Published:Updated:

13 வயதிலேயே நம்பிக்கைத் துரோகத்துக்குப் பழகிவிட்ட ஜெயலலிதா! நினைவு தினப் பகிர்வு! #RememberingJayalalithaa

13 வயதிலேயே நம்பிக்கைத் துரோகத்துக்குப் பழகிவிட்ட ஜெயலலிதா! நினைவு தினப் பகிர்வு! #RememberingJayalalithaa
13 வயதிலேயே நம்பிக்கைத் துரோகத்துக்குப் பழகிவிட்ட ஜெயலலிதா! நினைவு தினப் பகிர்வு! #RememberingJayalalithaa

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்... எனக்காக அந்தப் பையனிடம், தூது செல்ல முடியுமா? தான் வராத நாள்களில், அந்தப் பையனிடம் தான் வராத காரணத்தைச் சைகையில் சொல்ல முடியுமா” என்று கேட்கிறார் காதலில் விழுந்த ஒரு பெண். அதைக் கேட்ட அவருடைய தோழி அதற்கு ஒப்புக்கொள்கிறார். நட்பு என்றால் அப்படியானதாகத்தானே இருக்க வேண்டும். 

காதலில் விழுந்த பெண்ணின் வீடு, தோழியின் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளியிருந்தது. அவர், தன்னைவிட இரண்டு வயது மூத்தவராக இருந்தாலும் அதைப் பற்றித் தோழி கவலைப்படவில்லை. ஏனெனில், தோழிக்கு அப்போதுதான் 13 வயதே ஆகிறது. ‘நமக்கு ஒரு தோழி கிடைத்துவிட்டார்... அது போதும்’ என்று அவர் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இதனால், அனைத்து விஷயங்களையும் அவருடன் பேசிப் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், காதலில் விழுந்த பெண்ணோ, தன்னிடம் ஒரு காரணத்துக்காகத்தான் பழகுகிறார் என்பது வெகுநாள்கள் கழித்துத்தான் தோழிக்குத் தெரியவருகிறது. 

ஆம்... அந்தப் பெண் இந்தத் தோழி வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பையனைக் காதலிக்கிறார். அதற்காகவே, தோழியின் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து அந்தப் பையனோடு சைகையில் பேசிக்கொண்டிருக்கிறார். இதை ஒருநாள் தோழி கண்டுபிடிக்க... அவரிடம், உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறார் காதலில் விழுந்த பெண். அப்போதுதான், நாம் முதல் பத்தியில் சொன்ன உதவியைத் தோழியிடம் வைக்கிறார் காதலில் விழுந்த பெண். ‘‘கட்டாயம் செய்கிறேன்” என்று ஒப்புக்கொண்ட நம் தோழி, காதல் என்றாலே என்னமாதிரியான பிரச்னைகள் எல்லாம் வரும் என்று தெரியாமலேயே அங்கிருந்து நகர்கிறார். பின்னொரு நாள்களில், தன் காதலி வராத காரணம்குறித்து... அந்தப் பையனிடம் மொட்டை மாடியில் நின்று சைகையில் தெரிவிக்கிறார், தோழி.

விதி விளையாட ஆரம்பிக்கிறது... சாதாரணமாக, ஓர் ஆணும் பெண்ணும் இன்று அருகருகே நின்று பேசுவதைக்கூடத் தவறாய் எடுத்துக்கொள்ளும் இந்த உலகம், அன்றும் அப்படித்தான் இருந்திருக்கிறது என்பதற்குத் தோழியின் கதையே ஓர் உதாரணம். மாற்றங்கள் நிகழ்கின்றன... ஆனால், மனிதர்கள் மாறுவதில்லை என்பதை தோழியின் கதை தெளிவாகவே உணர்த்துகிறது. 

