Published:Updated:

மந்திரி தந்திரி - 20 !

விகடன் டீம், படம்: உ.பாண்டி, ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

ரமக்குடி நகரின் பிரதான வீதியான மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது மீனாட்சி மருத்துவமனை. நோய் தீரும் நம்பிக்கையுடன் ஏகப்பட்ட மக்கள் காத்திருக்க, ஸ்டெத்தஸ்கோப்பும் கையுமாக, துறுதுறு சுறுசுறுவென நோயாளிகளைக் கவனித்து, அனுப்பிக்கொண்டிருந்தார் அந்த மருத்துவர். 80-களின் டாக்டரான அந்த எஸ்.சுந்தரராஜ், இப்போது வெள்ளை வேட்டி, சட்டையுடன் கோட்டையில் ரிலாக்ஸாகச் செயல்படும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர். சினிமாபோல ஒரே பாட்டில் வளர்ச்சி; தடாலடி வீழ்ச்சி என பரபர பரமபத விளையாட்டுதான் சுந்தரராஜின் அரசியல் வாழ்க்கை! 

மக்கள் டாக்டர்!  

முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமம்,  சுந்தரராஜ் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா சன்னாசி; அம்மா சத்தி. இருவரும் விவசாயக் கூலிகள். நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டி  சுந்தரராஜ், படிப்பில் படுசுட்டி. பள்ளி இறுதியை நல்ல மதிப்பெண்களுடன் கடந்த சுந்தரராஜுக்கு,  மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.  பட்டம் பெற்றவர், பரமக்குடியில் கிளினிக் தொடங்கினார். வறுமைப் பின்னணியில் இருந்து உயர்ந்த சுந்தரராஜை, ஆச்சர்யத்தோடு பார்த்தது அவரது தாழ்த்தப்பட்ட சமூகம்.

'இளமையில் வறுமை’யை அனுபவித்தவர் என்பதால் நோயாளிகளிடம் பெரிதாக கட்டணத்தை எதிர்பார்க்கவில்லை சுந்தரராஜ். எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். கடன் சொல்லிவிட்டுப் போனாலும் கண்டு கொள்ள மாட்டார். சிகிச்சை கைராசியும் சேர்ந்து பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் சுந்தரராஜுக்கு 'மக்கள் டாக்டர்’ அந்தஸ்து தர, அபார செல்வாக்கு வளர்ந்தது. பரமக்குடி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த ராமகிருஷ்ணன் இவரது கிளினிக் வந்தபோது, சுந்தரராஜுடன் நட்பானார். அதுதான் சுந்தரராஜ் வாழ்க்கையில் அரசியல் தாயம் விழுந்த தருணம்!

மந்திரி தந்திரி - 20 !

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். 'ஜெ’ அணி, 'ஜா’ அணி என அ.தி.மு.க இரண்டுபட்டுக் கிடந்தது. பஸ் கண்டக்டராக இருந்து எம்.எல்.ஏ-வான பாலுசாமிக்கு பரமக்குடியில் நல்ல செல்வாக்கு உண்டு. 'ஜா’ அணி அவரை தேர்தலில் நிறுத்த,  பாலுசாமியைவிட மக்கள் அபிமானம் அதிகம் உள்ளவரைத் தேடியது 'ஜெ’ அணி. ஒரே தேர்வாகத் தென்பட்டவர் சுந்தரராஜ். ராமகிருஷ்ணனின் ஆதரவும் கிடைக்க, ஒரு தடால் திருப்பத்தில் வேட்பாளர் ஆனார். தேர்தல் முடிவு மக்கள் டாக்டருக்கு 'மக்கள் பிரதிநிதி’ அந்தஸ்தை கொடுத்தது. 1991-ம் ஆண்டு தேர்தலிலும் சுந்தரராஜுக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்க, இரண்டாவது முறை எம்.எல்.ஏ ஆனார். இரண்டு பதவிக் காலங்களிலும் எம்.எல்.ஏ பந்தா இல்லாமல், தொகுதிக்குள் வலம்வந்தார் சுந்தரராஜ்.

அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் இருந்த சுந்தரராஜ், வேறு ஒரு வலையில் சிக்கினார். அவருடைய சமூகத்தினர் சுந்தரராஜைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ள, கட்சிக்காரர்கள்கூட அணுக முடியவில்லை. அவருடைய நடவடிக்கைகளிலும் ஏக மாற்றங்கள். 'தொகுதிக்குள் நமக்கு இருக்கும் நல்ல பெயரை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்ற அலட்சியம் 'பப்ளிக்’கிடம் இருந்து அவரை விலக்கியது. கட்சிக்குள்ளும் அவருக்கு ஆதரவு-எதிர்ப்பு கோஷ்டிகள் உருவாகின. இதனால் 1996-ம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட்டபோது, தோல்வியைத் தழுவினார் சுந்தரராஜ். அதுவும் மரண அடி. அந்தத் தேர்தலில் பரமக்குடி தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முனிசாமி என்பவரை சுந்தரராஜுக்கு எதிராக சுயேட்சையாக நிறுத்தினார்கள். தேர்தலில் தி.மு.க வேட்பாளர் திசைவீரன் ஜெயிக்க, முனிசாமி இரண்டாம் இடம் பிடிக்க, சுந்தரராஜோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.  

ஓடினார்... ஓடினார்... வாழ்க்கையின் ஓரத்துக்கே...

எம்.எல்.ஏ பதவியை இழந்ததைவிட சுயேட்சை வேட்பாளரைவிட குறைவான வாக்குகள் பெற்றது சுந்தரராஜை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தீவிர அரசியலில் இருந்து விலகினார். மீண்டும் பழையபடி கிளினிக் வந்து மருத்துவ சேவையில் மும்முரமானார். மக்களிடம் சரிந்த செல்வாக்கை மீட்க, ஆரம்பத்தில் என்ன செய்தாரோ அதையே மீண்டும் செய்தார். 'மனுஷன் திருந்திட்டாரோ’ என்ற பேச்சு கிளம்பியபோது, 2001-ம் ஆண்டு தேர்தல் வந்தது. ஆனால் தொகுதி, கூட்டணிக் கட்சியான த.மா.கா-வுக்கு ஒதுக்கப்பட, வெறுத்துப்போனார். அப்போது தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு வேர் பிடித்திருந்த கிருஷ்ணசாமியின் 'புதிய தமிழகம்’ கட்சியில் சேரலாமா என நலம் விரும்பிகளிடம் ஆலோசித்தார். 'அந்த எண்ணத்தைக் கைவிடு’ எனச் சொல்லி சுந்தரராஜை சமாதானப்படுத்தினார்கள்.  அன்றைக்கு சுந்தரராஜ் சமாதானம் ஆகாமல் இருந்திருந்தால், இன்றைக்கு சிவப்பு விளக்குச்  சுழலும் காரில் வலம் வந்திருக்க முடியாது.

சட்டமன்றத் தேர்தல்தானே சிக்கலாக இருக்கிறது என உள்ளாட்சித் தேர்தலில் பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அளவுக்கு இறங்கிவந்தாலும், விதி இரக்கம் காட்டவில்லை. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எந்த திசைவீரனிடம் தோற்றாரோ அவரிடமே கவுன்சிலர் தேர்தலிலும் தோற்றார் சுந்தரராஜ். அரசியல் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடும் அளவுக்குச் சோகம். ஒன்றிய கவுன்சிலராகக்கூட வெற்றிபெற முடியாத சுந்தரராஜ், இனி அரசியலில் நிலைத்திருப்பது கஷ்டம்தான் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால், சுந்தரராஜ்  அதன் பின்தான் 'புதுப் பாதை’யில் பயணிக்கத் திட்டமிட்டார். அதுவரை தொகுதியில் நற்பெயர் என்ற அஸ்திரத்தை மட்டுமே நம்பியிருந்தவர், 'மன்னார்குடி முகாம்’ மீது பற்றுவைத்தார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கவுன்சிலர் தேர்தலிலேயே தோற்றவருக்கு, தேர்தல் ஸீட் கிடைத்ததே வெற்றிதான். ஆனால், தேர்தலில் வெற்றி கிட்டவில்லை. மூன்றாவது தோல்வி!

மந்திரி தந்திரி - 20 !

