Published:Updated:

மும்பை... லக்னோ...கொல்கத்தா நிலை! - ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? பாகம் 4

மும்பை... லக்னோ...கொல்கத்தா நிலை! - ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? பாகம் 4
மும்பை... லக்னோ...கொல்கத்தா நிலை! - ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? பாகம் 4

தூய்மை இந்தியா... இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு மட்டுமே குழாய் வழியாகத் தண்ணீர் கிடைக்கிறது என்கிறது ஓர் உலகளாவிய அறிக்கை. 67.5% மக்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் 31% பேரே குழாய் மூலம் தண்ணீர் பெறுகிறார்கள். அதாவது, 130 கோடி பேரில்  27 கோடி பேர். 2015-ல் குடியிருப்புகளில் தண்ணீர் கிடைக்கும் வசதியானது நகர்ப்புறத்தில் 73% ஆகவும் ஊரகப்பகுதிகளில் 49% ஆகவும் இருந்தது. ஊரகப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் பெறமுடியாமல் இருப்பதால் அதை எடுத்துவருவதற்காக பெண்களும் குழந்தைகளும் மற்றவர்களைவிட அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனர்.

நிலமேல் ஓடுநீரோ, ஆழ்துளைக்குழாயோ குழாய்க்கிணறோ பல இடங்களில் பொதுத்தாங்கியோ நீர்த்தொட்டியோ என பலவாறு அவர்கள் அல்லல்படுகின்றனர். என்னுடன் உரையாடிய பலரும் வலியுறுத்திக் கூறியதைப் போல, குழந்தைகளே இதற்கு அதிக விலை தரவேண்டியவர்களாக இருக்கின்றனர். பள்ளிக்குப் போகவிடாமல் அவர்களின் நேரத்தை வீணடிக்கிறது; பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் சமவாய்ப்பு உரிமைகளைத் தடுக்கிறது. மேலும் பெண்களுக்கு இதனால் கூடுதல் தொந்தரவுகள் ஏற்படுகிறது; அவர்கள் வன்முறைக்கு இலக்காகின்றனர். மலைகள் நிறைந்த மாநிலமான மணிப்பூரில், தண்ணீர் எடுக்கச்சென்ற பெண்கள் பாலின வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. 

பட்டியலினப் பழங்குடியினர் பெரும்பாலும் ஊரகப் பகுதியில்தான் வாழ்கின்றனர். (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 90% பேர்) மும்பையிலிருந்து 30- 40 கிமீ தொலைவில் உள்ள போரிவாலி சஞ்சய்காந்தி தேசியப் பூங்கா பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பழங்குடியின மக்களின் ஒரு பிரதிநிதியைச் சந்தித்தேன். ’பானி நஹி, சௌச்சலாய் நஹி’(தண்ணீர் இல்லை, கழிப்பிடம் இல்லை) என அவருடைய பாணியில் நிலைமையைப் புரியவைத்தார். மத்திய அரசோ மாவட்ட நிர்வாகமோ அவர்களுக்கு தண்ணீர், துப்புரவு வசதிகளை பல ஆண்டுகளாகச் செய்துதரவில்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு திறந்தவெளிக் கழிப்பைத் தவிர மாற்று வழியில்லை; இத்தனைக்கும் அவர்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படவோ ஏன் கொல்லப்படவோகூட நேரலாம். 

குடிநீர், வீட்டில் புழங்குவதற்கானது உட்பட ஊரகப்பகுதி மக்களின் அத்தியாவசிய தண்ணீர் வசதியானது, பெரியபெரிய திட்டங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறது. மணிப்பூரில் அணைகள், ரயில்வே, சாலைகள், தொழில்துறை திட்டங்கள் போன்ற பெரிய கட்டமைப்புகள் எப்படியெல்லாம் கிராமங்களை பாதிக்கச்செய்கின்றன என்று என்னிடம் விவரித்தனர். குறிப்பாக, தௌபால் பன்னோக்கு அணைக்கு கீழே உள்ள இரண்டு கிராமங்களைப் பார்த்தேன்; அவை நீண்டகாலமாகவே அந்த ஆற்றுத் தண்ணீரைக் குடிநீருக்காக நம்பியிருக்கவில்லை. தண்ணீர் மாசுபாடு, ஒரு காரணம். இதனால், பக்கத்து கிராமத்திலிருந்து தண்ணீரை எடுத்துவர இவர்கள் அதிகமாக செலவிடவேண்டியுள்ளது. 

இன்னொரு தொகையினர், எந்தவித அரசின் தொடர்பிலும் இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள், இந்தியாவில் உள்ள 51 முன்னாள் வங்காளதேசத்து குடியிருப்புகளிலும் வங்காளதேசத்தில் உள்ள 111 முன்னாள் இந்தியக் குடியிருப்புகளிலும் வாழ்பவர்கள். இரு நாட்டு அரசுகளும் செய்துகொண்ட எல்லை வரையறை உடன்பாட்டின்படி 2015-லிருந்து 922 பேர் மூன்று மறுகுடியேற்ற முகாம்களில் வசிக்கின்றனர். மேற்குவங்காள மாநிலத்தின் கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தின்ஃகட்டா, மெலிகஞ்ச், ஹால்டிபாரி ஆகியவையே அந்த முகாம்கள். அங்குள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளில் கழிப்பிடம் இல்லை; தி.வெ.க.தான் அவர்களின் பயன்பாடு. 

