Published:Updated:

கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்கலாம், மனைவிக்கு அம்பேத்கர் சொன்ன அறிவுரை!

கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்கலாம், மனைவிக்கு அம்பேத்கர் சொன்ன அறிவுரை!
கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்கலாம், மனைவிக்கு அம்பேத்கர் சொன்ன அறிவுரை!

‘‘அய்யா... உங்களால் அதிக நேரம் சலிப்பின்றி, களைப்பின்றி புத்தகங்களை எப்படி வாசிக்க முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில், கொஞ்சநேரம்கூட ஓய்வெடுக்கமாட்டீர்களா’’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். அதற்கு அந்த நபர், ‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்துக்கு மாறுவதுதான்’’ என்கிறார் சிரித்துக்கொண்டே. மேலும் அந்த நபர், ‘‘அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியஸான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நடவடிக்கை பற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது’’ என்கிறார். 

அதே நண்பர்... அவரிடம், ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். அதில், சிறந்த தொகுப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு இதனை அளித்துவிடுங்கள். இதை, விலைக்குத்தான் என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்கிறார் பெருமைபொங்க.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதரைப் பற்றி தந்தை பெரியார், ‘‘அவர், இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர். அவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களை, அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவர். அவர் நம்மைப்போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர். சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ, தன்மையோ எதுவும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரஷ்டரோ, வரப்பிரசாதியோ அல்ல... சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ, அப்படிப்பட்ட தொண்டாற்றியவர்’’ என்கிறார். 

காலம் கடக்கிறது... நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் அந்த நபர். கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை, ‘‘காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்ட பூஷ்வா அமைச்சர்’’ என்று கிண்டலடிக்கின்றனர். அதற்கு அந்த நபர், ‘‘எளிதில் தண்ணீரில் கரைந்தோடும் களிமண்ணைப்போல் நான் இருக்கவில்லை. நான், ஆறுகளைத் திசைதிருப்பிவிடும் உருகிவிடாத கற்பாறை போன்றவன். நான் எங்கிருந்தாலும், எப்படிப்பட்டவரின் நட்பு கிடைத்தாலும் என்னுடைய தனித்தன்மையை எப்போதும் இழக்கமாட்டேன்’’ என்று சாட்டையடி கொடுக்கிறார்.

இப்படிச் சாட்டையடி கொடுத்த அந்த நபர் பின்னாளில் உலகம் மதிக்கும் அளவுக்கு மாமேதையாகிறார். உலகத்தையும், மக்களையும் எப்படி நேசித்தாரோ, அதுபோல் தன் மனைவியையும் நேசித்தார். இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் எங்கே மக்களை நேசிக்கிறார்கள்? பேரம் பேசவும், விடுதியில் இருக்கவும்தானே ஆசைப்படுகிறார்கள். இதைத்தான் பெரியார் அன்றே, “இன்றைக்கு இருக்கும் பெருந்தலைவர்கள் எனப்படும் பலரும் விளம்பரத்தாலும் மற்றவர்களுடைய பாராட்டினாலும் பெரிய ஆள்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ, அனுபவ ஆராய்ச்சி காரணமாகவோ அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது. அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும்” என்றார். அதைத்தானே இன்று நம் அமைச்சர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். 

பெருமையான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது சில பிரச்னையான விஷயங்களும் வரத்தானே செய்யும். நெற்கதிரோடு இருக்கும் களைபோல... நாம் களையை நீக்கிவிட்டு மீண்டும் அந்த நபரின் கதைக்குள் வருவோம்... அந்த நபருடைய முதல் மனைவி மிகுந்த கடவுள் பக்திகொண்டவர். ஆகையால், பந்தார்பூர் என்ற ஊரில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் ஆசைப்படுகிறார். அதை, தன் கணவரிடம் தெரிவிக்கிறார். அந்தக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி இல்லை... இதனால் தன் மனைவியை அங்கு அழைத்துச் சென்று அவமானப்பட வேண்டாம் என்று நினைக்கிறார். ஆதலால், அவரிடம் அன்புடன் வேண்டுகோள் வைக்கிறார்... அவரும், கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கேட்கிறார். ‘‘கடவுள் சிலையை வணங்குவதை மறந்துவிடு... நம்முடைய ஒழுக்கமான வாழ்வின்மூலம் அடித்தட்டு மக்களுக்குச் சுயநலமின்றிப் பணிபுரிவதன் வழியாக என்றாவது ஒருநாள் நாம் வணங்கக்கூடிய கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்குவோம்’’ என்கிறார். 

என்ன செய்வார் மனைவி? கணவரின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு இல்லாமல் மெளனம் காக்கிறார்; கடைசிவரை தன் ஆசை நிறைவேறாமல் ஒருநாள் மரணித்தே விடுகிறார் அந்த நபரின் மனைவி. தன் மனைவியின் ஆசையை அவர் நிறைவேற்றாதபோதிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடினார்; அதில் வெற்றியும் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன் இன்னுயிரையும் ஈந்த அந்த நபர் வேறு யாருமல்ல.. நம் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்தான். அவருடைய நினைவுதினம் இன்று. அவர் மறைந்து ஆண்டுகள் எத்தனை கடந்தால் என்ன? அவர் உதிர்த்துவிட்டுச் சென்ற கருத்துகள் இன்னும் பல அம்பேத்கர்களை உருவாக்கிக்கொண்டுதானே இருக்கின்றன. 

‘‘ஆடுகளைத்தான் கோயில்களுக்கு முன்பாகப் பலியிடுவார்கள்... சிங்கங்களை அல்ல; நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்” - ஆம்... அம்பேத்கரைப்போன்று!