Published:Updated:

2013 ம் ஆண்டுக்குள் மின்வெட்டு முழுவதும் நீங்கிவிடும்:ஜெயலலிதா

2013 ம் ஆண்டுக்குள் மின்வெட்டு முழுவதும் நீங்கிவிடும்:ஜெயலலிதா
2013 ம் ஆண்டுக்குள் மின்வெட்டு முழுவதும் நீங்கிவிடும்:ஜெயலலிதா
2013 ம் ஆண்டுக்குள் மின்வெட்டு முழுவதும் நீங்கிவிடும்:ஜெயலலிதா

சென்னை:  தமிழக மின்வெட்டு குறித்து தொலைக்காட்சியில் இன்று விளக்கம் அளித்து உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா,வருகிற நவம்பர் மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மின்வெட்டு நிலைமை சீரடைந்துவிடும் என்றும், 2013 ம் ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு முற்றிலும் நீங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆற்றிய உரை வருமாறு:


அன்பார்ந்த தமிழக மக்களே,

மின்சாரத்தை,தட்டுப்பாடின்றி பெற முடியாமல் நீங்கள் எல்லாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.இது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு நானோ,எனது தலைமையிலான அரசோ,காரணமல்ல என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் மற்றும் அதைப் போக்குவதற்காக நான் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றி உங்களுடன் சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது முந்தைய ஆட்சிக் காலங்களில்,அதாவது 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்திலும்;மற்றும் 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக் காலத்திலும், மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல்,மின்சாரம் சீராக அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தது.

2006 ஆம் ஆண்டு நான் ஆட்சியை விட்டுச் சென்ற போது,தமிழ்நாடு மின்சாரத்தில் உபரி மாநிலமாகத்தான் இருந்தது.இது மட்டுமல்லாமல்,உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் வேறுமாநிலங்களுக்கு விற்கப்பட்டு,அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது.

2006-ல் ஆட்சிக்கு வந்தகருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி திமுக அரசு, நாங்கள் ஆரம்பித்து வைத்த புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான பணிகளை, அதே உத்வேகத்துடன் தொடர்ந்திருந்தால்,2006-2011 வரையிலான காலகட்டத்தில் பல புதிய மின் நிலையங்கள் செயல்படத் துவங்கியிருக்கும்.தமிழகத்திற்குத் தேவையான மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்திருக்கும்.ஆனால், இதைச் செய்ய முந்தைய
மைனாரிட்டி திமுக அரசு தவறிவிட்டது.

அதாவது, எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு,நாங்கள் தொடங்கி வைத்த புதிய மின் திட்டங்களுக்கான பணிகளை அதே வேகத்துடன் தொடராமல், வேண்டுமென்றே, கருணாநிதி தலைமையிலான முந்தைய மைனாரிட்டி திமுக அரசு மெத்தனமாக இருந்துவிட்டது.இது கருணாநிதியால் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட முதல் துரோகமாகும்.

2006 ஆம் ஆண்டு நான் ஆட்சியை விட்டுச் சென்ற போது, தமிழகத்தின் மின் நிறுவு திறன்,10,100 மெகாவாட்டாக இருந்தது.

2011-ல் மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது.நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள்.உங்கள் ஆதரவுடன் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை 2011 ஆம் ஆண்டு ஏற்றது.

40,375 கோடி ரூபாய் இழப்பு

##~~##
நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது,தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமை அதல பாதாளத்தில் இருந்தது.இதுவரை தமிழக அரசின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 40,375 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி, கடும் கடன் சுமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தை முந்தைய மைனாரிட்டி திமுக அரசு ஆளாக்கி விட்டுச் சென்றது.
இதன் காரணமாக, இனிமேல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு,கடன் எதுவும் கொடுக்கக் கூடாது என வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் நான் மீண்டும் முதலமைச்சரானேன்.நான்
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன்,தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமையை சீர் செய்வதற்குஏதுவாக,மிக இக்கட்டான பொருளாதார நெருக்கடியிலும் கூட, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தேவையான நிதியை தாராளமாக வழங்கி, தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை சீர் செய்ய பகீரத முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைவாக இருந்தால்,வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டினை போக்கலாமே என்று பலரும் ஆலோசனை கூறுகிறார்கள்.இதில் உள்ள நிலைமையை உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.
நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும்,தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்து இருப்பதை
அறிந்த நான்,வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன்.
முதற்கட்டமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும்,மின் தொடரமைப்பில் உள்ள நெருக்கடி காரணமாக,மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கியும் தமிழகத்திற்கு கொண்டு சேர்க்க வழியில்லாத நிலைதான் தற்போது உள்ளது.
அரிசி பற்றாக்குறை என்றால்,அரிசி மூட்டைகளை ரயில் மூலம் கொண்டு வரலாம். குடிநீர் பற்றாக்குறை என்றால்,குறிப்பிட்ட பகுதிகளுக்கு தண்ணீரை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு சென்று விநியோகிக்கலாம்.தேவைக்கேற்ப இவற்றை சேமித்தும் வைக்கலாம்.
ஆனால்,வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரத்தை கொண்டு வர வேண்டுமானால்,அதற்கு வழித்தடம், மின் தொடர் பாதை, அதாவது மின்சாரம் பாய்கின்ற பாதை தேவை.
அந்தப் பாதை போதுமான அளவுக்கு இல்லை என்பதால்,குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தாலும், வழித்தடம் சிறிதாக உள்ளதால், 235 மெகாவாட் மின்சாரம் தான் கொண்டுவர முடிந்தது.அனைவரும் இதை சரியாகப் புரிந்துகொள்ள
வேண்டும்.