இருந்தாலும் கட்சி அவரைக் கைவிடவில்லை. மாவட்டப் பொருளாளர் பதவி கிடைக்க, கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் அட்டெண்டன்ஸ் போட்டார். 'மன்னார்குடி’ ஆசீர்வாதத்தால்  2011-ம் ஆண்டு தேர்தலில் வாய்ப்புக் கிடைக்க... இந்த முறை தேர்தலில்  ஜெயம். வெற்றி தந்த உற்சாகம், 'ம’ சேனல் கொடுத்த ஊக்கம்...  அமைச்சர் பதவியைப் பிடிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கான பிரதிநிதித்துவமாக சங்கரன்கோவில் எம்.எல்.ஏ கருப்பசாமி அமைச்சர் ஆக்கப்பட்டார். அமைதியானார் சுந்தரராஜ். திடீரென அமைச்சர் கருப்பசாமி நோய்வாய்ப்பட்டு இறக்க, சுந்தரராஜ் கேபினெட்டில் இடம் பிடித்தார். ஆனால், மருத்துவராக இருந்தபோதும் அவருக்கு சுகாதாரத் துறை கிடைக்கவில்லை. முதலில் கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டவர், பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டார்.

துறையில் சாதித்தது என்ன?

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் என்ன செய்தார்? 'மத்திய ஜவுளித் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது, நமது பருத்தியைக் கொள்முதல் செய்யாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டம் வகுத்ததால், நூல் விலை உயர்ந்தது’ எனச் சொன்னார் சுந்தரராஜ். ஆனால், துறை அமைச்சராக நூல் விலையைக் குறைக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 3.19 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். மாநிலத்துக்கு வருவாய் ஈட்டிக்கொடுப்பதிலும் ஜவுளித் தொழில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், துறை வளர்ச்சிதான் மினுமினுப்பாக இல்லை. பின்னலாடைத் தொழிலில் சாயக்கழிவு பிரச்னை தீர்க்கப்படாத தலைவலியாக இருக்கிறது. சாயக்கழிவை குழாய் மூலம் கடலில் கலக்கச்செய்யும் 200 கோடி ரூபாய் திட்டம் கிடப்பில் பத்திரமாக இருக்கிறது. காஞ்சிபுரம் நெசவாளர்களுக்காக பட்டுப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் நிலையும் அதே!

நெசவாளர்கள் நிறைந்த பகுதி பரமக்குடி. அங்கே நெசவுத் தொழிலுக்கோ அல்லது நெசவாளர்களுக்கோ சுந்தரராஜ் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதையும் செய்துவிடவில்லை. கூலித் தொழிலாளர்களாக தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்ளவில்லை. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அவலம் 'மண்ணின் மைந்தர்’ சுந்தரராஜ் காலத்திலும் தொடர்ந்தது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு கைத்தறித் தொழிற்சாலைகளில் நவீன முறைகள் ஏற்படுத்தப்படவில்லை. சொல்லப்போனால், 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. பல தறித் தொழிற்சாலைகள் வங்கியில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல் ஏலத்துக்கு வந்தன. பல மாவட்டங்களில் தறிகள் போட்டு இயங்கிக்கொண்டிருந்த ஆலைகள் இழுத்து மூடப்பட்டன.

தறித்தொழில் மற்றும் ஜவுளித் துறை எத்தனையோ நவீன மாற்றங்களைக் கண்டு அசுர வேகத்தில் முன்னேறிவிட்டன. ஆனால், தமிழ்நாடு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தறித் தொழிற்சாலைகளில் மட்டும் இன்னும் விசைத்தறிகூட அமைக்கப்படாமல் பழைய முறைகளில் நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது. நெசவுத் தொழில் அதிகம் நடைபெறும் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், கைத்தறி நெசவாளர் பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக 92.19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதுவும் கிணற்றில் போட்ட கல்தான். ஜவுளித் தொழிலில் தனியாரும் வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளூரை உற்பத்திக்கூடமாகவும் சந்தையாகவும் பயன்படுத்தி லாபத்தில் கொழித்துக்கொண்டிருக்கின்றனர். 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என 2013-ம் ஆண்டு அறிவித்தார் ஜெயலலிதா. அப்போது சுந்தரராஜ் தான் அந்தத் துறைக்கு அமைச்சர். வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு மட்டும் நடந்தது. அறிவிப்பின் கதி என்ன எனத் தெரிவதற்குள், சுந்தரராஜ் துறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு, தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்கவும் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டதுதான் 'இலவச வேட்டி-சேலைத் திட்டம்’. பொங்கலை ஒட்டி 3.5 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டத்தில் ஏகத்துக்கும் தில்லுமுல்லுகள் அரங்கேறின. கேரளா திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோயில் வாசலில் உள்ள தனியார் கடைகளில் தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி-சேலைகளின் விற்பனை சக்கைபோடு போட்டது. ஏழைகளுக்கு விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட வேட்டி-சேலைகள் பொள்ளாச்சியிலும் கடை விரிக்கப்பட்டன. கும்பகோணத்தில் பழைய துணி வியாபாரிகளிடம் அரசின் இலவச வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் இந்தத் திட்டத்தின் மோசடி வியூகத்தை வெளிச்சமிட்டுக் காட்டின. அப்போது அந்தத் துறையைக் கவனித்த அமைச்சரின் முகத்தையும் சேர்த்துதான்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை!

