Published:Updated:

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2
ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ராண்டு நிறைவடைந்து விட்டது... தமிழக அரசியலில் அழுத்தம் திருத்தமாக கால்தடம் பதித்தவர், கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியல் திசைவழிப்போக்கை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். இவர் இம்மண்ணை விட்டுச் சென்று ஓராண்டு இன்றோடு நிறைவடைகிறது. தங்களின் வலிமையான தலைவியின் மரணத்துக்குப் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என தொண்டர்கள் கவலையுறும் அளவுக்கு குழப்பங்கள், சர்ச்சைகள் என ஓராண்டு பெரும் பரபரப்புடன் கடந்தது. அவற்றின் தொகுப்பு தான் இது.

தொகுப்பின் முதல் பகுதியைப் படிக்க இங்கு க்ளிக் செய்க...

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

மே 15 : 'ஆண்டவன் விரும்பினால்...' மீண்டும் ரஜினி

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்தச் சூழலில் அரசியலுக்கு வருவார்; அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட... வழக்கம்போல் ஆண்டவன் விரும்பினால் அரசியல்வாதி ஆவேன் எனப் பேசி பரபரப்பைக் கிளப்பினார். ரஜினி குழப்பத்தை ஏற்படுத்துகிறார், ஆழம் பார்க்கிறார் என அவரது பேச்சுக்குப் பல கற்பிதங்கள் சொல்லப்பட்டன. 'அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் வருபவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டேன்' என ரஜினி பேசியதை மேற்கோளிட்டு அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் சொல்லப்பட்டது. இது குழப்பமா, உத்தியா எனத் தெரியாமல் வழக்கம் போல் ரசிகர்களும், மக்களும் குழம்பிப் போனார்கள்.

மே 19 :  தொடங்காத பேச்சுவார்த்தையும், பிரதமருடனான சந்திப்பும்

இரு அணிகள் இணைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.க.வில் நடக்கும் உள்குழப்பங்கள் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த நேரம். பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். இணைப்புக்கான முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை என்ற நேரத்தில் நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாகப் பேசப்பட்டது. இந்த நேரத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து பன்னீர்செல்வம் மோடியுடன் விவாதித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதை மறுத்தார் பன்னீர்செல்வம் தரப்பு. 'அரசியல் எதுவும் பேசவில்லை. மக்கள் நலன் குறித்த விஷயங்கள் மட்டுமே பிரதமருடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்டது' என்றார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பேசுவதற்கான சூழல் குறைவது போலத் தோன்றிய காலகட்டத்தில் பிரதமருடன் ஓ.பி.எஸ். பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

மே 20 : பி.ஜே.பி.யை நெருங்குகிறாரா ஓ.பி.எஸ்.?

இணைப்பில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 'உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர், பி.ஜே.பி. உடன் கூட்டணிகுறித்து அறிவிக்கப்படும்' என்று ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் தெரிவிக்க... அ.தி.மு.க. இணைப்பை அவர் கைவிடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பதிவு திருத்தம் செய்யப்பட்டது. பி.ஜே.பி. என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என மாற்றப்பட்டது. மோடியைச் சந்தித்த மறுநாள் இந்த ட்விட்டர் செய்தி வெளியாக பி.ஜே.பி.யை பன்னீர்செல்வம் நெருங்குவதாகச் சொல்லப்பட்டது.

மே 24 : எடப்பாடியும் மோடியைச் சந்தித்தார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மோடியைச் சந்தித்து விட்டுத் திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியைச் சந்தித்தார். 'அரசியல் எதுவும் பேசவில்லை. மாநில நலன் குறித்த திட்டங்கள் பற்றி பேசினோம்' என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. "அரசியல் காரணங்களுக்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியைச் சந்தித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து விட்டு, இப்போது உடைந்த அ.தி.மு.க.வை இணைக்கும் வேலையைக் கட்டப்பஞ்சாயத்து செய்வது போல செய்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி," என விமர்சித்தார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். 

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ஜூன் 6 : தினகரனுக்குப் பெருகிய ஆதரவு

தமிழக அரசியலில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. திகார் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையான தினகரனை, அடுத்தடுத்த நாள்களில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 32 பேர் அவரைச் சந்தித்துப் பேச பரபரத்தது தமிழக அரசியல் களம். தினகரனுக்கு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்த நிலையில், ஆட்சி நிலைக்குமா என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்கத் தொங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தினகரன் - எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பால் எந்த ஆபத்துமில்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், தினகரனுக்கு எழுந்த இந்த ஆதரவு ஆட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்ப... மீண்டும் பரபரத்தது தமிழக அரசியல்.

