Published:Updated:

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு.... அரசியலை அதகளம் செய்யும் ஐவர்! #RememberingJayalalithaa

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு.... அரசியலை அதகளம் செய்யும் ஐவர்! #RememberingJayalalithaa
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு.... அரசியலை அதகளம் செய்யும் ஐவர்! #RememberingJayalalithaa

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு.... அரசியலை அதகளம் செய்யும் ஐவர்! #RememberingJayalalithaa

மிழக அரசியல் களத்தில் சுமார் 35 ஆண்டுகள் மற்ற ஆளுமைமிக்கத் தலைவர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய பெண்மணி ஜெயலலிதா. அவரிடம், 1971-ம் ஆண்டு பிரபல வார இதழ் ஒன்று பேட்டி கண்டது. அதில் ஒரு கேள்வி, ''உங்களுக்கு யாரைக் கண்டால் பயம்'' என்பது. ''10 லட்ச ரூபாய் கொடுத்தாலும் நான் பல்லி இருக்கும் ஓர் அறையில் செல்லமாட்டேன். பல்லி என்றால், எனக்கு அத்தனை பயம்'' எனப் பதிலளித்தார். பல்லிகளைக் கண்டு அன்று பயந்த ஜெயலலிதாவேதான் பின்னாளில்,  பல்லாண்டுகளாக அரசியலில் கொட்டை போட்ட அரசியல் தலைவர்களை அஞ்சி நடுங்கவைத்தார். 

அதிரடியான தலைவராக அரசியலில் இயங்கிய அவர், மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. 

கட்டுக்கோப்புக்குப் பெயர்பெற்ற அவர் கட்சியில்...  அவர் மறைந்து கடந்த ஓராண்டில் அரங்கேறிய அதிரடிகள்தான் எத்தனை எத்தனை?! அமைச்சர்கள் பேசினார்கள், ஓ.பி.எஸ் தனியார் தொலைக்காட்சி ஸ்டூடியோவுக்கே சென்று பரபரப்பு பேட்டியளித்தார். நேற்றுவரை அம்மா முன் அணிவகுத்து நின்ற  கட்சியின் தளகர்த்தர்கள் அடித்துக்கொண்டார்கள். பவ்யத்துக்குப் பேர்போன பன்னீர்செல்வம் ஒரே நாளில் படைத்தளபதி ஆனார். ஒரே ஒரு தலைவி இருந்த கட்சியில் இருந்து பல ரெடிமேட் தலைவர்கள் படையெடுத்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தினகரன், ஜெ.தீபா... இவர்கள் அந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள். 

''தனக்கு இணையாகப் பேனரில்கூட கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், தங்கள் படங்களை இடம்பெறச் செய்யக்கூடாது'' என ஜெயலலிதாவால் எச்சரிக்கப்பட்ட இந்த ஐவர், இன்று ஜெயலலிதாவாகவே மாற பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றனர் இப்போது. முத்தாய்ப்பாகச்  சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் இடத்திலேயே அலங்கரிக்கும் வாய்ப்பு எடப்பாடிக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் அல்ல; அதற்கும் மேலே. 

எடப்பாடி பெற்ற அதிர்ஷ்டம்!

1986-ம் ஆண்டு நலத்திட்டங்களை வழங்க சேலம் வந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். விழா முடிந்து விருந்தினர் மாளிகையில் தங்கிய அவரைக் காண விரும்பினார் அன்றைக்குக் கட்சியில் சிறு பொறுப்பில் இருந்த  இளைஞர் பழனிசாமி.  அருகிலிருந்த செங்கோட்டையனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். செங்கோட்டையன் பரிந்துரைத்தும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் எம்.ஜி.ஆரை மருத்துவர்கள் அதிகமாக யாரிடமும் நெருங்கவிடவில்லை. முயற்சி தோல்வியடைந்ததால் சோகமாகத் திரும்பினார் அவர். எம்.ஜி.ஆரைக் காண முடியாமல் திரும்பிய அதே பழனிசாமிதான், அடுத்த 30 வருடங்களில் எம்.ஜி.ஆர் அமர்ந்த இருக்கையில் இடம்பிடித்தார்.