அரசாங்கம் தோண்டிக்கொடுத்த சில குழாய்க் கிணறுகள்தான் அவர்களின் குடிநீர் ஆதாரங்கள். பெரும்பாலும் அவை வேலைசெய்வதில்லை; போதுமான தரமான தண்ணீரும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த அடிப்படையில், இந்திய அரசானது தனது எல்லைக்குள் வசிக்கும் சொந்த மக்களுக்கு மட்டுமன்றி அயல்நாட்டினருக்கும் அதைப்போலவே ஆவணப்படுத்தப்படாத மக்களுக்கும் குடிநீர், துப்புரவு உரிமையை உறுதிசெய்யவேண்டும் என்பது முக்கியமானது. 

நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர், துப்புரவு வசதிகளில் பாகுபாடு காட்டப்படுவதைப் போலவே சுகாதார உரிமை, போதுமான குடியிருப்பு வசதி, தனிமனித கண்ணியத்துக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். 

மும்பை, கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய இடங்களில் காணப்படும் முறையற்ற குடியேற்றப் பகுதிகளில் குடிநீர், துப்புரவு வசதிகள் கவலைப்படும்படியாகவே உள்ளன. மும்பையில் மக்கள் அடர்த்தி மிக்க நகர மக்கள்தொகையில் பாதி பேர் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள். இந்த அடிப்படையில் குடிசைப்பகுதிகளில் அளவுக்குமீறி குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் இருத்திவைக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கியமானது. பொதுவாக இந்தக் குடிசைப்பகுதிகளில் இவையிரண்டு வசதிகளும் போதுமானதாக இல்லை என்பதைப் பார்க்கமுடிந்தது. 

உண்மையில், இது போன்ற பகுதிகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டவையாக இருந்தால், இந்த வசதிகள் கிடைப்பது மாறுபட்டு இருக்கிறது. ’அறிவிக்கைசெய்யப்பட்ட’ அல்லது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட குடியேற்றப் பகுதிகளில் அரசு நிர்வாகத்திடம் உரிமைப்படி குடிநீர் லாரி மூலம் நீரைப் பெறமுடியும் என்கிறபோது, அங்கீகரிக்கப்படாத குடிசைப்பகுதியினருக்கு இவை சுத்தமாக மறுக்கப்பட்டன. இப்பகுதிகளில் சில குழாய்க்கிணறுகளும் தாங்கிதொட்டிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன; ஆனால் அவை அரசுநிர்வாகத்தால் அமைக்கப்பட்டவை அல்ல. அவற்றின் தரமும் கண்காணிக்கப்படுவதில்லை. மும்பை, மகாராஷ்டிர நகர் பகுதியிலுள்ள பீம் நகரில் 160 வீடுகளுக்கான குடிநீரானது, அருகிலும் தொலைவிலுமாக பல வகைகளின் மூலம்தான் குடிநீரைப் பெறமுடிகிறது. 

பொதுக்குழாய்களில் தண்ணீர் பிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பல வயதினரும் அதற்காக தினசரி குறிப்பிட்ட நேரத்தில் நீண்டவரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அடிக்கடி தண்ணீர் வரும் இடங்களில் உள்ளவர்கள், வாளிகளிலும் பிற பாத்திரங்களிலும் தண்ணீரைப் பிடித்துவைத்துக்கொண்டு வெளியிலேயே குளிக்கிறார்கள். 

சமுதாயக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் குடியிருப்பவர்களின் தேவையைவிட மிகக் குறைவான அளவிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலனவை மாற்றுத்திறனாளிக்கும் மாற்றுப்பாலினத்தினருக்கும் ஏற்றவையாகவும் அல்லாமல் கைகழுவும் வசதியுமின்றியே இருக்கின்றன. இத்துடன் அவற்றின் தரமும் பாதுகாப்பும் மிகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. சில இடங்களில் சுவர் இடிந்து மலக்குழிக்குள் விழுந்து ஆட்கள் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. போதுமான வசதிகள் இருக்கிமிடங்களில் பாதுகாப்பாகவும் பயன்படுத்தக்கூடியவையாகவும் இல்லாமல் துப்புரவுக்கான உரிமை உணரப்படாதநிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை தி.வெ.க. தெரியாமல் நிலைபெற வைத்துவிட்டனர். 

