Published:Updated:

பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த விஜயகாந்த்!

விகடன் விமர்சனக்குழு
 பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த விஜயகாந்த்!
பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த விஜயகாந்த்!
 பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த விஜயகாந்த்!

சென்னை: தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஜெயலலிதாவை சந்தித்து முதுகில்  குத்திய நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் தேமுதிக  தலைவர் விஜயகாந்த் கோபத்தில் பாய்ந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன் மற்றும்  தமிழ்   அழகன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் நேரில்    சந்தித்தனர்.அப்போது,அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரை தொடர்ந்து, தேமுதிக கட்சியை சேர்ந்த மைக்கேல்  ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர்   ஜெயலலிதாவை இன்று சந்தித்தனர்.இது விஜயகாந்திற்கு மேலும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை  விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று,  தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது  குறித்தும்,இன்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது குறித்தும் கேள்வி கேட்டனர்.

குறிப்பாக ஜெயா தொலைக்காட்சி நிருபரும், மூத்த பத்திரிகையாளருமான பாலு , "உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சரை சந்தித்து...” என்று கேள்வியை முடிக்கும் முன்பே,விஜயகாந்த் அவரை தரக்குறைவாக திட்டியதோடு, ஆவேசமாக பாலுவின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டார்.

உடனே  அருகில் இருந்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன், கையை ஒங்கிக்கொண்டு வந்து பத்திரிகையாளர் பாலுவை தாக்கி, கீழே தள்ளிவிட்டார்.

மீண்டும் பத்திரிகையாளர்கள், விஜயகாந்த் அவர்களிடம், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்று கேள்வி  கேட்க தொடங்கியவுடன், கோபமடைந்த விஜயகாந்த்." நாய்..நாய்களா...எங்க போனாலும் மைக்கை தூக்கிட்டு வந்துடுவீங்களா...?"என்று  ஒருமையில் பேசியதோடு,செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் கோபத்துடன்,"இதை அங்கு போய் கேளுங்கள்.தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை,டெங்கு காய்ச்சல் பரவுகிறது...  இதெல்லாம் உங்களுக்கு தெரிவில்லையா...?" என்று ஆவேசம் காட்டினார்.

இந்நிலையில்,மீண்டும் பத்திரிகையாளர் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை  சந்தித்ததை குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதனால் மேலும் ஆவேசம் அடைந்த  விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை நோக்கி,”ஏய் போடா...!” என்று ஒருமையில்  ஆவேசமாக பேசினார்.

இதனையடுத்து அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தை  சமாதானப்படுத்தினார். பின்னர் அவர்கள் விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றனர்.

பத்திரிகையாளர் சங்கம் இதற்கு கண்டனம்

இதனிடையே எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்தின் நடத்தை குறித்து பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ள நிலையில், சென்னை பத்திரிகையாளர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் பாலுவை தாக்கிய விஜயகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக,தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர் பாலு, மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.