1974-ல் அமைச்சர் செங்கோட்டையனால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கோணேரிபட்டி கிளைச்செயலாளர் பொறுப்புதான் கட்சியில் கிடைத்த முதல்தகுதி. செங்கோட்டையனுடன் தலைமைக் கழகம், கோட்டை எனச் சில வருடங்கள் பவனிவந்தார். செங்கோட்டையன் பரிந்துரையில் 1989-ம் ஆண்டில் எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. முதல்வெற்றி அது. அடுத்துவந்த 91 தேர்தலிலும் சீட் கிடைத்து வெற்றிபெற்றார். தொடர்ந்து 1996, 2006-ல் சீட் அளிக்கப்பட்டது. ஆனால், இருமுறையும் தோல்வி முகம்தான். 2001-ல் சிமென்ட் வாரியத் தலைவர், அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர், 2004-ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.  2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி. அதைத்தொடர்ந்து தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரானார். 2016-ம் ஆண்டிலும் வெற்றி. இந்த முறை பொதுப்பணித் துறையை வழங்கினார் ஜெயலலிதா. அவரின் விசுவாசி எனப் பெயரைப் போட்டுக்கொண்டு சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம்வந்தார். பழனிசாமிமீது தனிப்பட்ட நல்ல அபிப்ராயத்தை ஜெயலலிதாவிடம் உருவாக்கியதில் சசிகலா குடும்பத்தினருக்கு முக்கியப் பங்குண்டு. பன்னீர்செல்வம்மீதான அதிருப்தி அதிகரித்த நிலையில், சசிகலா குடும்பம் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளித்தது. கட்சியின் உள்வட்டத்தில் இயங்கினார் எடப்பாடி பழனிசாமி. 

இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்தது. அதைத்தொடர்ந்து சசிகலா சிறைசெல்ல நேர்ந்தபோது யானை யாருக்கு மாலை அணிவிக்கும் என மற்றவர்கள் வாய்பிளந்து நிற்க, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். முதல்வர் பதவி பறிபோனதால் ஓ.பி.எஸ் அதிருப்தி அணி கண்டார். அதை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு தினகரனுக்கு விசுவாசம் காட்டி வளர்ந்தார் பழனிசாமி. ஆனால், கொஞ்சநாள்களில் மத்திய அரசின் கடைக்கண் பார்வையில் தமிழக அரசியல் நிலவரம் மாறிவருவதைப் புரிந்துகொண்டு தினகரனை எதிர்க்கும் முடிவை எடுத்தார் அவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் வந்த அவரது முதற்பிறந்தநாளுக்கு அ.தி.மு.க. தலைமைக் கழகம் சிறப்பு மலர் வெளியிட்டது.

பொதுச்செயலாளராகச் சசிகலா வெளியிட்ட அந்த நூலில், எடப்பாடி எழுதிய கட்டுரையில், ''அம்மாவின் இடத்தில்வைத்து சின்னம்மாவின் வழித்தடத்தில் செல்வோம்'' என உணர்ச்சியுடன் எழுதிய எடப்பாடி அந்த மை காய்வதற்குள், ''சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை'' என்றார். தினகரனின் எதிர்ப்பு வலுத்தபோது, சாமர்த்தியமாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக்கொண்டு ஆச்சர்ய அரசியல் செய்தார். அதுவரை ஓ.பி.எஸ்ஸுக்கு இருந்த டவுன் டு எர்த் பிம்பம் எடப்பாடிக்குக் கைமாறியது. நிமிர்ந்து அரசியல் செய்ய ஆரம்பித்தார். இறுதியாக இணைப்புக்கு என ஓ.பி.எஸ் அணிக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் பார்ப்போம் என அதிருப்தி அணியை இன்னும் அதிருப்திக்குள்ளாக்கி வருகிறார். இரு அணிகளுக்கும் எதிர்ப்பு வலுத்துவருவதாகச் சொல்லப்படும் நிலையில், அதை ஒட்டமுயலாமல் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல முயல்வதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தர்மயுத்தம் 2.0, மக்களிடம் ஓ.பி.எஸ்ஸின் இமேஜைச் சரித்துவிடும் என்பது அவரது அரசியல் கணக்கு.