 Click to enlarge the image

மந்திரி தந்திரி - 20 !

'தேசிய வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்துக்கும் விளையாட்டு ஒரு சக்திமிக்க கருவி. அதேபோல ஒரு நாட்டின் வலிமைமிக்க தூண்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதத்தினர் இளைஞர்கள்’ என்கிறார் சுந்தரராஜ். ஆனால், அந்தச் சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த,  அமைச்சருக்கு ஐடியாவே இல்லை.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தன்னார்வத் தொண்டர்களைக்கொண்டது நாட்டு நலப்பணித் திட்டம். தமிழ்நாட்டில் 3.70 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். இதேபோல் தேசிய மாணவர் படையில் சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த இளைஞர் சக்தியை அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை. நீர்நிலைகள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல், போக்குவரத்து சரிசெய்தல், தேர்தல் விழிப்புஉணர்வு... என எத்தனையோ விஷயங்களுக்கு இந்த மாணவர்களைப் போதுமான அளவில் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சர் எதற்காகவும் அலட்டிக்கொள்ளவில்லை. நாட்டு நலப்பணித் திட்டத்துக்காக, மத்திய அரசு அளித்துவந்த ஊக்கத்தொகையைப் பாதியாகக் குறைக்கும் முயற்சி நடந்துவரும் நிலையில்கூட, சுந்தரராஜ் அதற்காகக் குரல்கொடுக்கவில்லை. அமைச்சரின் வேலையை எதிர்க்கட்சிகள்தான் செய்தன. இந்தியாவிலேயே விளையாட்டுக்கான தனிப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், அந்தப் பல்கலைக்கழக ஊழியர்கள் பல  பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். முக்கியமாக பெண் ஊழியர்கள்.

'வீரத்தின் விளைநிலம்’ என மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டில், விளையாட்டை ஊக்குவிக்க போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், 234 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. 1993-ம் ஆண்டில் இந்தச் சாதனையைப் படைத்தவர் ஜெயலலிதா. ஆனால், அந்த வேகத்தில் நூறில் ஒரு சதவிகிதம்கூட சுந்தரராஜால் தக்கவைக்க முடியவில்லை. இதன் அருகில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கமும் சேர்த்து விளையாட்டுக்குப் பயன்படுவதைவிட, கலை மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தவே அதிகம் பயன்படுகிறது. தனியார் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வாடகைக்கு விடப்படுவதால், மைதானத்தில் உள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதைகள், சேதப்படுத்தப்படுவதாகப் புகார் வாசிக்கிறார்கள் விளையாட்டு வீரர்கள். விளையாட்டு நிகழ்ச்சிக்காக இந்த ஸ்டேடியத்துக்குள் இந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஜெயலலிதா வரவில்லை. சினிமா நூற்றாண்டு விழாவுக்காகவே வந்து-போனார். அவர் வருகைக்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தைப் புதுப்பித்தார்களே தவிர, விளையாட்டு வீரர்களுக்கு எந்த வசதியும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த அளவுக்குத்தான் விளையாட்டுத் துறையில் அரசு அக்கறை காட்டுகிறது.

விளையாட்டுத் துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. விளையாட்டு ஆணைய மையங்கள், வாய்ப்புகளை வழங்கக் காத்திருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் இருந்த விளையாட்டு மைதானங்களே, காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன. பல பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட விளையாட்டு மைதானங்களே பறித்துக்கொள்ளப்படுகின்றன. சென்னையில் 80 சதவிகிதப் பள்ளிகளில் மைதானங்களே கிடையாது என்கிறது ஓர் அதிர்ச்சிப் புள்ளிவிவரம்.

மந்திரி தந்திரி - 20 !

