Published:Updated:

`தூய்மை இந்தியா’ - ஐ.நா அறிக்கை பாகம் 3 - மேற்கு வங்கத்தின் குடிநீர் மாசுபாடு!

`தூய்மை இந்தியா’ - ஐ.நா அறிக்கை பாகம் 3 - மேற்கு வங்கத்தின் குடிநீர் மாசுபாடு!
`தூய்மை இந்தியா’ - ஐ.நா அறிக்கை பாகம் 3 - மேற்கு வங்கத்தின் குடிநீர் மாசுபாடு!

பாதுகாப்பான குடிநீர் வசதியை எப்போதும் பெற்றுக்கொள்வதற்கான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக இந்தியா பணியாற்றுகையில், இந்திய மக்கள் எந்தவகையில் குடிநீரைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை முன்னிலைப்படுத்த நான் விரும்புகிறேன். ஏனெனில், இவை, ’நிலைத்த வளர்ச்சி இலக்குகள்’எனும் அடிப்படையிலான தேவையிலிருந்து ரொம்ப தொலைவில் இருக்கிறது. இதன் தரமானது, குடியிருப்பிலேயே குடிநீர் கிடைக்கவேண்டும் என்கிறது. அதாவது பொதுக் குடிநீரானது பாதுகாப்பான சேவையாகக் கருதப்படவில்லை. இந்தக் கருத்தாக்கமானது, ஊரகங்களிலும் நகர்ப்புறத்திலும் தேவைப்படும்போதெல்லாம் தண்ணீர் தொடர்ச்சியாகக் கிடைக்கவேண்டும் எனக் கூறுகிறது.

மேலும், பாதுகாப்பான சேவை என்பது கழிவுகளால் மாசுபடுத்தப்படாமலும் ஆர்சனிக் மற்றும் ஃபுளூரைடு நச்சுவரம்புக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும். எனவே, இது தொடர்பான எல்லா மட்டங்களிலும் உள்ள அனைத்து அமைப்புகளும் குடிநீரின் தரத்தைக் கண்காணிக்கவும் கணக்கெடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்; இத்துடன் வேதியியல் நுண்ணுயிரியியல் மாசுபாட்டையும் நீக்கச்செய்யவேண்டும். 

2015-ல், இந்திய மக்கள்தொகையில் 92% பேர் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதியைப் பெறுவதாகப் புள்ளிவிவரம் சொல்லப்பட்டது. ஆனால், நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளின் அடிப்படையை வைத்து மதிப்பிடுவோமேயானால், இந்த அளவு எதிர்பாராதவகையில் குறைகிறது. இதன்படி ஊர்ப்புற மக்கள்தொகையில் 49% பேருக்குத் தரமான குடிநீர் கிடைக்கிறது. நகர்ப்புற மக்கள்தொகையில் 73% பேர் குடியிருக்கும் இடத்தில் குடிநீரைப் பெறமுடிகிறது; 86% பேர் தேவைப்படும்போது குடிநீரைப் பெறமுடிகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கின்படி குடிநீர்த் தரம் பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. 

குடிநீரின் தரம் குறித்து மிக அதிகமாக அக்கறைப்படவேண்டியதாகவே உள்ளது. நாட்டில் ஊரகப் பகுதிகளில் 85% அளவுக்கும், நகர்ப்புறத்தில் பாதியும் நிலத்தடி நீர்தான் குடிநீராக இருக்கிறது. ஆர்சனிக், ஃபுளூரைடு மற்றும் நோய்க்கிருமிகளால் குடிநீர் மாசுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் என்பது மிக முக்கியமானது. மேற்குவங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தகவலின்படி, அந்த மாநிலத்தின் 38% நிலத்தடிநீரானது ஆர்சனிக் மற்றும் ஃபுளூரைடு ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இது அங்கு மிகப்பெரிய பிரச்னை ஆகும். ஏனெனில், அங்குள்ள 84% கிராமப்புற மக்கள், குடிநீருக்கு நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறார்கள். 