ஓ.பி.எஸ்.

அரசியலில் அத்தனை எதிரிகளைச் சந்தித்திருந்தாலும் இன்னமும் ஓ.பி.எஸ்ஸின் எரிச்சலுக்கு ஆளானவர் இயக்குநர் மணிவண்ணன். அவர்தான் ஓ.பி.எஸ்ஸுடன் ஒப்பீடு செய்யப்பட்ட 'அமைதிப்படை' அமாவாசை கதாபாத்திரத்தைப் படைத்தவர். 'அதிரடிப்படை' திரைப்படத்தை இன்னமும் மக்கள் மறக்காமல் இருக்க ஓ.பி.எஸ் மட்டுமே காரணம். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா சிறைசெல்லநேர்ந்தபோது எப்போது வந்தாலும் இருக்கையைவிட்டுத் தர நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட 'அதிரடிப்படை' சத்யராஜ்போல் அதிர்ஷ்டம் ஓ.பன்னீர்செல்வத்தைத் தேடிவந்தது. அன்றுமுதல் ஏறுமுகம்தான். சாவு வீடானாலும் சஷ்டியப்த பூர்த்தி விழாவானாலும் ஒரே உணர்ச்சிதான். நம்பிக்கையான மனிதர் என இவரை ஜெயலலிதா நம்ப இதுவும் ஒரு முக்கியக் காரணம். ஜெயலலிதாவிடம் காட்டிய பணிவும் மரியாதையும் 2014 மற்றும் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு என 3 முறை முதல்வர் பதவியை அநாயசமாக அவரைத் தேடிவரக் காரணமானது.

சட்டமன்றத்தில் ராஜாஜி, காமராஜர், ஜெயலலிதா வரிசையில் புகைப்படமாகும் வாய்ப்பு கிடைத்தபின்னரும் பதவியை விட்டுப்போ என்றதும் அரசியலில் தன்னை வளர்த்தெடுத்தவர்களையே பகைத்துக்கொள்ளத் துணிந்தார். 'அமைதிப்படை' மீம்ஸ் மேலும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது இந்த நேரத்தில்தான். அம்மாவின் மர்ம மரணத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ்., பதவி ஆசையினால் அதை அவசர அவசரமாக ஒருநாளில் கைகழுவ வேண்டியதானது. ஓ.பி.எஸ்ஸின் ஆசையை நிறைவேற்ற ஒரு நபர் நீதிபதி நியமிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமியால். கட்சியில்  ஜெயலலிதாவுக்கு அடுத்த இரண்டாவது நபராக ஓ.பி.எஸ் வளையவந்தபோது அவரது பின்னால் பவ்யமாக நின்றவர் பழனிசாமி. இன்று ஓ.பி.எஸ்ஸைவிடக் கூடுதலாக 5 சைஸ் ஃபான்ட்டில் சிரிக்கிறார் அவர். அவரிடம் அரசியல் கற்றுக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை அவசர அவசரமாக முடிக்கக் காரணமான அந்த 5 நிபந்தனைகள் பூர்த்தியடையாமல் கிடக்க, தர்மயுத்தம் இரண்டாவது பாகத்தைத் தொடங்குவதா... வேண்டாமா என மதிற்மேல் பூனையாக நின்றுகொண்டிருக்கிறார் இப்போது. அம்மா இறந்து ஓராண்டுக்குள்தான் இத்தனை களேபரங்கள் நடந்துமுடிந்திருக்கின்றன. 