மத்திய அரசு புறக்கணிக்கிறது

இந்த மின் வழித்தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது.வட மாநிலங்களுக்கு எல்லாம் பெரிய அளவில்,போதுமான அளவுக்கு வழித்தடம் ஏற்படுத்திக் கொடுத்த மத்திய அரசு,தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டது.

கடந்த 2011 மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே,பாரதப் பிரதமரிடம் இங்கேஇருக்கின்ற கடுமையான மின் பற்றாக்குறை நிலைமையை எடுத்துச் சொல்லி, ஓராண்டு காலத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.திரும்பத் திரும்ப இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கேட்டுப் பார்த்தேன்.ஆனால், அதை மத்திய அரசு வழங்கவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களோ அல்லதுதமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய காங்கிரஸ் அமைச்சர்களோ இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்து,பிரதமரிடம் பேசி,இந்த மின்சாரத்தை வழங்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?

தமிழக மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் திமுக மத்திய மந்திரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், தங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இதையாவது செய்தார்களா? இதையாவது செய்யக் கூடாதா? ஆனால் செய்யவில்லையே!

திமுக அரசே காரணம்

இன்று தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்று குற்றம் சாட்டும் திமுக-காரர்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பாக 15 ஆண்டு காலமாக,மத்திய ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ள திமுகவினர்,தமிழ்நாட்டிற்காக மின்சாரத் துறையில், என்ன உதவி செய்தார்கள்? எதுவும் செய்யவில்லையே! இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தனை ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த திமுகவினர்,இதை எப்போதோ செய்து முடித்து இருக்க முடியும்.ஆனால், இதில் அவர்கள் துளியும் அக்கறை காட்டவில்லை.இதனால்தான், இன்று இந்த மின் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலைக்கு யார் காரணம்?காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும்,முந்தைய மைனாரிட்டி திமுக அரசும் தான் இதற்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

நாம் கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு வழங்கவில்லை.டெல்லி மாநிலம்,தனக்குத் தேவையில்லை என்று ஒப்படைத்திருக்கும் 1,721 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தேன்.ஆனால் அதற்கும் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. சரி, நாமே நம் மக்களுக்காக வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கலாம் என்று 1,100 மெகாவாட் அளவுக்கு, ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

ஆனால், மின் தொடர் பாதை நெருக்கடி காரணமாக வெறும் 85 மெகாவாட் அளவுக்கு தான் மின்சாரம் பெற முடிகிறது.இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு இப்போது புரிகிறதா?

இருப்பினும் இத்தனை சிரமங்கள்,முட்டுக்கட்டைகள்,சோதனைகள்,தடைக்கற்கள் இருந்தாலும்;மத்திய அரசின் ஒத்துழைப்பு எந்த வகையிலும் இல்லை என்றாலும்;என் மீது நம்பிக்கை வைத்து,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்திய உங்களை காப்பாற்ற வேண்டும்;உங்களின் மின் தேவையை நிறைவு செய்ய வேண்டும்; உங்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதற்காக,நான் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

2013 க்குள் மின்பற்றாக்குறை நீங்கும்

தற்போது,பல புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் வெவ்வேறு நிலைகளில்,வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.நவம்பர் மாதம் முதல் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் ஒவ்வொன்றாக செயல்படத் துவங்கும்.கடுமையான நிலையை எட்டியுள்ள மின்வெட்டு, இனி படிப்படியாக சீரடைந்து,நவம்பர் மாத இறுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2013 ஆம் ஆண்டு இறுதிக்குள், மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு நம்மை வஞ்சித்தாலும், உங்களின் துணையுடன்,எல்லாம் வல்ல இறைவனின் அருளால்,தமிழகத்தை இருள் சூழ்ந்த நிலையில் இருந்து மீட்டெடுப்பேன். ஒளிமயமான தமிழ்நாட்டை மீண்டும் காண்போம். மிக விரைவில் தமிழ்நாட்டு மக்களின் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு, மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக தமிழ்நாடு மறுபடியும் திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.