Published:Updated:

சட்டப்பேரவை வைர விழா நினைவு வளைவுக்கு ஜெ. அடிக்கல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை வைரவிழா வளைவுக்கான அடிக்கல்லை முதல்வர்  ஜெயலலிதா நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"முதலமைச்சர்  ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2012-ஆம் ஆண்டு 60 ஆண்டுகளை  பூர்த்தி செய்துள்ளதையொட்டி, சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச்  சின்னத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு  வளைவிற்கு இன்று (29.10.2012) அடிக்கல் நாட்டினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்ற தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவை 2012-ஆம் ஆண்டு 60 ஆண்டுகளை பூர்த்தி  செய்துள்ளதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வைர விழா சிறப்புடன்  நடைபெறவுள்ளது.  

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவினையொட்டி மக்கள் என்றென்றும்  நினைவு கொள்ளும் வகையில் சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச்  சின்னத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  வைர விழா நினைவு வளைவு அமைப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, முதலமைச்சர் ஜெயலலிதா 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவிற்கு  இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், கலைநயம் மிக்க தோரண வாயிலின் மாதிரி வடிவமைப்பினையும் திறந்து  வைத்தார். புதியதாக அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா  நினைவு வளைவு 80 அடி அகலமும், 41 அடி உயரமும் கொண்டதாக இருப்பதுடன்,  பாரம்பரியம் மற்றும் நவீன கட்டடக்கலை நுட்பத்திறனை உள்ளடக்கியும்  கட்டப்படவுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தியவாறு, இந்த நினைவு வளைவு  கட்டுமானப்பணி, குறிப்பிட்ட காலகெடுவுக்குள், சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும்”  என்று கூறப்பட்டுள்ளது.