ஜெயக்குமார்

ஜெயலலிதா இருந்தவரை தமிழக அமைச்சர்கள் சிலரின் குரலை மக்கள் கேட்டிருந்ததே இல்லை. அந்தப் பட்டியலில் ஒருவர் ஜெயக்குமார். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகுதான் அவருக்குப் பேசவரும் என்பதே மக்களுக்குத் தெரியவந்தது. ஆனால், இத்தனை நீளத்துக்குப் பேசுவார் என்பதும் அதில் கூடுதல் அதிர்ச்சி. சமீபத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனன் நியமிக்கப்பட்டபோது...  தினகரன் அணி சார்பில் தங்க.தமிழ்ச்செல்வனிடம், ''மதுசூதனனை எப்படித் தோற்கடிப்பீர்கள்'' எனக் கேட்டனர். அதற்கு அவர், ''அதை ஜெயக்குமார் பார்த்துக்கொள்வார்'' எனப் பளிச்செனச் சொன்னார். இதுதான், சுருக்கமாக ஜெயக்குமார். அதிருப்தி அணிகள் சங்கமிப்பதாகச் சொல்லப்பட்டபோது முதல் அதிர்ச்சிக்குள்ளான நபர் ஜெயக்குமார்தான்.

காரணம், அவரிடமிருந்த நிதித்துறையைத்தான் ஓ.பி.எஸ் தன் கோரிக்கைப் பட்டியலில் முதலிடத்தில் வைத்திருந்தார். அதனால் இணைப்பு முயற்சிகளின்போது இவரிடமிருந்து சலசலப்பு பலமாக எழுந்தது. இவரது ஒரு பேட்டியினால் இரு அணிகளாலும் முடிவுசெய்யப்பட்ட ஒரு கூட்டமே ஒருசமயம் ரத்தானது. “ஜெயக்குமார் வாய்மூடி இருந்தால் மட்டுமே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை” எனச் செம்மலை கொதிக்கவேண்டியதானது. உடனடியாக ஜெயக்குமாருக்கு ரெட் கார்டு... அதன்பிறகே தர்மயுத்தம் சுபம் கார்டு போடப்பட்டது. அப்படி ஒரு வாய் ராசிக்காரர் ஜெயக்குமார். பத்திரிகையாளர்கள் மைக் நீட்டினால் அடுத்த ஒரு மணிநேரத்தில் எடப்பாடி அவரது லைனுக்கு வரும் அளவு இன்னமும் அவர் பேச்சு நீண்டுகொண்டிருக்கிறது. 

தினகரன் 

ஒரு கட்சியிலிருந்து நீக்கிவைக்கப்பட்ட ஒருவர், அந்தத் தலைவரின் இடத்துக்கே பின்னாளில் சொந்தம் கொண்டாடியது தமிழக அரசியலில் புதிய நடைமுறை. ஜெயலலிதா இருந்தபோதும் இறப்புக்குப் பின்னும் பத்தோடு பதினொன்றாகவே வளையவந்தவர் தினகரன். கொஞ்சகாலம் அவர்தான் இன்று தமிழக அரசியலில் பேசுபொருள். அ.தி.மு.க-வின் தலைமைப் பதவிக்குப் பிரதான போட்டியாளராக முன்னிறுத்தப்படுபவர். 

கட்சியில் மீண்டும் சசிகலா குடும்பத்தை அனுமதிப்பதும் ஒட்டகத்தை வளைக்குள் அனுமதிப்பதும் ஒன்று என்பதில் ஒருமித்த கருத்து இருந்ததால், பொது எதிரியாகத் தினகரனை வரித்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் எடப்பாடியும் பன்னீர்செல்வமும். இந்த அரசியலை எதிர்கொள்ளச் சொந்த குடும்பத்தில் இருந்த பிரச்னைகளைத் தீர்த்துக்கொண்டு அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் அத்தனை அஸ்திரங்களையும் ஏவி அரசியல் செய்துவருகிறது தினகரன் தரப்பு. பேட்டி மற்றும் பொதுக்கூட்டங்களில் தினகரனின் சாமர்த்தியமான பேச்சு மக்களிடையே ஒருவித பிணைப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தம் எதிர்ப்பு நடவடிக்கைகளால் அவரது அரசியலின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் அத்தனை வேலைகளையும் செய்துவருகிறது மத்திய அரசு.