ஜூன் 21 :ஓரணியில் பி.ஜே.பி.க்கு ஆதரவு

எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓ.பி.எஸ். என எம்.எல்.ஏ-க்கள் மூன்று பிரிவாகப் பிரிந்து நின்றாலும், மூவரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் ஓரணியில் நின்று பி.ஜே.பி.க்கு ஆதரவு தெரிவித்தனர். பிரதமரின் கோரிக்கையை ஏற்று, ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதே காரணத்தைச் சொல்லி ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் அடுத்தடுத்து பி.ஜே.பி. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கொடுத்தனர். கட்சியில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு எனச் சொல்லப்பட... பி.ஜே.பி. கொடுத்த நிர்பந்தத்ததுக்கே அ.தி.மு.க. அணிகள் பணிந்துள்ளன என்ற விமர்சனமும் எழுந்தது.

ஜூன் 28 : விஸ்வரூபம் எடுத்த குட்கா விவகாரம்

குட்கா விற்பனைக்காக அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக தி.மு.க. சட்டமன்றத்தில் குரல் எழுப்ப... பேச அனுமதி மறுக்கப்பட்டது. இது முக்கியமான பிரச்னை பேச அனுமதிக்க வேண்டும் என முறையிட்டு, பின் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தொடர்புடையவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் ஸ்டாலின். குட்கா முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகிறது என விளக்கம் சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அடுத்த சில தினங்களில் குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகளுடன் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் பேரவைக்குள் வர... பிரச்னை அவை உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ஜூலை 17 : அரசியலுக்கு வந்துவிட்டேன் - கமல்

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சித்து டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவிக்க... கொந்தளித்தனர் அமைச்சர்கள். மேம்போக்கமான விமர்சனம் என்ற நிலையைக் கடந்து, கமல்ஹாசனுக்கு எதிர்வினையாற்ற தொடங்கினர் மூத்த அமைச்சர்கள். 'கமல் நடிக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது' என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார். அரசை விமர்சித்தால் கமல் மீது வழக்குத் தொடர்வோம் என எச்சரித்தார் அமைச்சர் வேலுமணி.

நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன். ஆதாரம் கேட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கே மக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கமல் வேண்டுகோள் விடுத்தார். கமல் ஹாசனை மிரட்டும் தொணியில் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று எதிர்க்கட்சிகள் அமைச்சர்களுக்குக் கண்டனம் தெரிவித்தன.

ஜூலை 29 :தினகரன் - திவாகரன் சமரசம்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் அவர் ஆளுமை செலுத்திய நேரத்தில், துக்க நிகழ்வு ஒன்றில் சந்தித்துப் பேசிக்கொண்டனர் சசிகலாவின் சகோதரர் திவாகரனும், டி.டி.வி. தினகரனும். "எனக்கும், தினகரனுக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. மகாபாரதத்தில் அபிமன்யூ போல அ.தி.மு.க. சக்கர வியூகத்தில் சிக்கித்தவிக்கிறது. அதை மீட்டெடுப்போம்," என்றார் திவாகரன். துக்க நிகழ்வில் தினகரன் - திவாகரன் கரம் கோர்த்து இருந்தது அடுத்த அரசியல் பரபரப்புக்கு வித்திட்டது. ஆகஸ்ட் 5ம் தேதிக்குப் பிறகு நேரடியாக அ.தி.மு.க. கட்சிப்பணிகளில் ஈடுபடப் போவதாக தினகரன் அறிவித்தார். 

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ஆகஸ்ட் 2 : களத்தில் குதித்த தினகரன்

திவாகரனுடனான சமரசத்தையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சென்று சசிகலாவைச் சந்தித்துத் திரும்பிய தினகரன், அரசியலில் வேகம் காட்டத்தொடங்கினார். "பிரிந்திருந்த அணிகள் இணைய 60 நாள்கள் வாய்ப்பு கொடுத்திருந்தேன். அது நிறைவேறாததால், இரு அணிகளையும் இணைத்து கட்சியைப் பலப்படுத்தும் பணியை நானே மேற்கொள்வேன் என அறிவித்தார். அடுத்த ஓரிரு தினங்களில் சுற்றுப்பயண அறிவிப்பையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். தினகரனின் இந்தத் திடீர் விஸ்வரூபத்தால் அதிர்ந்து போன இரு அணிகளும் ரகசியப்பேச்சுவார்த்தையைத் தொடங்கின. தினகரனுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அரசை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். எம்.ஜி.ஆராக வேறு யாரும் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். ஆக நினைத்தால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும்," என விமர்சித்தார். தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரக்கத் தொடங்கியது. 

