Published:Updated:

அ.தி.மு.க-வை மிரட்ட தினகரன் தீட்டும் அதிரடித் திட்டம்! அதகளப்படும் ஆர்.கே.நகர் ! #RKNagarAtrocities

அ.தி.மு.க-வை மிரட்ட தினகரன் தீட்டும் அதிரடித் திட்டம்! அதகளப்படும் ஆர்.கே.நகர் ! #RKNagarAtrocities
அ.தி.மு.க-வை மிரட்ட தினகரன் தீட்டும் அதிரடித் திட்டம்! அதகளப்படும் ஆர்.கே.நகர் ! #RKNagarAtrocities

அ.தி.மு.க-வை மிரட்ட தினகரன் தீட்டும் அதிரடித் திட்டம்! அதகளப்படும் ஆர்.கே.நகர் ! #RKNagarAtrocities

ஆர்.கே. நகர் தேர்தலில் எங்கள் இலக்கு வெற்றி அல்ல... அ.தி.மு.க-வைத் தோற்கடிப்பதுதான்” என்று உத்வேகத்தோடு சொல்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் கிடைத்த உற்சாகத்தில் ஆர்.கே. நகர் தேர்தலில் உற்சாகமாகக் களம் இறங்குகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. இத்தனை நாள்கள் மூவர்ணக் கொடியையும் அ.தி.மு.க-வின் பெயரையும் பின்புலமாகக் கொண்டு அரசியல் செய்துவந்த டி.டி.வி தினகரன் கொடியையும் பயன்படுத்த முடியாமல், அ.தி.மு.க என்ற கட்சியும் இல்லாம் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், ஆர்.கே. நகரில் மனுத்தாக்கல் செய்வதற்கு இவர் கொடுத்த என்ட்ரியே அ.தி.மு.க-வை மிரட்டிப் பார்க்கும் வகையில் அமைந்துவிட்டது.

ஆர்.கே நகரில் வேட்புமனுத் தாக்கல்செய்ய தினகரன் முடிவு செய்தபோதே வேட்புமனுத் தாக்கலை அமர்களப்படுத்திவிட வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மதுசூதனனுக்குக் கூடும் கூட்டத்தைவிட தனக்குக் கூடுதல் கூட்டம் இருக்க வேண்டும் என்று தொகுதியின் பொறுப்பாளராக இருக்கும் வெற்றிவேலிடம் தினகரனும் சொல்லியுள்ளார். அதனால், 1-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்செய்த அன்று காலையில் இருந்தே தண்டையார் பேட்டையை தினகரன் ஆதரவாளர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் வீட்டுக்கு முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் வருகை தந்தபோது, சாலையில் நின்ற தினகரன் ஆதரவாளர்கள் “தினகரன் வாழ்க” என்று கோஷம் எழுப்பி எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தினார்கள். தினகரன் வேட்புமனுத் தாக்கல்செய்த அதே நேரம் அவருடைய மனைவி அனுராதா காளிகாம்பாள் ஆலயத்தில் தினகரன் பெயரில் சிறப்பு அபிஷேகத்தை செய்துகொண்டிருந்தார்.

அ.தி.மு.க-வினரைவிட தினகரன் ஆதரவாளர்களே வேட்புமனுத் தாக்கல் செய்த இடத்தில் குழுமி இருந்தது அ.தி.மு.க-வினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதே உற்சாகத்தோடு தேர்தல் பணியிலும் ஈடுபட தினகரன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

தினகரன் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஆர்.கே. நகரில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் பற்றி ஆலோசனை செய்துள்ளார்கள். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “அ.தி.மு.க-வின் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டது ஒருவகையில் நமக்கு சாதகம்தான். மதுசூதனனுக்கு எதிராகக் கட்சிக்குள்ளே அதிருப்தி அதிகம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் இருக்கும் நம்முடைய ஸ்லீப்பர் செல்களை வைத்து ஆர்.கே. நகரில் உள்ள முக்கிய நிர்வாகிகளை நம் பக்கம் வளைக்க வேண்டும்” என்று பேசப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த முறை தொப்பிச் சின்னத்தில் தினகரன் போட்டியிட்டார். தொப்பிச் சின்னத்தைக் காட்டித்தான் கரன்ஸிகளையும் தண்ணீராய் ஆர்.கே. நகரில் இறக்கினார்கள். எனவே, இந்த முறை எப்படியும் தொப்பிச் சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுவிட்டாலே பாதி கிணற்றைத் தாண்டிவிடலாம் என்று தினகரனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கொடுத்துள்ளார்கள். அ.தி.மு.க-வினர் இரட்டை இலையை எப்படி நம்புகிறார்களோ, அதேபோல் ஆர்.கே. நகரில் தொப்பிச் சின்னத்தை நாம் நம்பிக்கையோடு எதிர்கொள்ளலாம் என்றும் சொல்லியுள்ளார்கள்.

எடப்பாடி அணியினருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்த மறுதினமே ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சின்னத்தை முடக்க முடியவில்லை என்ற வருத்தம் தினகரன் அணியிடம் இருந்தாலும், வேறு ஒரு ரூபத்தில் மதுசூதனனுக்கு செக் வைக்க தினகரன் தரப்பு திட்டமிடுகிறது. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர் மதுசூதனன்தான் என்பதற்கு சான்றாக ‘பி’ பாரத்தில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால், அ.தி.மு.க சட்டப்படி பொதுச்செயலாளர் கையெழுத்திட்டால்தான் பி. பாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற பிரச்னையை வேட்புமனு பரிசீலனை செய்யும் தினத்தன்று கிளப்பத் தயாராகி வருகிறது தினகரன் தரப்பு. ஆனால், ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டாலே பி பாரம் செல்லும் என்று எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிவிட்டதாக எடப்பாடி தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும், தினகரன் தரப்பின் ஒரே அஜெண்டா தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ அல்ல... அ.தி.மு.க-வைவிட கூடுதல் வாக்குகள் வாங்க வேண்டும். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயங்கவேண்டாம் என்ற முடிவில் உள்ளது. ஆர்.கே. நகரில் தேர்தல் பணியாற்ற தமிழகம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை சென்னை வரச்சொல்லியுள்ளார் தினகரன். வரும் 3-ம் தேதி அன்று தினகரன் தரப்பின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற உள்ளது. அதில் மேலும் சில முடிவுகளை எடுக்க உள்ளார்கள். அது அ.தி.மு.க-வை மிரட்டும் வகையில் இருக்கும் என்று கண்சிமிட்டுகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு