Published:Updated:

குஜராத் கள நிலவரம் - மோடி...பூகம்பத்தின் மீது கட்டப்பட்ட ஹீரோயிசம்! பகுதி 2 #GujaratElections2017

குஜராத் கள நிலவரம் - மோடி...பூகம்பத்தின் மீது கட்டப்பட்ட ஹீரோயிசம்! பகுதி 2 #GujaratElections2017
குஜராத் கள நிலவரம் - மோடி...பூகம்பத்தின் மீது கட்டப்பட்ட ஹீரோயிசம்! பகுதி 2 #GujaratElections2017

ந்தத் தொடரின் இரண்டாம் பகுதியைத் தொடங்குவதற்கு முன்பு நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறேன். வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் எழுதிய 'கஜினி முகம்மது சோமநாதா படையெடுப்பு - வரலாற்றின் பல குரல்கள்' என்னும் புத்தகம்தான் அது. புத்தகத்தின் ஓர் இடத்தில், ''சிக்கலான வரலாற்று நிகழ்வுகளில் ஒரு சம்பவம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நினைவுகூரப்படுவதில் அரசியல் செயல்படுவதுபோலவே, அந்தச் சம்பவம் தொடர்பான மற்ற அம்சங்களை மறப்பதிலும் அரசியல் செயல்படுகிறது'' என்று குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர். 

அதாவது, கஜினி முகம்மது ஏன் சோமநாதா ஆலயத்தின் மீது படையெடுத்தார்? இந்துக்களின் விக்கிரக வழிபாடு பிடிக்காததினாலா அல்லது அரேபியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 'மனத்' என்னும் தெய்வம் அங்கு வழிபடப்பட்டதினாலா அல்லது கொள்ளையில் கிடைக்கும் செல்வத்தின் காரணத்தினாலா அல்லது அரபு வணிகர்கள் மேற்க்கிந்திய எல்லை வழியாகக் குதிரை வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்கள். அது, கஜ்னவி என்னும் நகரின் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதியான குதிரை வணிகத்தைப் பாதித்துக் கொண்டிருந்தது (1960-க்கு முன்பு ஒருங்கிணைந்த மகாராஷ்டிர பிரதேசமாக இருந்தபோது இந்திய வணிக எல்லையாக அந்தப் பகுதி இருந்தது என முந்தையப் பகுதியில் குறிப்பிட்டு இருந்தோம்). அதைக் களைவதற்காக அவர் போர் செய்தாரா அல்லது மேலே சொன்ன அத்தனையுமே காரணமா? இப்படிச் சோமநாதா கோயில் படையெடுப்பின்மீது பல கோணங்களிலான காரணங்களை வரலாற்றுரீதியாக அலசுகிறார் ரொமிலா. கஜினி படையெடுத்தபோது, சோமநாதா உண்மையிலேயே கோயிலாக இருந்ததா என்ற கேள்வியையும் ஓர் இடத்தில் முன்வைத்து அந்தக் கேள்வி ஏன் எழுகிறது என்பது தொடர்பான ஆதாரங்களையும் முன்வைக்கிறார்.

தற்கால குஜராத் மாநிலத்தின் தேர்தல் களேபரச் சூழலை இப்போது கவனிப்போம். அண்மையில் சோமநாதா கோயிலுக்கு விசிட் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கிருந்த பதிவுப் புத்தகத்தில் தன்னை 'non-hindu' என்று குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. பி.ஜே.பி-யின் தேசியத் தகவல்தொடர்புத் துறைத் தலைவர் அமித் மாளவியா அதைப் பற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.'' 'கோயில் பதிவில் தன்னை இந்துமதம் அல்லாதவர்’ என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தனது தேர்தல் அஃபிடவிட்டுகளில் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறாரே? அப்படியென்றால், தங்களது கடவுள் நம்பிக்கை பற்றிய பொய்யான தகவல்களை ராகுல் காந்தி தரப்பினர் உருவாக்கி வருகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது முதல் பத்தியில் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆம், ‘சிக்கலான வரலாற்றில் ஒரு சம்பவம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நினைவுகூரப்படுவதில்தான் அரசியல் செயல்படுகிறது’.

''டீ விற்றவர் தலைவரான கதை!”

தேர்தல் பிரசாரத்துக்காகக் குஜராத் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ஒருவரின் பிறப்பும் குடும்ப வரலாறும், அவர் எழுதிய ஒரு வார்த்தையின் வழியாக விவாதத்துக்குள்ளாகும்போது 13 வருடங்களாக அந்த மாநிலத்தை ஆட்சி செய்து பின்னர் நாட்டின் பிரதமராக உருவான ஒருவரின் வரலாறு, குஜராத் தேர்தல் களநிலவரத்தைப் பற்றிப் பேசும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்றாகிறது. ஒரு சாதாரண டீ விற்பவர் எப்படி அரசியல் தலைவராக முடிந்தது, எப்படி முதலமைச்சரானார், எப்படி அவர் பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து அங்கே ஆட்சி செய்தார், மாநிலத்தில் அவர் கொடுத்த அந்த 'ஆட்சி மாதிரி’தான் அவரைத் நாட்டின் தலைவராக்கியதா என்பதைத் தேர்தல் நெருங்கும் இந்தச் சமயத்தில் பார்க்கவேண்டியது அவசியம். 

விதைகளில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யும் வணிகத்தைதான் குஜராத்தின் மோத்  சமுதாயம் மேற்கொண்டிருந்தது. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 'மோடி' என்று அழைக்கப்பட்டார்கள். பின்னாளில், எண்ணெய் மட்டுமல்லாமல் பல்வேறு வணிகங்களை அந்தச் சமுதாயத்தினர் மேற்கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவரான, தேநீர் விற்பனைக் கடை ஒன்றை நடத்திவந்த தாமோதர்தாஸ் மோடி என்பவருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர்தான் மோடி. தொடக்கத்தில் தன் தந்தையுடன் ‘ டீ’ விற்ற மோடிக்கு 1970-களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததன் வழியாகத்தான் அரசியல் பிரவேசத்துக்கான வாய்ப்பும் அமைந்தது. 70-களில், குறிப்பாக 1975 - 76 காலகட்டத்தில் குஜராத்தில் பாபுபாய் ஜஷ்பாய்கீழ் அமைந்த ஜனதா மோர்சா கட்சியின் ஆட்சியில்தான் அந்த மாநிலம் அதிகபட்சமாக 28 சதவிகிதம் மொத்த வளர்ச்சியை அடைந்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் குஜராத் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி இருந்தார் மோடி. அவரது முக்கியத்துவத்தை அறுதியிட்டுச் சொல்லவேண்டும் என்றால்,  அதே காலகட்டத்தில்தான் மத்தியில் இந்திரா காந்தி அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தது. அந்தச் சூழலில் ஆர்.எஸ்.எஸ் மறைந்திருக்கச் சொல்லி பணித்த தன்னுடைய முக்கியமான உறுப்பினர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.பிறகு 1985-ல் அதே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் பி.ஜே.பி-யில் சேர்த்துவிடப்பட்டது, அதற்கு அடுத்த 16 வருடங்களில் குஜராத் பி.ஜே.பி-யின் பொதுச் செயலாளர் ஆனது. பிறகு, 2001-ல் குஜராத்தில் அப்போது ஆட்சியில் முதல்வராக இருந்த கேஷுபாய் பட்டேலின் உடல்நலக் குறைவு காரணமாக முதல்வராக நியமிக்கப்பட்டார் மோடி. அதற்கடுத்து, 2002 முதல் மே 2014 வரை அந்த மாநிலத்தின் முதல்வராகத் தொடர்ந்து 13 வருடங்கள் பதவி வகித்தார்.

பூகம்பத்தின்மீது கட்டப்பட்ட ஹீரோயிஸம்!

இத்தனைக்கும் அதே காலகட்டத்தில்தான் அங்கே பெருங்கலவரமும் வெடித்தது, பி.ஜே.பி தரப்பின்மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால், கலவரத்துக்குப் பிறகான 2002-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அங்கே பி.ஜே.பி வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை 127... அதற்கடுத்து 2007 மற்றும் 2012-ம் வருடங்களில் பி.ஜே.பி வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை முறையே 117 மற்றும் 116. காங்கிரஸ் தரப்பு முறையே 59 மற்றும் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 

பெரும் வணிக மையமாக இருந்த குஜராத்தில் 2001-ல் ஏற்பட்ட பூகம்பத்தால், பொருளாதாரரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீட்டுக்கொண்டுவர அப்போது ஒரு தலைமைத் தேவையாக இருந்தது. கேஷுபாய் பட்டேலின் வயோதிகம் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. காங்கிரஸ் முன்னிறுத்திய அஸ்வின் மேத்தா மற்றும் சங்கர் சிங் வகேலா போன்றவர்களின் பிம்பம் அங்கே மக்களிடம் அவ்வளவு பிரபலமாகவும் இல்லை. இந்தச் சூழலில்தான் மோடி அந்த எதிர்பார்ப்பை நிரப்பத் தொடங்கினார். 2002-ம் வருடத் தேர்தல் சமயத்தில் ஓர் ஆங்கில இதழ் தனது கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகிறது, “மோடிக்கு பக்கபலமாக இருப்பது அவரது பேச்சுதான். 1990-களில் தேசிய அரசியலில் பலவகையில் பரிமளித்த பி.ஜே.பி-க்கு உறுதுணையாக இருந்தது அவர் எழுதிக்கொடுத்த வாசகங்கள்தான்'’ என்று குறிப்பிட்டிருந்தது.

 அந்த இதழ் குறிப்பிட்டிருந்ததுபோலவே பி.ஜே.பி-க்கான மோடியின் தேவை என்பது 90-களிலேயே உருவாகியிருந்தது. 2002-ம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின்போது, ‘அந்நிய தேசத்தைச் சேர்ந்த ஒருவரை நம் நாட்டின் மகளாக ஏற்றுக்கொண்ட மக்கள், இங்கேயே பிறந்து வளர்ந்த என்னைத் தங்களது மகனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்களா’ என்பது போன்ற உணர்வுமிக்க வாசகங்களைத் தனது பேச்சுகளில் பயன்படுத்தத் தொடங்கினார். வைப்ரண்ட் குஜராத் என்பதைவிட வைப்ரண்ட் மோடிதான் பி.ஜே.பி-யின் அத்தியாவசியமாக இருந்தது.

 இதோ 2017-ம் வருடத் தேர்தல்... ‘என்னை மகனாக ஏற்றுக்கொண்டவர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள்’ என தனது கட்சிக்காகக் குஜராத்தில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார் பிரதமரான மோடி. மகனாக அந்த மாநிலம் ஏற்றுக்கொண்டுவிட்டதா, அப்படி ஏற்றுக்கொள்ளும் வகையில் தனது பிறந்த மண்ணின் வளர்ச்சிக்கு உண்மையிலேயே உறுதுணையாக இருந்தாரா? 

(களம் விரியும்..)