ஆகஸ்ட் 10 : தினகரனை நீக்கியது எடப்பாடி அணி

அ.தி.மு.க.வில் உச்சகட்ட மோதல் அரங்கேறியது. இதுவரை உட்கட்சிக் குழப்பம் பற்றி வெளிப்படையாக எதுவும் பேசாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது; துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என அறிவித்தார். என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார் தினகரன். மறுபுறம் இரு அணிகள் இணைப்புக்கான நாள் குறிக்கும் வேலை மும்மரமானது. சுதந்திர தினத்துக்குள் அணிகள் இணைப்பு நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். தமிழக அரசியல் களம் அடுத்தகட்ட பரபரப்புக்குத் தயாரானது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ஆகஸ்ட் 14 : தினகரன் விடுத்த சவால்

அறிவித்தபடி சுற்றுப்பயணத்தை மதுரை மேலூரிலிருந்து தொடங்கினார் தினகரன். "முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். ஜெயலலிதா மரணமடைந்த போது அவர்தான் முக்கியப் பொறுப்பில் இருந்தார். ஜெயலலிதா மரணம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாங்களும் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ," என சவால் விடுத்தவர், எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணியினரைக் கடுமையாகச் சாடினார். மக்களவைத் தேர்தலுக்குள் இரட்டை இலைச் சின்னத்தை மீட்பேன் என அவர் சொல்ல... யார்தான் உண்மையான அ.தி.மு.க. என்ற குழப்பம் மேலோங்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 17 : ஜெ மரணம்: நீதி விசாரணைக்கு உத்தரவு

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஒன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பது. மற்றொன்று முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவிடமாக்குவது. ஜெயலலிதா மரணத்துக்கான நீதி விசாரணை என்பது மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவா அல்லது அணிகள் இணைப்பை வேகப்படுத்தவா என்ற கேள்வி எழுந்தது. தினகரனின் சவாலையடுத்தே அரசு நீதி விசாரணை அமைத்ததாகவும் சொல்லப்பட்டது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

ஆகஸ்ட் 21 : அணிகள் இணைந்தன

இப்போது... அப்போது எனச்சொல்லப்பட்ட அணிகள் இணைப்பு ஒரு வழியாக நடந்தது. பிரிந்த இரு அணிகள் ஆறு மாத காலத்துக்குப் பின்னர் ஒன்றிணைந்தன. இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூட்டாக வெளியிட்டனர். இருவரது கரங்களையும் பிடித்து இணைத்துவைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தர்மயுத்தம் தொடர்வேன் என பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவித்து, எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஊழல் ஆட்சி என விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம் அதே ஆட்சியில் துணை முதல்வராகவும், கட்சியின் வழிகாட்டுதல் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் ஆகியிருக்கிறார்.

தர்மயுத்தம் வென்றது எனச்சொல்லப்பட்ட நிலையில், யாருக்கு வெற்றி? பிரச்னைகள் தீர்ந்தனவா எனப் பல சந்தேகங்களுடன் நடந்தது இணைப்பு. மறுபுறம், தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று தங்கள் வருத்தத்தை ஜெயலலிதாவிடம் முறையிட்டதாகச் சொல்லி அடுத்த பரபரப்பைத் தொடங்கிவைத்தனர். 

ஆகஸ்ட் 22 : ஆதரவை வாபஸ் பெற்ற 19 எம்.எல்.ஏ-க்கள்

அணிகள் இணைப்பையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏ-க்கள் கடிதம் அளித்தனர். முதல்வர், அரசின் மீது ஊழல் புகார்களைக் கூறி, தங்கள் ஆதரவை 18 எம்.எல்.ஏ-க்களும் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மீதும், அரசு மீதும் நம்பிக்கை இல்லை எனச்சொல்லி ஆதரவை வாபஸ் பெற்ற கையோடு, புதுச்சேரி சொகுசு விடுதிக்குச் சென்றனர் 19 எம்.எல்.ஏ-க்களும். இதையடுத்து எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும்,  பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அடுத்தடுத்த நாள்களுக்கு ஆளுநரிடம் இதை எதிர்க்கட்சிகள் வலியுறுத்த... 'இது அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல், இதில் நான் தலையிட முடியாது' எனப் பின்வாங்கினார் ஆளுநர்.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

செப்.12 : முடிந்ததா சசிகலா சகாப்தம்?