குறிப்பிட்ட பருவகாலங்களில் இடம்பெயரும் தொழிலாளர்கள், ரிக்சா ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள், வீடற்றவர்கள் போன்ற நகரும் மக்களை பெரிய அளவில் கொண்ட இந்தியாவில், பள்ளிகள், போக்குவரத்து முனையங்கள், போலீஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் போதுமான குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகள் இல்லை என்று என்னுடைய பயணத்தில் பல முறை புகார் அளித்தனர். 

கையால் மலமள்ளும் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடானது இன்னொரு முக்கிய பிரச்னை ஆகும். 2013 கையால் மலமள்ளும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டப்படி, அப்படியானவர்களைக் கண்டறிந்து அரசாங்கம் பல்வேறு தொழில்களில் அமர்த்தியுள்ளது. இதைச் செய்யும்போது ஒரு கட்டத்தில் கையால் மலமள்ளும் தொழில் இல்லாமல் போய்விடும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்த அக்கறை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்னுடைய பயணத்தில் இப்படியான மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றி பல அறிக்கைகளைக் கொடுத்தார்கள். அரசாங்கம் கொடுத்த அறிக்கைக்கும் குடிமக்கள் அமைப்புகள் கொடுத்த அறிக்கைக்கும் எண்ணிக்கையில் முரண்பாடுகள் இருக்கின்றன. 

நான் சந்தித்த நிறைய பேர், தாங்கள் மட்டுமல்ல தங்களின் குடும்பத்தினர் சுற்றத்தினர் மலமள்ளும் தொழிலில் தொடர்ந்து அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தின் மயின்புரி, ஹர்டோய், பரேலி, ஃபிரசோபாத் ஆகியவை உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இப்போது பணியாற்றும் மலமள்ளும் தொழிலாளர்களை சந்தித்தேன். டெல்லியிலும் லக்னோவிலும் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம்செய்யும்போது இறந்துபோனவர்களும் குடும்பத்தினரை- அவர்களின் கணவர், சகோதரர்கள், மகன்கள்- சந்திக்கமுடிந்தது. அரசிடமிருந்து இவர்கள் யாருக்கும் உரிய இழப்பீடு கிடைத்திருக்கவில்லை; இழப்பீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பம்செய்வதிலும் அவர்கள் கடினத்தை எதிர்கொள்கிறார்கள். 

துப்புரவு வசதி உரிமையை உணரச்செய்வதில் முன்னோக்கிய செயல்பாடுகளின் மூலம், இந்திய அரசானது பாகுபாடின்மை எனும் அடிப்படைக் கொள்கையை மீறுவதற்கு விருப்பமில்லாமல் துணைபுரிகிறது. குறிப்பாக, தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட ’கீழ் சாதி’யினருக்கு துப்புரவுப் பணிகளை ச் செய்யுமாறு நிர்ப்பந்தம்செய்வதில், கழிப்பிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சாதியடிப்படையிலான பாகுபாட்டைத் தொடரச்செய்வதாகவே இருக்கும்.  

மனிதக்கழிவை அகற்றுவதில் தூய்மை இந்தியா திட்டமானது இரட்டை சேமிப்புத் தொட்டிகளைக் கொண்ட கழிப்பிட மாதிரியை முன்னிறுத்தினாலும்கூட மலமள்ளுவதை ஒழிப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதலாவதாக, புதிய கழிப்பிடம் எப்படி இருக்கும் என்பதை கோடிக்கணக்கான மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாகவும் அவர்களுக்குப் புரியும்வகையிலும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். 

இரண்டாவதாக, பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மலமள்ளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்றதான ஒற்றை சேமிப்புத்தொட்டிக் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றன. நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளின்படி, மோசமான சூழல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமவாய்ப்புக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படவேண்டும். 2030-க்குள் இந்தியாவின் நி.வ.இல.-ஐ அடைவதற்கு இந்திய அரசானது இதில் தொடர்ச்சியாக முன்னேற்றத்தைக் கண்காணித்துவரவேண்டும்.  மனிதவுரிமைகளை சகஜமாக்குவதற்கான முறையியல்களை மேம்படுத்தவேண்டும்; வசதியைப் பெறுவதில் சமமின்மையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகளைப் பெறுவதில் அடுத்தகட்டச் செயல்பாடுகள் பற்றி யாரும் ஒதுங்கிப்போகாதபடி தேசிய அளவில் கருத்தொற்றுமையை உருவாக்கவேண்டும். 

இந்தியா போன்ற பெரிய, பல்வேறுவகைபட்ட, கலவையான நாட்டில் குடிநீர், துப்புரவு வசதிகளில் மனிதவுரிமைகளின் நிலவரத்தைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு வாரங்கள் போதாது. பயணத்துக்குப் பின்னர், கூடுதல் தகவல்களைப் பெற்று, பகுப்பாய்வையும் பரிந்துரையையும் அளிக்கவுள்ளேன். மேற்குறிப்பிட்டவை மட்டுமன்றி, முறைப்படுத்தும் கட்டமைப்பு, தனியார்மயமாக்கம், தேசிய சட்ட ஆக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக அது இருக்கும். 

(நிறைவு)

முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே அழுத்தவும்