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்தவோ, உடற்கல்வி ஆசிரியர்களைப் போதுமான அளவில் நியமனம் செய்து, உடற்கல்வியை வலுப்படுத்தவோ எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு எல்லாம் உடற்கல்வி என்பது பெயர் அளவுக்கே இருக்கிறது. மூன்று பள்ளிகளுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்ற பற்றாக்குறையில்தான் சவலைப்பிள்ளையாக இருக்கிறது உடற்கல்வி. உடற்கல்வி இயக்குநர் பதவியும் குறைவாக இருப்பதால், அவர்கள் செய்யவேண்டிய வேலைகளை உடற்கல்வி ஆசிரியர்களே செய்துவருகின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தன்வசம் உள்ள நீச்சல் குளத்துக்கே போதிய பயிற்சியாளர்களை இன்னும் நியமிக்கவில்லை என்கிறார்கள். 'ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் பதக்கம் வென்றால், இரண்டு கோடி ரூபாய் பரிசு’ எனச் சொல்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், பதக்கம் வெல்லும் அளவுக்குப் பயிற்சி எடுக்க வேண்டுமே! அதற்கான வசதி வாய்ப்புகளை விளையாட்டுத் துறை உருவாக்க வேண்டுமே! அட... ஒலிம்பிக் வரை ஏன் செல்ல வேண்டும்? ஏகப்பட்ட திறமை இருந்தும் தேசிய அளவிலான போட்டிகளிலேயே சில நொடி, சில தப்படி வித்தியாசங்களில் நம் வீரர்கள் வெற்றிக்கோட்டை இழக்கிறார்களே! இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வது எப்படி? தமிழ்நாடு அரசே ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தி, ஒலிம்பிக் என்பதற்குப் போட்டியாக 'கிலிம்பிக்’ பதக்கம் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதோ என்னவோ!

மருத்துவராக இருந்தபோது பரபரப்பாக இருந்த அமைச்சர் சுந்தரராஜ், இப்போது அமைச்சராக என்னதான் செய்கிறார்?  'உங்கள் இருப்பிடமே எங்கள் கோயில். உங்கள் புன்னகையே எங்கள் பிரசாதம். உங்கள் வார்த்தைகளே எங்கள் வரம்’ என 'அம்மா’ புகழாரம் பாடிக்கொண்டிருக்கிறார். அது அவரைக் காப்பாற்றலாம். ஆனால், இளைஞர் நலனைக் காக்க முடியாது! 

கீறல் விழுந்த ரெக்கார்டு!

நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுவதில் அப்படி என்னதான் ஆர்வமோ? ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இருந்தாலும், அனைத்திலும் ஆஜர் போடுவார் சுந்தரராஜ். அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஒரே விஷயத்தைப் பேசி, கடுப்பும் ஏற்றுவார். இதனால் அமைச்சரின் உரை தொகுதி மக்களுக்கு மனப்பாடம்.

''அண்ணே... நான் சாதாரணமானவன்!''

** தன்னைச் சந்திக்கும் இளம் அதிகாரிகளைக்கூட,  'சொல்லுங்க அண்ணே’, 'சொல்லுங்க சார்’ என மரியாதையாகத்தான் அழைப்பார். இதனால் சமயங்களில் அமைச்சர் கிண்டலுக்கு ஆளானாலும், 'அது’ தன் பலம் என நம்புகிறார் சுந்தரராஜ்.

** தொகுதிக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கசங்கிய வேட்டி- சட்டையுடன்தான் செல்வார். யாராவது கேட்டால், 'நான் சாதாரணக் குடும்பத்துல இருந்து வந்தவன்தாங்க’ எனப் பதில் கொடுப்பார்.

** அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தபோதும், சுந்தரராஜை அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களே அவ்வளவாக மதிப்பது இல்லை. மாவட்ட நிகழ்ச்சிகளில்கூட மாவட்ட அமைச்சருக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. அவரும் அதைக் கண்டுகொள்வது இல்லை. இதனால் பக்கத்து மாவட்ட அமைச்சர்கள்கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி அரசியல் நடத்துகிறார்கள்!

புறக்கணிக்கப்படும் ராமநாதபுரம்!

'வறட்சி மாவட்டம்’ என்ற அடைமொழியை காலங்காலமாகத் தாங்கி நிற்கிறது ராமநாதபுரம் மாவட்டம். தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தின் சூழலை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும், மாவட்ட அமைச்சர் சுந்தரராஜ் எடுக்கவில்லை. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, அக்னி தீர்த்தக் கடற்கரை, சங்குமால் கடற்கரை, தேவிபட்டினம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி என முக்கியப் பகுதிகளை உள்ளடக்கி ராமேஸ்வரம் தீவு பகுதி வளர்ச்சிக்காக 'மெகா சுற்றுலா வளர்ச்சித் திட்டம்’ ஒன்றை உருவாக்கினார்கள். அதை  நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அமைச்சருக்கு ஆர்வம் இல்லை.