வேதிப்பொருள் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அவை முற்றிலுமாகப் பிரச்னையைத் தீர்த்துவிடவில்லை; கவலையளிக்கும்வகையில் அது தொடரவே செய்கிறது. உதாரணமாக, வங்காளதேச எல்லையை ஒட்டி கோபிந்தபூர் கிராமத்தில் ஒருவரைச் சந்தித்தேன். நாள்பட்ட ஆர்சனிக்காசிஸ் நோயால் அவருக்குத் தோலில் பல இடங்களில் கடுமையான பாதிப்பைப் பார்க்கமுடிந்தது. ஆர்சனிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட அவருடைய சகோதாரர் இறந்தேபோய்விட்டார்; அவருடைய குடும்பத்தில் மற்றவர்களுக்கும் இந்தப் பாதிப்பு காணப்பட்டது. 

குடிநீர் தொடர்பான இன்னொரு முக்கியப் பிரச்னை, மலக்கழிவு கலப்பது. துப்புரவு வசதிக்கான கட்டுப்பாடுகளைக் கணக்கில்கொண்டால், நாட்டின் நிலமேல் ஓடுநீரைப் பொறுத்தவரை, கழிவுநீர் மேலாண்மையில் உள்ள குறைபாடுகள், பயன்படுத்தும் குடிநீரின் நுண்ணுயிரியல் தரத்துக்கு ஆபத்தாக அமைகின்றன. நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்காக உலக சுகாதார நிறுவனமும் குழந்தைகளுக்கான ஐ.நா. நிதியம் - யுனிசெஃப் அமைப்பும் சேர்ந்த கூட்டுக் கண்காணிப்புத் திட்டத்தின் தகவல்படி, ஊரகப் பகுதிக் குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு மாசுபடுத்தப்பட்டதாக உள்ளது.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட குடிநீர்த் தர ஆய்வுகளில் நுண்ணுயிரியின் அளவு குறித்து சந்தேகத்துக்குரிய முடிவுகளே கிடைத்துள்ளன. நிறைய குடியிருப்புகளில் குடிநீரைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது, சுகாதாரக் கேட்டுக்கு ஆளாக்குகிறது என்பதும் இன்னொரு முக்கியமான அம்சம். 

பாதுகாப்பான சேவை என்பதன் குறியீட்டுக்கான வரையறையில் குடிநீரை வாங்கும்வசதியும் சேர்க்கப்படவேண்டும் என்று எனக்குப் படுகிறது. பொதுவாக, இந்தியாவில் நகர்ப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது உட்பட பொதுவாக மக்களுக்கான குடிநீர் சேவையானது, ஒப்பீட்டளவில் வாங்கக்கூடியதாக இருக்கிறது. முறையான குடிநீர் வழங்கலைவிட முறையற்றவகையில் அதிக விலைக்குக் குடிநீரை விற்பவர்களை நம்பியிருக்கும் நிலைமையை பல இடங்களில் கண்ணாரக் கண்டேன். டெல்லியின் ஒரு மறுகுடியேற்றப் பகுதியில், டெல்லி குடிநீர் வாரியத்திடமிருந்து குடிநீரைப் பெறமுடியாமல், ’தண்ணீர் ஏ.டி.எம்.’களையே மக்கள் நம்பியாகவேண்டிய நிலைமை.. அதாவது தரமான குடிநீரைப் பெறுவதற்கு அவர்கள் போதுமான பணத்தை வைத்திருக்கவேண்டும். 

