Published:Updated:

ஜெயலலிதாவின் தடாலடி அரசியல் இல்லாத ஓராண்டு! #RememberingJayalalithaa

ஜெயலலிதாவின் தடாலடி அரசியல் இல்லாத ஓராண்டு! #RememberingJayalalithaa
ஜெயலலிதாவின் தடாலடி அரசியல் இல்லாத ஓராண்டு! #RememberingJayalalithaa

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா"

மகளிர் அனைவருக்கும் பெருமை சேர்க்கக்கூடிய கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் இந்த வைர வரிகளுக்கு பொருத்தமானவரா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது பற்றி நாம் இப்போது விவாதிக்கப் போவதில்லை. கடந்த ஆண்டு இதே நாளில்தான் (2016, டிசம்பர் 5), ஒட்டுமொத்த தமிழகத்தையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, இப்பூவுலகை விட்டு மறைந்தார் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவுடன் அரசியல்ரீதியாகக் கருத்துவேறுபாடுகளையும், மன மாச்சர்யங்களையும் கொண்டிருந்த பல தலைவர்களும், அவரின் மறைவுகுறித்து அதிர்ச்சி அடைந்தனர். ஒட்டுமொத்த தமிழக அரசியல்களமே அப்போது கலக்கத்தில் ஆழ்ந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவரின் அதிரடியான, தடாலடியான முடிவுகளால், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள்கூட அமைச்சராகவோ, கட்சியின் மாவட்டச் செயலாளராகவோ பதவிக்கு வரமுடியும் என்பதை சாத்தியமாக்கியவர். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்கள், எப்போது வேண்டுமானாலும் தங்களின் பதவி பறிபோகலாம் என்ற பதைபதைப்பிலேயே இருப்பார்கள். அந்தளவுக்குக் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்து மூன்று முறை முழுமையாக ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெற்று, கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். எனினும், அந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக அனைத்துத் தொகுதிகளுக்கும் சாலை மார்க்கமாக அவரால் பிரசாரம் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு சர்க்கரை நோயால் ஜெயலலிதா அவதிப்பட்டார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களிலேயே அதாவது செப்டம்பர் 22, 2016 அன்று, உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவர் தலைமை வகித்துக் கட்டிக்காத்த அ.தி.மு.க-வில் தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ளவர்களும் நன்கு அறிவார்கள். இந்நிலையில் ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கெனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக அப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அத்தொகுதியில் டிசம்பர் 21-ம் தேதி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என்பதை அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஒரு மாநிலத்தின் முதல்வரான ஜெயலலிதாவை, அவரின் வீட்டுக்கே வந்து  மத்திய அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோர் சந்தித்த நிலைமாறி, தமிழகத்தின் பிரச்னைகளை டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் அளவுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சுமார் ஒன்றரை கோடி பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கம், தற்போது பல அணிகளாகப் பிரிந்து, எந்தெந்த அணியில் யார் யார் உள்ளனர்? எந்தெந்த நிர்வாகிகள் எந்தப்பக்கம் உள்ளனர் என தெரியாத அளவுக்கு தவித்துக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்குமா என, அவர் உயிரோடு இருந்தவரை அவரை எதிர்த்தவர்களும்கூட சொல்லத் தொடங்கியுள்ளனர். 

ஜெ. சொத்துக்கு உண்மையான வாரிசு யார்?

ஜெயலலிதா மரணம், தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், அவரின் சொத்துகளுக்கு வாரிசு யார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரின் சகோதரர் தீபக் ஆகியோர் தாங்கள்தான் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கும்நிலையில், ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொண்டு, பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தற்போது கிளம்பியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர், 'நான்தான் ஜெயலலிதாவின் மகள்' என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதுபற்றி நடக்கும் குழப்பங்களுக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள பங்களா மற்றும் ஜெயலலிதா பயன்படுத்திய கார் உள்ளிட்ட வாகனங்கள், அவரின் வங்கிக்கணக்கில் உள்ள பணம் என இதுவரை எத்தனை கோடி மதிப்பளவுக்கு சொத்துகள் உள்ளன என்பது வெளிப்படையாகத் தெரியவரவில்லை. ஜெயலலிதா உயில் ஏதும் எழுதிவைத்துள்ளாரா என்ற தகவலும் இப்போதுவரை வெளியாகவில்லை.

ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா குடும்பத்தினரை இப்போது ஆட்சியில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புறக்கணித்துவிட்டாலும், தமிழகம் முழுவதும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஒருபுறம் தனி அணியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்லிவருகிறார். இதுபோன்ற நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறிவரும் எடப்பாடி - ஓ.பி.எஸ் அணியினர், தங்களுக்குள்ளேயே தனித்தனி அணிகளாகவே இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், அ.தி.மு.க இப்போது பல்வேறு அணிகளாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள். 

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, சட்டசபையில் எந்த அறிவிப்பானாலும் அவர் மட்டுமே அறிவிப்பார். தமிழகத்தில் சிறிய அணையை திறந்து விடுவதானாலும் ஜெயலலிதா பெயரிலேயே அறிக்கை வெளியிடப்படும். அமைச்சர்கள் யாரும் பத்திரிகைகளுக்கு எந்தப் பேட்டியும் கொடுக்கத் தயங்கினர். ஆனால், இப்போதோ நிலைமை முற்றிலும் தலைகீழாகி விட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும், "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்...", "ஆணுக்குப் பெண் இங்கே சரி நிகர் சமானம்.." என்னும் பாரதியாரின் கூற்றுகள் இன்னமும் முழுமையாகப் மெய்ப்படவில்லை.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா போன்றோர் சொந்த வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஏற்பட்ட எண்ணற்ற தடைகளைத் தகர்த்தெறிந்து, விதிவிலக்குகளாகத் திகழ்ந்தனர். காரணம் அவர்களின் ஆளுமைத் திறனும், அவர்கள் எடுத்த தனித்துவமான பல முடிவுகளும், எதையும் எந்தநேரத்திலும் சவாலுடன் எதிர்கொள்ளும் தைரியமும்தான் எனலாம். அவர்களின் செயல்பாடுகளால் இன்றளவும் அவர்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அரிதாரம் பூசி நடித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்து தமிழகத்தில் சகாப்தமாய்த் திகழ்ந்தவர். ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு இனிமேலும் அவரைப் போன்றதொரு முதல்வர் எதிர்காலத்தில் கிடைப்பார் என்பது அரிதானதே....