ரியல் புயல்!

மருத்துவராக இருந்து மந்திரியாக மாறிய சுந்தரராஜ்,  இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் பிஸி. நயினார்கோவில் அருகே 'டாக்டர் சுந்தரராஜ் நகர்’ என்ற பெயரில் ஒரு நகரை உருவாக்கி, பிளாட் போட்டு விற்பனை செய்கிறார். அவரது குடும்பத்தினர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார்கள். இந்தப் பள்ளிக்குப் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ ராம்பிரபுவுக்கும், அமைச்சரின் மனைவி சரோஜினி தேவிக்கும் பிரச்னை எழுந்து போலீஸ் தலையீடு வரை போனது.

மந்திரி தந்திரி - 20 !

கல்வீச்சு... களேபரப் பேச்சு!

கமுதி அருகே புல்வாய்குளம் கிராமத்தில் கட்சிக்காரர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குப் போனார் சுந்தரராஜ். அருகில் உள்ள கோயிலில் தடபுடல் விருந்து நடந்துகொண்டிருந்தது. அங்கேயும் விசிட் அடித்த சுந்தரராஜ் திருக்கோயில் அன்னதானத் திட்டம் பற்றி பெருமை பேசிவிட்டு, 'இங்கே நடைபெறும் அன்னதானத்துக்கு அம்மாதான் காரணம்’ எனச் சொல்லிவிட, பணம் செலவழித்து அன்னதானம் ஏற்பாடு செய்தவர்கள் கொந்தளித்தார்கள். கூட்டத்தில் கற்கள் வந்து விழ, அவசர அவசரமாக வெளியேறி தப்பித்தார் அமைச்சர்.

ஒருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்க ஆர்.எஸ்.மங்களம் பகுதிக்குச் சென்றார் சுந்தரராஜ். அப்போது விழா நடக்கும் இடத்துக்கு மிக அருகே துக்க வீடு இருந்திருக்கிறது. இதை அறிந்த அதிகாரிகள் விழாவை நிறுத்த முயன்றனர். ஆனால், அமைச்சர் விடாப்பிடியாக விழாவில் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார். இதனால் நிலைமை ரசாபாசமாக, அமைச்சரைப் பத்திரமாக வெளியேற்றுவதற்குள் அதிகாரிகள் நொந்து நூலாகிவிட்டனர்.

உள்ளூர் 'அம்மா’!

மந்திரி தந்திரி - 20 !

அமைச்சரின் துறையில் காரியம் சாதிக்க நினைத்து யாராவது அமைச்சரை அணுகினால், 'அம்மாவைப் போய்ப் பாருங்க’ என்பார்கள். 'அம்மாவைப் பார்க்க முடிந்தால் நாம் ஏன் இவரிடம் வரப்போகிறோம்?’ என வந்தவர்கள் திகைத்து நிற்பார்கள். ஆனால், அமைச்சர் சொல்லும் கட்சித் தலைவி 'அம்மா’ அல்ல... சுந்தரராஜன் மனைவி மருத்துவர் சரோஜினி தேவி. இந்த 'அம்மா’வின் கெடுபிடிகளுக்கு சொந்தக் கட்சிக்காரர்கள், சொந்தபந்தங்கள் என யாரும் தப்ப முடியாது.  

இப்போது மீனாட்சி மருத்துவமனையை சரோஜினி தேவிதான் நடத்திவருகிறார். மீனாட்சி மருத்துவமனையில் அரசு விதிகளுக்கு முரணாக 'முதலமைச்சரின் விரிவடைந்த காப்பீட்டுத் திட்டத்துக்கு’ அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்ற புகார் றெக்கை கட்டிப் பறக்கிறது.

அமைச்சரின் நிழல்!

சுந்தரராஜ் அமைச்சர் ஆனதும் அவருடைய சகலை கிருஷ்ணகுமார் அவருக்கு பி.ஏ ஆகிவிட்டார். பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார் விவரம் அறிந்தவர். அமைச்சரின் துறையில் நடக்கும் எந்த நிகழ்வும் கிருஷ்ணகுமாரின் கண் அசைவோடுதான் நடக்கும். சொந்தத் தொகுதியில் வசிக்கும் நெசவாளர்களுக்கு அரசு வழங்கிய மானியத் தொகையில் கிருஷ்ணகுமாரின் பெயர் அடிபட்டது.