ஜெயலலிதா என்ற தமிழகத்தின் முக்கிய ஆளுமையின் மரணத்தைப்பற்றி முழுவதும் அறிந்தது சசிகலா குடும்பம். அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகப் பலமுறை சொல்லியும் இன்றுவரை அதற்கான ஒன்றையும் துணிச்சலாக மக்கள்முன் வைக்காத சசிகலா குடும்பத்தினர், வெற்றிகரமாக ஜெயலலிதாவின் அரசியல் அதிகாரத்தை மட்டும் அலுங்காமல் குலுங்காமல் அடையவிரும்புகிறார்கள். அரசியல் அதிகாரத்துக்காக ஜெயலலிதா கட்டி ஆண்ட அ.தி.மு.க-வைப்பற்றியும் அதன் தலைமையையும் எதிர்க்கட்சி தொலைக்காட்சியைக் காட்டிலும் மோசமாக விமர்சிக்கிறது. நேற்றுவரை கட்சியின் பத்திரிகை என உலகம் நம்பியிருந்த 'நமது எம்.ஜி.ஆர்' ஒரேநாளில் சசிகலா குடும்பத்தின் சொந்த நிறுவனமாய் மாறி அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற மக்கள் சக்திமிக்க தலைவர்களால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற பெரிய கட்சி தினகரன் தலைமையின்கீழ் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

ஜெ.தீபா

''எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி அவருக்கு உயிர்கொடுத்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா இறந்தபிறகும் இன்னமும் அவரது உயிரை வாங்கிகொண்டிருக்கிறார்'' என்கிறார்கள் நடுநிலையான உடன்பிறப்புகள். மிகப்பெரிய கட்சியின் ஜாம்பவான்களை எந்தப் பக்கபலமுமின்றி எதிர்த்து நின்றவர் ஜெயலலிதா. அரசியலில் அவ்வளவாக வளராத தன் ஆரம்பகாலத்திலேயே தன் எதிரிகளை வேட்டையாடத் தொடங்கிவிட்டவர் அவர். ஒற்றைப்பெண்மணியாக இருந்து தன் அரசியல் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாய் விளங்கிய அவரது புகழைக் குலைக்கும்விதமாக, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாமல் அதைக் கைப்பற்றப்போவதாக அவர் எழுப்பிய போர்க்குரல் அரசியலில் அந்த நேரத்து சூட்டைத் தணித்தது. ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்ற நிலையில் சொத்துக்குச் சொந்தம் கொண்டாடாமல் அவரது 35 வருட உழைப்புக்குச் சொந்தம் கொண்டாடிய அவரது அறியாமை, அரசியலுக்கு முற்றிலும் புதியது. ''சாவில் மர்மம் இல்லை'' என்றார். பிறகு, ''மர்மம் இருக்கிறது'' என்றார். விசாரணைக் கமிஷனில் இப்போது தன் அத்தை கொல்லப்பட்டதாகச் சொல்கிறார். தீபாவின் நிலைப்பாடுகளால் ஜெயலலிதாவின் இமேஜ் சரிந்ததுதான் கிடைத்த பலன். தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் யாராலும் எளிதில் அணுக முடியாதவராக வாழ்ந்தவர் ஜெயலலிதா. தீபாவின் தனிப்பட்ட வாழ்க்கை வீடியோவில் வைரலாகிற அளவு இருந்தது அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம். 

கருணாநிதி என்ற அதிகாரம் படைத்த முதல்வரைப் பகைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி, அடி உதைபட்ட தொண்டர்களின் ரத்தங்களை உரமாகக் கொண்டு வளர்ந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் உழைப்பில் உருவான அ.தி.மு.க., அதன் ஆயுளுக்காக இன்று அதன் உழைப்பில் பங்குபெறாத நபர்களிடம் அடகுவைக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சோகம். கட்சித் தலைமையின்மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தி.மு.க-விலிருந்து வெளியேறித் தனிக்கட்சி தொடங்கி அதை வெற்றிகரமாக மக்கள் கட்சியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய கட்சியை ஊழல் குற்றச்சாட்டுகளால் தண்டிக்கப்பட்டவர்களும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும் சொந்தம் கொண்டாடுவதைத்தான் வரலாற்றுச் சோகம் எனலாம்.

அடுத்த கட்டுரைக்கு