கொல்கத்தாவிலோ பொதுக் குழாயில் இலவசமாகத் தண்ணீரைப் பிடித்துவிட்டு, அதையே குடிசைப்பகுதி மக்களிடம் லிட்டருக்குத் தலா ஒரு ரூபாய்க்கு வியாபாரிகள் விற்கின்றனர். மும்பை துறைமுகப் பகுதியில் உள்ள கோலாபந்தர் மறுகுடியேற்றப் பகுதியில், ’தண்ணீர் மாஃபியா’ எனக் குறிப்பிடப்படும் சக்தி ஒன்று நகராட்சிக் குடிநீர் கட்டமைப்பிலிருந்து நீரை உறிஞ்சி, பாதுகாப்பற்ற முறையில் தனி விநியோகத்தைச் செய்துவருகிறது. நகராட்சி அதிகாரிகளோ அரசு அதிகாரிகளோ இப்படி ஒன்று இல்லவே இல்லை என மறுத்தாலும், மேல்நிலையாகச் செல்லும் குழாய்கள் துண்டிக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அது 7 ஆயிரம் குடியிருப்புகள், கழிவுக் குவியல்களின் வழியாகச் சென்றுகொண்டிருந்தது. 

குடிநீரும் துப்புரவும் கைகோர்த்ததைப்போல இருக்கவேண்டுமானால், மேம்படுத்தப்பட்ட குடிநீரும் துப்புரவு வசதியும் ஒன்றிணைந்ததாகக் கருதப்படவேண்டும். இந்த இரண்டு சேவைகளும் அதிக அளவில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. என் பயணத்தில், தண்ணீர்த் தட்டுப்பாடானது கழிப்பிடம் கட்டுவதற்கு முக்கியத் தடையாக இருக்கிறது; இதன் மூலம் திறந்தவெளிக் கழிப்புப் பழக்கத்தை மாற்றுவதும் சிக்கலாகிறது என்று நான் சந்தித்த அதிகம் பேர் கூறினார்கள். இந்திய அரசால் முன்னிலைப்படுத்தப்படும் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்படியான கழிப்பிடங்களில்- சிறியவற்றில்கூட- தண்ணீர் அத்தியாவசியமாக இருக்கிறது. நிறைய பேருக்குக் கூடுதல் தண்ணீர் தேவைப்படுவது அவர்களின் நேரத்தையும் வேலையையும் கெடுக்கும் தொந்தரவாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில், தண்ணீருக்கான உரிமையும் துப்புரவுக்கான உரிமையும் மாறுபட்டவையாக இருந்தாலும் ஒருங்கிணைக்கப்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். 

பாதிக்கப்படக்கூடிய சூழல்களில் இருப்போருக்குத் தரம்குறைந்த சேவைகள் 

எங்கே, ஏன் போதுமான குடிநீர், துப்புரவு வசதியைப் பெறுவதில் தரம்குறைகிறது எனப் பார்த்தோமானால், என்னுடைய ஆய்வில் பல காரணிகள் கிடைத்துள்ளன. அவையாவன: இயலாமை, பாலினம், சாதி, பழங்குடி, நகரம் அல்லது ஊரகம் எனக் குடியிருப்புப் பகுதி, மனையின் தன்மை குறிப்பாக நகரங்களில் அந்த இடம் முறையானதா அல்லது முறையற்ற குடியேற்றமா என்பது போன்றவை. இந்தக் காரணிகள் ஒருவருடைய நுகர்வின் மீது தாக்கம் ஏற்படுத்தும் தன்மைகள் மாறுபட்டவையாக இருக்கும். இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் சேர்ந்தபடி அமைந்துவிட்டால், விளைவு படுமோசமாக இருக்கும். உதாரணமாக, மாற்றுத்திறனாளிகள் துப்புரவுக் கட்டமைப்பைப் பெற்றுக்கொள்வதில் பரவலாக சிரமத்தை எதிர்நோக்கிவருகின்றனர்; இதுவே, பெண் மாற்றுத்திறனாளி என்றால் அவர்கள் அதிக துன்பத்தை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, மாதவிடாய் காலத்தைச் சமாளிக்கமுடியாத அளவுக்கே சமூக நிலை நிலவுகிறது. 

(தொடரும்) 

முந்தைய பகுதிகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்