறிய பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விஷால் தெரிவித்திருந்தார். 

இந்த நேரத்தில்தான்... விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. 'இந்தச் சோதனையில் உள்நோக்கம் இருந்தால் சந்திக்கத் தயார்' என்றும் விஷால் அப்போதே நிருபர்களிடம் கூறியிருந்தார். ஆனால், விஷாலை மிரட்டுவதற்காகவே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று திரைப்படத் துறையினர் குற்றம்சாட்டினார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிற்கலாம் என்ற யோசனை அவருக்கு வந்திருக்கிறது. 

ரகசிய சர்வே : 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பதைதான் அரசியல் கட்சிகள் உள்பட மொத்த தமிழக மக்களும் கவனித்து வருகிறார்கள். இந்த இடைத்தேர்தலில் நின்றால் தன் பக்கம் நிச்சயம் கவனம் திரும்பும் என விஷால் நினைக்கிறார். பா.ஜ.க-வை விட தன்னால் அதிக வாக்குகள் வாங்க முடியும் என உறுதியாக நம்புகிறார். இதற்காக நான்கு பேர் கொண்ட குழு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே, இந்தத் தொகுதியில் என்னென்ன பிரச்னை, மக்களுக்குத் தேவை என்ன என்பதை ரகசியமாக சர்வே எடுத்திருக்கிறார்கள். இன்னும் எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். 

தற்போது தி.மு.க சார்பில் மருது கணேஷ், அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரன் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். முக்கிய வேட்பாளர்களான இவர்களது ப்ளஸ் மற்றும் மைனஸ் என்னென்ன,  இவர்களை எதிர்த்து விஷால் நின்றால் வாக்குகளின் அடிப்படையில் என்ன மாற்றம் நிகழும். மக்கள் செல்வாக்கு விஷாலுக்குக் கிடைக்குமா என்பது குறித்து விஷாலின் ஒரு குழு விரிவாக ஆராய்ந்து வருகிறது. 

இந்த இடைத்தேர்தலில் விஷால் நிற்க ஆர்வம் காட்டுவதாகவும், அவருடன் இருப்பவர்கள் சிலர்தான் அரசியல் தற்போது வேண்டாம் என விஷாலிடம் சொல்லி வருகிறார்கள். 

கமல், விஷாலை இயக்குகிறாரா? 

கமலுக்கும் விஷாலுக்கும் இந்த இடைத்தேர்தலில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் விஷால் தரப்பினர். இது முழுக்க முழுக்க விஷாலின் தனிப்பட்ட முடிவு அவர் பின்னாலிருந்து யாரும் இயக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இன்னும் ஓரிரு நாள்களில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பார் விஷால். இதை அறியாத விஷால் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிலர் மறுத்திருக்கிறார்கள். ஆனால், விஷால் இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. 

விஷால் ஆனந்த விகடன் இதழுக்குக் கொடுத்த பேட்டியிலும், ‘‘உங்களுக்கு அரசியல் ஆர்வம் உண்டா?’’ என்ற கேள்விக்கு... ‘‘வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லிட்டு இருக்கிறவங்க வருவாங்களா மாட்டாங்களானு எனக்குத் தெரியலை. ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்றேன். எதிர்காலத்தில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் மேலேயே மக்களுக்கு வெறுப்பு வரும். ஆமாம் இப்போ அரசியல்வாதிகள் அவங்க தலையில மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இனி 500 ரூபாய், டி.வி, மிக்ஸி, கிரைண்டர் பருப்பு வேகாது. இப்போ என் விஷயத்துக்கு வர்றேன். நேர்மையா சொல்லணும்னா, எனக்கு நல்ல படங்கள் இப்போ வந்துட்டு இருக்கு. அதன்மூலமா நல்ல வருமானம் வரும். செய்யணும்னு ஆசைப்படுற சமூக வேலைகள் நிறைய இருக்கு. செய்வேன். மாற்றம் ஏற்பட வேண்டும்னு சூழ்நிலை வரும்போது அந்த மாற்றத்தை ஏற்படுத்த அணிலாகவோ, பாலமாகவோ கண்டிப்பா இருப்பேன். பவருக்கு வந்தாதான், அதிகமா மக்களுக்கு நல்லது பண்ண முடியும்னு சூழ்நிலை இருந்தா, அதுதான் அரசியல்னா நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’’ என்றார். 

அரசியலுக்குள் வருவதற்கான காலம் இதுதான் என விஷால் நினைக்கிறார்.