இரு அணிகள் இணைப்புக்குப் பின்னர், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை பிரம்மாண்டமாக நடத்தியது அ.தி.மு.க. இதில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலாவது, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவது என்பது. இரண்டாவது சசிகலா நியமித்த நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பது. மூன்றாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளார் எனும் பதவி இனி கிடையாது. அதற்கு பதில் இருவர் கொண்ட கூட்டுத்தலைமை, பொதுச்செயலாளர் பணியைக் கவனிக்கும். அந்தப் பணிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனிப்பார்கள் என்பதாகும். இதன் மூலம் சசிகலா சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அ.தி.மு.க. தரப்பு சொன்னது. 

செப்.18 : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் எண்ணிக்கை எடப்பாடி அரசுக்கு இல்லாத சூழலில், பெரும்பான்மையைக் காட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது என நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வாதிட்டு வந்த நேரத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால். அதோடு 18 இடங்களும் காலியாக இருப்பதாக அறிவிப்பும் வெளியிட்டார். அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த ஜனநாயகப்படுகொலையை நிகழ்த்தியிருப்பதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர். விதிகளின் அடிப்படையிலேயே இந்தத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

செப்.23 : சொன்னது எல்லாமே பொய்

தமிழக அரசியல் களம், ஓரளவு அமைதியாக இருந்த நேரத்தில் தனது பேச்சின் மூலம் பரபரப்பைக் கிளப்பினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். "ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நாள்களில் அவர் அதைச் சாப்பிட்டார். இதைச்சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது எல்லாமே பொய். நாங்கள் யாரும் அவரைப்பார்க்கவே இல்லை. இட்லி சாப்பிட்டாங்க... சட்னி சாப்பிட்டாங்கனு... நாங்க சொன்ன எல்லாமே பொய். அதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். நாங்க யாருமே பார்க்கலை. எல்லோரும் சேர்ந்து பொய்களைச் சொன்னோம்," எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் திண்டுக்கல் சீனிவாசன். மறுபுறம் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என ஓரிரு அமைச்சர்கள் சொல்ல விவாதத்துக்குள்ளானது சர்ச்சை.

செப்.25 : விசாரணை ஆணையம் அமைத்தது அரசு

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை அணிகள் இணைப்புக்குப் பின்னர் அடங்கியிருந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. ஜெயலலிதா 75 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று மரணமடைந்த நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார் முதல்வர். இந்நிலையில், இறப்பு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. யாரை இந்த ஆணையம் விசாரிக்கப்போகிறது என்ற விமர்சனம் பலரால் முன்வைக்கப்பட்டது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

அக். 6 : மூன்று நிகழ்வுகள்... மூன்று பரபரப்புகள்...

பெங்களூரு சிறையிலிருந்து 7 மாத காலத்துக்குப் பின்னர் அவசர கால பரோலில் வந்தார் சசிகலா. மறுபுறம் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். பின் இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான விசாரணை உச்சத்தை எட்டியிருந்தது. கட்சி, ஆட்சியில் அதிகாரத்துடன் சிறை சென்ற சசிகலா, இப்போது பரோலில் வந்த போது எந்த அதிகாரமும் இல்லை. அவர் தங்கியிருந்த போயஸ் வீட்டுக்கோ, கட்சி அலுவலகத்துக்கோ கூட அவரால் செல்ல முடியவில்லை. சசிகலா சென்னையில் தங்கியிருந்த அடுத்த சில நாள்களும் பரபரப்பாகவே கடந்தது.

நவ.6 : கருணாநிதியைச் சந்தித்த மோடி

சென்னையில் நிகழ்வொன்றில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வரவேற்க... டெல்லிக்கு வந்து ஓய்வெடுக்க கருணாநிதிக்கு மோடி அழைப்பு விடுத்ததாகச் சொல்லப்பட்டது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனச்சொல்லப்பட்டாலும், இரு அரசியல் இயக்கத்தினர் சந்தித்துக்கொள்வது எதிர்கால கணக்குகளை உள்ளடக்கிய ஒன்று என்றும் விமர்சிக்கப்பட்டது. ஜெயலலிதாவைப் பார்க்க மருத்துவமனை வராதவர், கருணாநிதியைச் சந்தித்தது ஏன் என்றும் கேள்வி எழுந்தது. 