பையனிடம், தோழி சைகையில் பேசிய காட்சியை அந்தத் தெருவுக்கு வரும் பால்காரர் துரதிர்ஷ்டவசமாகப் பார்த்துவிடுகிறார். பிரச்னை விஸ்வரூபமெடுக்கிறது. இந்த விஷயத்தைப் பார்த்த பால்காரர்... நேரிடையாகத் தோழியின் அம்மாவிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அப்போதே அந்தப் பிரச்னைக்கு முடிவு கிடைத்திருக்கும். ஆனால், இங்கு நடந்தது வேறு. அதாவது, காதலனிடம் சைகையில் சொல்லச் சொன்ன பெண் வீட்டுக்கு நேராகச் சென்ற பால்காரர்... அந்தப் பெண்ணின் பெற்றோரிடம், “இனி, உங்கள் பெண்ணை அவள் தோழி வீட்டுக்கு அனுப்பாதீர்கள். அவருடைய நடவடிக்கை சரியில்லை... அவர், மாடியில் நின்றுகொண்டு ஒரு பையனிடம் தினமும் சைகையில் பேசிக்கொண்டு இருக்கிறார்” என்று பற்றவைக்கிறார். 

ஆம்... அன்றுமுதல் இன்றுவரை உலகில் இதுபோன்ற மனிதர்கள் இப்படித்தான் இன்னும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர்கள் நேரடியாக எப்போதும் சொல்வதில்லை... அது, ஏனென்றும் தெரிவதில்லை. ‘16 வயதினிலே’ படத்தில்தான் அந்த வசனம் வரும். ‘பத்தவெச்சுட்டீயே பரட்ட...’ என்று.

ஆம்... பால்காரர் பற்றவைத்த நெருப்புக்குப் பிறகு, காதலில் விழுந்த பெண் தோழி வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொள்கிறார். காரணம் புரியாமல் தவிக்கும் தோழி, நேரிடையாகவே அவர் வீட்டுக்குச் செல்கிறார். ஆனால், அங்கு நடந்ததோ வேறு... பால்காரர் பற்றவைத்துவிட்டுச் சென்ற செய்தியைச் சொல்லி, காதலில் விழுந்த பெண்ணின் பெற்றோர் அவரை வார்த்தைகளால் தாக்குகிறார்கள். பேச முடியாமல் நிலைகுலைந்து நிற்கிறாள் தோழி. உண்மை என்ன என்பது தெரியாமலேயே தோழியின் மனம் விம்முகிறது... கண்ணீர் கொட்டுகிறது. தன் உயிருக்கு உயிரான தோழியோ, தன்னைக்கூட நிமிர்ந்து பார்க்காமல் மெளனமாய் நிற்கிறார்; தன்னைக் காத்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பதாக அவருடைய நிலை தெரிகிறது. அவரைப்போல் தவறுசெய்ய இவருடைய மனம் இடம்கொடுக்கவில்லை. தோழியைக் காட்டிக்கொடுக்காமலேயே அங்கிருந்து வெளியேறுகிறார். உண்மையைச் சொல்லியிருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பது வேறுகதை. 

வீட்டுக்கு வருகிறார் தோழி... வெகுநேரம் அதையே நினைத்து நினைத்து அழுகிறார். கண்கள் சிவக்கின்றன... கண்ணீரோ, கன்னங்களைக் கழுவுகின்றன. மனதில் காயமாய் மாறிப்போன அந்தச் சுவடுகுறித்து பின்னாளில் இப்படிச் சொல்கிறார் அந்தத் தோழி. ‘‘துரோகம், இவ்வளவு வலியைத் தருமா என்று வெகுநாள்கள் அந்தச் சம்பவத்தை நினைத்து அழுதிருக்கிறேன்’’ என்று. 

இப்படி 13 வயதில் தன் உயிருக்கு உயிரான தோழிமூலம் நம்பிக்கை துரோகத்தைச் சந்தித்த அந்தத் தோழி வேறு யாருமல்ல... ‘சந்தியாவின் மகளாய் பிறந்தார்... இந்தியாவின் மகளாய் மறைந்தார்’ என்ற வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். அவர், இறந்து இன்றுடன் ஒருவருடக் காலம் ஓடிவிட்டது. சிறுவயது முதல் நட்புக்காக எதையும் செய்த அவர், நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு அப்போதே சாட்டையடி கொடுத்திருந்தார் என்றால், இந்நேரம் அவர் உடலை மெரினா தாங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.