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

நவ.9 : இதுவரை கண்டிராத சோதனை

தமிழகத்தில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனை நடந்தது. சசிகலா உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில், 1800 வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். 'கறுப்புப் பணத்துக்கு எதிராக அறுவைசிகிச்சை' என பி.ஜே.பி. தலைவர்கள் சொல்ல... "இது எங்களை மிரட்டுவதற்காக நடத்தப்படும் சோதனை. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். 25 ஆண்டு சிறையில் போட்டாலும் அதற்கு பின்னர் வந்து அரசியல் செய்வேன்," என ஆவேசப்பட்டார் தினகரன். 5 நாள்கள் இடைவிடாது நடந்தது சோதனை. "வருமானவரித்துறை ஆய்வின் போது பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகச் சொல்லப்படுவது பொய். வருமான வரித்துறை எதுவும் எடுத்துச் செல்லவில்லை. நான் காந்தியின் பேரன் இல்லை. என்மீது குற்றச்சாட்டு வைப்பவர்களும் காந்தியின் பேரன் இல்லை," என்றார் தினகரன்.

நவ.14 : ஆளுநர் ஆய்வும், சர்ச்சையும்

கோவையில் நிகழ்வொன்றில் பங்கேற்கச் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த சர்ச்சை வெடித்தது. "ஆளுநர் ஆய்வு நடத்துவது மரபை மீறிய செயல். ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுப்பது, இரட்டை அதிகார மையம் உருவாக வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். பி.ஜே.பி. அரசு ஆளுநர் மூலம் ஆட்சி நடத்தப்பார்க்கிறது," என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. "மக்களைப் புரிந்து கொள்ள இது உதவும். புரிந்து கொண்டால்தானே பாராட்டமுடியும்" எனச்சொன்ன ஆளுநர் பன்வாரிலால், இது ஆய்வு அல்ல. சந்திப்புதான் என்றும் விளக்கம் கொடுத்தார். ஆளுநர் ஆய்வு வரவேற்கத்தக்க ஒன்றுதான் எனத் தமிழக அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

நவ.17 :போயஸ் இல்லத்தில் சோதனை

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த சோதனையின் நீட்சியாக, ஜெயலலிதா வாழ்ந்து, மறைந்த போயஸ் தோட்ட இல்லத்தில் நள்ளிரவு சோதனை நடத்தினார்கள் வருமான வரித்துறையினர். இந்தச் சோதனை ஜெயலலிதா பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது எனச் சிலரும், இதன் மூலம் போயஸ் இல்லம் தூய்மையடைந்து விட்டதாகச் சிலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். 

நவ.21 : அணிகள் இணைந்தன... மனங்கள்?

அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்ற பார்வையில் ட்விட் போட்டு பரபரப்பைக் கிளப்பினார் ஓ.பி.எஸ். ஆதரவாளரான எம்.பி. மைத்ரேயன். அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால் மனங்கள்?" என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே விரிசலா, மீண்டும் தொடங்குகிறதா தர்மயுத்தம், வேறு அரசியல் கணக்கு இருக்கிறதா," எனப் பல கேள்விகளை இந்தக் கருத்து முன்வைத்தது. 

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 2

நவ.23 : ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.அணிக்கு இரட்டை இலை

இரட்டை இலைச் சின்னம் அதிகாரபூர்வமாக எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நிர்வாகிகள் எந்தப்பக்கம் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு, பெரும்பான்மை அடிப்படையில் ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது எனச்சொல்லப்பட்டது. "கட்சியை உடைத்து  விடலாம் என நினைத்தவர்களுக்குக் கிடைத்த சம்மட்டி அடி இது" என்றார் எடப்பாடி பழனிசாமி. "தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு உள்ளதோ அதைக்கொண்டுதான் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்க வேண்டும்," என்றார் தினகரன்.

நவ.24 : மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

இரட்டை இலைச் சின்னத்தையும், அ.தி.மு.க. பெயரையும் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கிய 24 மணி நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். இது பெரும் விமர்சனத்தை எழுப்பியது. 'தொண்டர்கள், ஆதரவாளர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்' எனச் சொல்லிய தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததோடு, புதிய கொடியோடு சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார் தினகரன். அ.தி.மு.க. சார்பில் நீண்ட இழுபறிக்குப் பின் மதுசூதனன் களமிறக்கி விடப்பட... அதேவேட்பாளர்களுடன் பரபரக்கிறது ஆர்..கே.நகர் தேர்தல் களம். மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறது ஆட்டம். 

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?